Show all

கொரோனா குறுவி உருவானது எங்கே! ஆதாரப்பாடாக கண்டுபிடிக்க இயலாமையை வெளிப்படுத்தியள்ளன, அமெரிக்க உளவு நிறுவனங்கள்

சீனாவின் ஊகான் குறுவி ஆய்வுக் கூடத்தில் இருந்து கொடிய கொரோனா குறுவி பரவியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், கொரோனா குறுவி உருவானது எங்கே என்று ஆதாரப்பாடாக கண்டுபிடிக்க இயலாமையை வெளிப்படுத்தியள்ளன, அமெரிக்க உளவு நிறுவனங்கள்

14,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: சீனாவின் ஊகான் குறுவி ஆய்வுக் கூடத்தில் இருந்து கொடிய கொரோனா குறுவி பரவியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியது. இது குறித்து ஆய்வு செய்ய புலனாய்வு அமைப்புக்கு அமெரிக்க அரசு உத்தரவிட்டது.

இந்த அமைப்பு, கொரோனா குறுவி, விலங்குகளிடம் தோன்றி மனிதர்களிடம் பரவியதா அல்லது சீனாவின் ஊகான் குறுவி ஆய்வுக் கூடத்தில் தோன்றியதா என ஆராய்ச்சி செய்தது. முதற்கட்ட ஆய்வறிக்கையை அமெரிக்க அரசிடம் அளித்தது. இதையடுத்து, தற்போது மேம்படுத்தப்பட்ட முழுமையான ஆய்வறிக்கை அமெரிக்க அரசிடம் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து அமெரிக்காவின் தேசிய புலனாய்வு துறை இயக்குனர் அலுவலகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா குறுவி இயற்கையாகவோ அல்லது சீன ஆய்வகத்தில் விலங்குகள் சோதனையில் கசிந்தோ பரவியிருக்கலாம் என்று கருத, போதுமான காரணங்கள் உள்ளன.

அதே நேரத்தில், இதனால்தான் கொரோனா பரவியது என உறுதியாக கூற முடியவில்லை. உயிரி ஆயுதமாக கொரோனா குறுவி உருவாக்கப்பட்டிருக்கலாம் என்ற வாதத்தையும் ஏற்க முடியாது. இது, ஊகான் கூடத்துடன் நேரடியாக தொடர்பு இல்லாதவர்களால் பரப்பப்படும் தவறான தகவல்.

இந்த ஆராய்ச்சியில் நான்கு உளவு நிறுவனங்கள் ஈடுபடுத்தப்பட்டன. அவற்றில் பெரும்பாலான நிறுவனங்கள், கொரோனா குறுவி இயற்கையாக உருவாகியுள்ளதாக திடமாக நம்புகின்றன. அதற்கேற்ப அண்மைக்காலமாக இந்தக் குறுவி எளிமையாக விலங்குகளிடம் பரவி வருகிறது. கொரோனா போன்ற ஒரு குறுவியால் பாதிக்கப்பட்ட ஒரு விலங்கிடம் இருந்து உருமாறிய கொரோனா பரவியிருக்கலாம் என்ற கருத்தை ஓரளவு நம்புவதாக உளவு அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

மற்றொரு உளவு அமைப்பு, ஊகான் ஆய்வுக் கூடத்தில் விலங்குகளின் சோதனையின் போது ஏற்பட்ட விபத்தில் கொரோனா பரவியிருக்கலாம் எனக் கூறியுள்ளது. புதிய தகவல்கள் ஏதுமின்றி கொரோனா எங்கிருந்து தோன்றியது என்பதைக் கூற முடியாது.

கொரோனா பரவலின் தொடக்கத்தில் ஆய்வு மாதிரிகள் சேகரித்து, குறுவியின் கொடிய தன்மையை புரிந்து கொள்ள பன்னாட்டு இயல்அறிவர்கள் (சயின்டிஸ்ட்) தவறி விட்டனர். அதனால் மேலும் வலுவான ஆதாரங்கள் கிடைக்காத பட்சத்தில், கொரோனா குறுவி எங்கிருந்து தோன்றியது என்பதை உறுதியாக கூற முடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,053.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.