Show all

ஏர் இந்தியா நிறுவனம்! நல்ல நிலையில் இயக்க முடியும் என்ற நம்பிக்கைக்கும், இயக்க முடியாமல் இருந்த நிலைக்குமான புள்ளி

ஒன்றிய அரசு ஏர் இந்தியா விமான நிறுவனத்தை எவ்வளவு மோசமாக இயங்கியது என்பதற்கான அடையாளமே- கடந்த பதினான்கு ஆண்டுகளாக இந்த நிறுவனம் லாபமே ஈட்டவில்லை என்கிற செய்தியாகும்.

23,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: ஏர் இந்தியா நிறுவனம், டாட்டா குழுமத்தால், இந்திய விடுதலைக்குப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்தியா விடுதலை அடைந்த பிறகு ஏர் இந்தியாவின் 49விழுக்காட்டு பங்குகளை அப்போதைய ஒன்றிய அரசு வாங்கியது

மீண்டும் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு டாடாவிடம் இருந்த மீதி பங்குகளையும் இந்தியா ஒன்றிய அரசு வாங்கி இந்த விமான சேவையை ஒன்றியப் பொறுப்பு ஆக்கியது.

அடுத்த சில ஆண்டுகளில் இந்த சேவை இந்திய வானில் ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஏர் இந்தியா இழப்புகளை குறைப்பதற்காக, உள்நாட்டு விமான சேவை வழங்கும் நிறுவனமான இந்தியன் ஏர்லைன்சுடன் இணைக்கப்பட்டது. ஆனால் ஒன்றிய அரசு விமான நிறுவனத்தை எவ்வளவு மோசமாக இயங்கியது என்பதற்கான அடையாளமே- கடந்த பதினான்கு ஆண்டுகளாக இந்த நிறுவனம் லாபமே ஈட்டவில்லை என்கிற செய்தியாகும்.

கடந்த பத்து ஆண்டுகளாக இந்த நிறுவனத்தை நடத்த ஒன்றிய அரசு 1.1 லட்சம் கோடிக்கு மேல் நேரடியாக இழப்பை ஈடுசெய்ய அல்லது கடன்களை திரட்ட செலவழித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு முந்தைய நிலவரமாக ஏர் இந்தியாவின் கடன் 61,562 கோடியாகும். மேலும் ஏர் இந்தியா செயல்பாட்டில் இருக்கும் ஒவ்வொரு நாளும் அரசுக்கு கூடுதலாக ரூ.20 கோடி வரை நட்டம் ஏற்படுமாம். 

ஒன்றிய அரசின் பங்குகளை குறைப்பதற்காக முதன்முறையாக இருபது ஆண்டுகளுக்கு முன்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போதைய ஒன்றிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் கீழ் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 40விழுக்காட்டு பங்குகளை விற்க முயற்சி மேற்கொண்டு தோல்வி அடைந்தது. 

மூன்று ஆண்டுகளுக்கு முன்பும் அரசு பங்குகளை விற்க மோடி தலைமையிலான அரசு முயற்சி மேற்கொண்டது. ஆனால் 76விழுக்காட்டுப் பங்குகளை விற்க முயற்சி மேற்கொண்டது. ஆனால் அது தொடர்பான ஒரு விடையத்தையும் பாஜக அரசு வெளிப்படுத்தவில்லை.

இறுதியாக கடந்த ஆண்டும் ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் விமான நிறுவனத்தின் பங்குகளை விற்பதில் முதன்மையான ஒரு தடை இருந்தது. அரசு 24 விழுக்காட்டு பங்குகளை தம் வசமே வைத்துக் கொள்வது என்கிற நிலையில் விமான நிறுவனத்தை வாங்க தனியார் நிறுவனங்கள் அதில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. அதனால் இந்த முறை ஒன்றிய அரசு தனது பங்குகளில் நூறு விழுக்காட்டையும் விற்பனைக்கு வைத்தது.

விமான நிறுவனத்தின் பங்குகளை வாங்கும் நிறுவனம் கடன் தொகைக்கும் பொறுப்பேற்கும் என்று ஒன்றிய அரசு எதிர்பார்த்தது. ஆனால் அந்த அணுகுமுறை முறையாக வேலை செய்யவில்லை. அதனால் இம்முறை அரசாங்கம், ஏலம் எடுக்கும் நபர்களால் எவ்வளவு கடன் தொகையை ஈடு செய்யும் என்பதை அந்த நிறுவனமே முடிவு செய்து கொள்ளலாம் என்று அறிவித்தது. இந்த உறுதிப்பாட்டில்தான் டாட்டா நிறுவனம் தான் உருவாக்கிய நிறுவனம் என்ற வகையில் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்கிக் கொள்ள ஒப்புக் கொண்டுள்ளது.

ஏர் இந்தியாவின் மொத்த கடன் தொகை ரூ. 61,562 கோடியாகும். இதில் டாட்டா 15,300 கோடி கடனை ஏற்றுக் கொள்கிறது. அரசாங்கத்திற்கு கூடுதலாக ரூ. 2700 கோடியை டாட்டா நிறுவனம் அளிக்கும். ஆனாலும் மீதம் 43,562 கோடி கடன் இருக்கும். கட்டடங்கள் போன்று அரசாங்கத்திடம் எஞ்சியுள்ள சொத்துக்கள் மூலம் ரூ. 14,718 கோடியை உருவாக்க இயலும். ஆனாலும் கூட ரூ .28,844 கோடி கடனை அரசாங்கம் செலுத்தும் நிலையை இந்த விற்பனை  உருவாக்கும்.

தனியார் நிறுவனமான டாட்டா 15300 கோடி கடனையும் ஒப்புக் கொண்டு இந்த நிறுவனத்தை இலாபமாக இயக்க முடியும் என்று துணிகிற நிலையில், தனியாருக்கு விமான நிறுவனத்தை விற்பனை செய்த பிறகும் கடனுக்கு பொறுப்பேற்பதற்கு பகரமாக அரசாங்கம் ஏர் இந்தியாவை சிறப்பாக இயக்கி இருந்தால் லாபம் சம்பாதித்து கடன்களை அடைத்திருக்கலாம் என்று, கூலி வேலையில் பிழைப்பு நடத்தும் எளிய பாமரன் கூட எள்ளி நகையாடுவது போதாது! இது போன்ற அரசை தொடர்ந்து நாம் தேர்ந்தெடுக்க வேண்டுமா? என்று சிந்திக்கவும் வேண்டும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,031.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.