Show all

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்குத் தலைவலியாகியுள்ள பாஞ்சீர் போராளிகள்! 600 தாலிபான்களை ஒரே நாளில் சுட்டுக் கொன்றுள்ளனர்

600 தாலிபான்களை ஒரே நாளில் சுட்டுத்தள்ளியும், 1000 தாலிபான்களை சிறைப்பிடித்தும் உள்ள நிலையில், ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்குத் தலைவலியாகியுள்ளனர் பாஞ்சீர் போராளிகள்.

20,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: பாஞ்சீர் மலைப்பாங்கான பகுதியாகும். அந்த மலைப்பாங்கே, மண்ணிண் மைந்தர்களான பாஞ்சீர் போராளிகளுக்குப் பெரிதும் கைகொடுப்பதால், அப்பகுதியில் தாலிபான்களின் ஊடுருவல் முயற்சி தொடர்ந்து முறியடிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 20 ஆண்டுகளில் ஆப்கன் - அமெரிக்க படைகளாலேயே தாலிபான்களின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வர முடியாத நிலையில் ஆப்கனை விட்டு வெளியேறியது அமெரிக்க படை. பத்தே நாட்களில் காபுலை கைப்பற்றி ஒட்டுமொத்த ஆப்கானையும் தங்களின் ஆதிக்கத்துக்குள் கொண்டு வந்தனர் தாலிபான்கள்.

ஆனால் அப்படிப்பட்ட தாலிபான்களையே ஓடவிட்டுள்ளனர் பாஞ்சீர் போராளிகள். ஆப்கனின் 34 மாநிலங்களில் ஒன்றாக விளங்கும் இந்த பள்ளத்தாக்கில் அகமது மசூத் தலைமையிலான போராளிகள் சீற்றத்துடன் எதிர்ப்பை வெளிப்படுத்தி ஆப்கன் மண்ணில் தாலிபான் எதிர்ப்பை உயிர்ப்போடு வைத்திருக்கின்றனர்.

சோவியத் ஒன்றியத்தின் ஊடுருவலை முறியடித்தவரும், தாலிபான் எதிர்ப்பு போராளியுமான அகமதுசா மசூத்தின் மகன் தான் அகமது மசூத். இவரின் தலைமையின் கீழ் தான் தற்போது தாலிபான்களுக்கு எதிரான போரை எதிர்ப்புப் படையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

காபுலை கைப்பற்றி இருபது நாட்களைக் கடந்த நிலையிலும் ஆப்கனில் ஆட்சி அமைப்பதை தாலிபான்கள் ஒத்திவைத்துள்ளனர். இதற்கு பாஞ்சீர் போராளிகளின் எதிர்ப்பும் ஒரு முதன்மைக் காரணம் என்று பேசப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பாஞ்சீர் மாநிலத்தைக் கைப்பற்றும் வகையில் தாலிபான்கள் கடுமையாக போராடி வருகிறார்கள். இருப்பினும் மண்ணிண் மைந்தர்களான பாஞ்சீர் போராளிகளின் வேகம் குறையாத போராட்டமும், அந்த பகுதியின் மலைப்பாங்கான அமைப்பும் அவர்களுக்கு கைகொடுப்பதால் தாலிபான்களின் ஊடுருவல் முயற்சி தொடர்ந்து முறியடிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே கடந்த 2 நாட்களாக பல்வேறு மாநிலங்களில் இருந்தும் படைகளை குவித்த தாலிபான்கள் தற்போது பாஞ்சீர் போராளிகளுக்கு கடுமையான அறைகூவல் அளித்து போராட்டத்தை தொடங்கி உள்ளனர். தாலிபான்களின் கை சற்று ஓங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

அதே நேரத்தில் நேற்று காலை முதல் நடைபெற்று வரும் போரில் சுமார் 600 தாலிபான்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், சரணடைந்தவர்கள் உட்பட 1000 தாலிபான்கள் சிறைபிடிக்கப்பட்டிருப்பதாகவும் பாஞ்சீர் போராளிகளின் செய்தித் தொடர்பாளரான பகிம் தஷ்தி தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், பாஞ்சீர் மாநிலத்தின் 7 மாவட்டங்களில் நான்கைக் கைப்பற்றிவிட்டதாக தாலிபான் செய்தித்தொடர்பாளர் பிலால் கரிமி தெரிவித்திருக்கிறார். பாஞ்சீர் போராளிகளின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அந்த பகுதியை பொருளாதாரப்பாடாக முடக்கி வைத்திருக்கின்றனர் தாலிபான்கள். அங்கு மின்சாரமும், உணவு கிடைத்தலும் துண்டித்து வைக்கப்பட்டிருப்பதால பாஞ்சீர் போராளிகளின் எதிர்ப்பு இன்னும் எத்தனை நாட்கள் நீடிக்கும் என்ற கேள்விக்குறி ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், உலக நாடுகள் பாஞ்சீரிகளுக்கு உதவ வேண்டும் என்று பாஞ்சீர் போராளிகள் உலக நாடுகளை நோக்கி கோரிக்கை விடுத்துள்ளனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,70,997.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.