Show all

வலியுறுத்தும் கட்சிகள்! மனிதனை மனிதனே சுமப்பதா? ஆதீனங்களைப் பல்லக்கில் தூக்கி செல்லும் நகர் உலா இனி வேண்டாம்

'பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே' என்பது பவணந்தி முனிவர் தமிழ் இலக்கண நூலான நன்னூலில் குறிப்பிடும் ஒரு நூற்பா ஆகும். அந்த வகையில் ஆதீன மன்னர்களை பல்லக்கில் சுமக்கும் நடவடிக்கைக்கு மாற்று தேவையே.

23,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: புதிய சொற்களும், புதிய பழக்க வழக்கங்களும் ஒருபால் இடம் பெற, தேவையற்றுப் போன பொருள்களும், அவற்றைக் குறிக்க வழங்கும் சொற்களும், பழக்க வழக்கங்களும் ஒருபால் வழக்கற்றுப் போதலும் நிகழும். உலகிய லுக்கும், உலகில் வழங்கும் இலக்கியங்கட்கும் உள்ள இவ்வுறவு முறையினை உணர்ந்தே

பழையன கழிதலும் புதியன புகுதலும்

வழுவல கால வகையி னானே

என்ற விதி வகுப்பாராயினர் இலக்கண ஆசிரியர்கள் என்று நாம் கொண்டாடி வருகிறோம்.

மனிதனை மனிதனே சுமப்பதா என்று, தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கி செல்லும் நகர் உலா இனி வேண்டாம் என்று சமுக நீதியை வலியுறுத்தும் கட்சிகளின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த ஆண்டு அந்த வகை நகர்உலாவிற்கு மாவட்ட ஆட்சியர் தடை விதித்து உத்தரவிட்டதை பாஜகவின் தமிழ்நாட்டுக் கிளை கட்சி சர்ச்சையாக்கி வருகிறது.

தருமபுர ஆதீனத்தின் மன்னராக திருவளர்திரு மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியர் பதவி வகித்து வருகிறார். இவரை பல்லக்கில் தூக்கி சென்று நகர்உலா மேற்கொள்வதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. 

இப்படி ஆதீனங்களில் மன்னரின் கோயில் வழிபாட்டிற்காக பல்லக்கில் தூக்கி செல்வது பல நூறு ஆண்டுகளாகத் தொடரும் வழக்கம் ஆகும். இந்த நடைமுறையை விசிக, திக உள்ளிட்ட கட்சிகளும் பல்வேறு சமூக நீதி அமைப்புகளும் இதை கடுமையாக எதிர்த்து உள்ளனர். இந்நிலையில் தற்போது இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தப்பாட்டில் பாஜகவை சேர்ந்த நாராயண் திரிப்பாதி, எச். ராஜா போன்றவர்கள் போப்கள் பல்லக்கில் செல்வதை அரசு எதிர்க்குமா என்று கேள்வி எழுப்பி உள்ளனர். அதாவது ஆதீனம் பல்லக்கில் செல்வதை எதிர்ப்பவர்கள் போப்பை எதிர்பார்களா என்ற கேள்வி எழுப்பியுள்ளனர். போப்பை பல்லக்கில் தூக்கி செல்லும் நிகழ்வை பிற்போக்கு தனமானது என்று விசிக, திமுக மூலம் சொல்ல முடியுமா? அவர்களுக்கு சிறுபான்மையினர் வாக்குகள் தேவை. அதனால் அப்படி சொல்ல மாட்டார்கள். என்று விமர்சனம் வைத்துள்ளனர். 

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர்தான் போப். இவரை பல்லக்கில் சுமந்து செல்லும் முறைக்கு பெயர் செடியா கெஸ்டாட்டோரியா என்பது. இதன் பொருள், தூக்கி செல்லும் நாற்காலி என்பது ஆகும். ஒப்பனைகளுடன் இந்த இருக்கை வடிமைக்கப்பட்டு இருக்கும். இதன் மீது பட்டு துணியால் போர்த்தப்பட்டு இருக்கும். நான்கு பக்கமும் நீண்ட குச்சிகள் இருக்கும். இதைத்தான் கத்தோலிக்க திருச்சபை ஊழியர்கள் தூங்குவார்கள். 

