Show all

உலகளாவிய கண்டனங்களுக்குள்ளாகி வருகிறது! இலங்கையில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிற இலங்கையில் நடத்தப்பட்டு வரும் மக்கள் போராட்டத்தின் மீது காவல்துறையினர் முன்னெடுத்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியாக்கப்பட்டது உலகளாவிய கண்டனங்களுக்குள்ளாகி வருகிறது.

07,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: அண்டை நாடான இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவளி ஆகியவற்றை வாங்க முடியவில்லை. அதனால் அந்த பொருட்கள் கிடைக்காமல் மக்கள் திண்டாடுகிறார்கள். 

மின்சாரத் தட்டுப்பாடு காரணமாக நீண்ட நேரம் மின்வெட்டு நடைமுறைப் படுத்தப்படுகிறது. உணவு, மருந்துகள் மற்றும் கட்டாயத்தேவைப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.  அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக்கோரி, அவரது அலுவலகம் எதிரே ஒருகிழமைக்கும் மேலாக தொடர் போராட்டம் நீடித்து வருகிறது. மேலும், பல இடங்களில் தெருமுனை போராட்டங்களும் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில்,  இலங்கையின் கேகாலை மாவட்டம் ரம்புக்கன பகுதியில் இலங்கை அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் பலர் காயம் அடைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்த நிலையில், இந்த துப்பாக்கிச்சூட்டு அரசபயங்கரவாதம் தொடர்பாக காவல்துறையினர் விரிவான அறிக்கை அளிக்க இலங்கை மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இந்தத் துப்பாக்கிச்சூடு கொடுங்கோண்மைக்கு ஐநா கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகள்  கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இணையத்திலும் மனிதநேய ஆர்வலர்கள் தங்கள் கண்டனங்களைப் பதிவிட்டு வருகின்றனர். 

சிங்களப் பேரினவாதம் பேசி, பல்லாயிரம் தமிழர்கள் மீது கொடுங்கோண்மையை முன்னெடுத்து வந்த ஒற்றைக்குடும்ப ஆதிக்க அரசு, தற்போது தங்களை ஆட்சியில் அமர்த்திய சிங்களப் பொதுமக்கள் மீதே காவல்துறை வன்முறையைக் கட்டவிழ்த்துள்ளதே என்று இணையத்தில் ஆற்றமைப் பதிவுகள் வெளியாகி வருகின்றன. 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,224.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.