Show all

இலங்கையில் சேனை குவிப்பு! தற்போது போராடுவது சிங்களப் பேரின மக்கள்

நேற்று இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே வீட்டிற்கு முன்பாக மக்கள் குவிந்து போராட்டம் நடத்தினார்கள். மக்கள் புரட்சி வெடிக்கும் அளவிற்கு அங்கு மக்கள் சாலையில் இறங்கி கடுமையாக போரட்டங்களை செய்து வருகிறார்கள். ராஜபக்சேவின் மொத்த குடும்பமும் பதவி விலகிட வேண்டும் என்று அந்தக் குடும்பத்தை இதுவரை ஆதரித்து வந்த சிங்கள பேரின மக்களே போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

18,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே வீட்டிற்கு முன்பாக மக்கள் குவிந்து போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று மாலை தொடங்கிய போராட்டம் இலங்கை முழுக்க பல்வேறு நகரங்களுக்கு பரவி உள்ளது. 

கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது இலங்கையில். இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 207.00 ரூபாயாக உள்ளது. சில இடங்களில் இது 250 ரூபாயை தாண்டி விற்கிறது 

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு மின் தடையும் ஏற்பட்டுள்ளது. மின் உற்பத்தி நிலையங்களை இயக்க அங்கு போதிய நிலக்கரி இல்லை. மேலும் இலங்கையின் அந்நிய செலவாணி கையிருப்பு அதள பாதாளத்திற்கு சென்று உள்ளது. கட்டாயத்தேவை பொருட்களைக் கூட இறக்குமதி செய்ய இலங்கையில் போதிய நிதி இல்லாத கடுமையான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் இலங்கையில் ஆளும் அரசை எதிர்த்து கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்த போராட்டங்கள் நடந்து வந்தாலும் நேற்று முதல் போராட்டம வலுப்பெறத் தொடங்கியுள்ளது. நேற்று இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே வீட்டிற்கு முன்பாக மக்கள் குவிந்து போராட்டம் நடத்தினார்கள். 

ராஜபக்சே வெளியேறு! மகிந்தா ராஜபக்சே வெளியேறு! கோத்தபய ராஜபக்சே வெளியேறு என்று முழக்கம் எழுப்பி போராட்டம் செய்தனர். 

தலைமைஅமைச்சர் மகிந்தா, அதிபர் கோத்தபய, வேளாண்துறை அமைச்சர் சமால், மற்றும் அமைச்சர் பேசில் ஆகிய மொத்த ராஜபக்சே குடும்பமும் பதவி விலக வேண்டும் என்று கூறி அங்கு போராட்டம் நடைபெற்றது. 

இதையடுத்து அங்கு குவிக்கப்பட்ட காவல்துறையினர் மற்றும் அவசர கால சேனையினர் தண்ணீர் புகை குண்டுகளை வீசி மக்களை கலைத்தனர். சிலரின் மீது அங்கு தடியடியும் நடத்தப்பட்டது. அங்கு துணை சேனைப்படை, சிறப்பு சேனைப்படை குவிக்கப்பட்டுள்ளது. இலங்கை முழுக்க இனி மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மக்கள் புரட்சி வெடிக்கும் அளவிற்கு அங்கு மக்கள் சாலையில் இறங்கி கடுமையாக போரட்டங்களை செய்து வருகிறார்கள். ராஜபக்சேவின் மொத்த குடும்பமும பதவி விலகிட வேண்டும் என்பதே தற்போது மக்களின் குறிக்கோளாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 

பல்வேறு சாலைகளில் எண்ணெய் இல்லாமல் அரசு பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு உள்ளன. தனியார் பேருந்துகளும் இயங்கவில்லை. மின்சார தடை 10 மணி நேரத்தில் இருந்து பல இடங்களில் 13 மணி நேரமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் சாலை விளக்குகள் அங்கு மொத்தமாக அணைக்கப்பட்டு உள்ளது. அதேபோல் அங்கு மருத்துவமனைகளிலும் கடுமையான மருந்து தட்டுப்பாடு உள்ளது. 

பல இடங்களில் சாதாரண மருந்துகள் கூட இல்லை என்ற நிலை நிலவுகிறது. இதனால் கொழும்பில் பெரிய மருத்துவமனைகள் பலவற்றில் அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,205.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.