இரண்டு பக்கமும் மேலும் இருவரும் நின்று சாமரம் வீசுவார்கள். இந்த சாமரம் ஆஸ்டிரிச் இறகுகள் மூலம் செய்யப்பட்டு இருக்கும். பல நூறு ஆண்டுகளாக இந்த முறை கத்தோலிக்க திருச்சபையில் வழக்கத்தில் இருந்தது. மொத்தம் 4 பேர் அல்ல 12 பேர் இந்த பல்லக்கை தூங்குவார்கள். 

அதற்கு முந்தைய காலங்களில் நேரடியாகவே போப்பை கத்தோலிக்க ஊழியர்கள் சுமந்து சென்ற நிகழ்வுகளும் நடந்து உள்ளன. இதற்கு கத்தோலிக்க திருச்சபை ஊழியர்கள் சொல்லும் காரணம்:- அதாவது போப் நடந்து சென்றால் அவரை மக்கள் பார்க்கக் முடியாது. போப் பொதுவாக அதிகம் வெளியே வர மாட்டார். அப்படி வரும் போது அவரை சந்திக்க பல்லாயிரம் பேர் இருப்பார்கள். போப் நடந்து சென்றால் அவரின் முகத்தை தூரத்தில் இருக்கும் மக்கள் பார்க்க முடியாது. பல நாடுகளில் இருந்து மக்கள் போப்பை சந்திக்க வருவார்கள். ஆனால் இப்படி பார்க்க முடியாமல் போனால் அவர்கள் மனம் வருந்துவார்கள். இதனால் எல்லோரும் பார்க்கும் வகையில் பல்லக்கில் எடுத்து செல்லப்படுகிறார். இதை கருதிக்கொண்டு பல்லக்கின் உயரம் மிகப்பெரியதாக வைக்கப்பட்டு உள்ளது. பல்லக்கு உச்சத்தில் உயரத்தில் இருக்கை அமைக்கப்பட்டு உள்ளது என்று விளக்கம் அளிக்கப்பட்டது. 

பாஜகவை சேர்ந்த நாராயண் திரிப்பாதி, எச். ராஜா போன்றவர்கள் இன்றைக்கு ஒப்புமை படுத்தி ஆதீனத்தைப் பல்லக்கில் தூக்குவதை நியாயப்படுத்த முயலும் வகைக்கு இந்த நடைமுறை இப்பவும் இருக்கிறதா என்றால் இல்லை என்பதே விடை. உண்மையில் போப்பை பல்லக்கில் தூக்குவதைக் களைந்தது போல ஆதீனத்தையும் பல்லக்கில் தூக்குவதை கைவிட வேண்டும் என்றுதான் அவர்கள் நியாயம் கேட்டிருக்க வேண்டும். அவர்கள் தாம் அவ்வளவு நல்லவர்கள் இல்லையே! 

போப்பாக இருந்த ஜான் பால் 1 என்பவர் இந்த முறையை ஒழிக்க வேண்டும் என்று கூறினார். நான் பல்லக்கில் செல்வதை விரும்பவில்லை என்று கூறினார். ஆனால் திருச்சபை ஊழியர்கள் இவருக்கு அழுத்தம் கொடுத்தனர். உங்களை மக்கள் பார்க்க வேண்டும். பல்லக்கில் செல்லுங்கள் என்று கூறினர். இதனால் பல்லக்கில் தொடர்ந்து செல்ல ஜான் பால் 1 ஒப்புக் கொண்டார்.

அனால் இதன் பின் வந்த ஜான் பால் எனக்கு பல்லக்கு வேண்டாம் என்று கூறினார். இதையடுத்து அவர் பல்லக்கை துறந்தார். அதோடு அவர் ஜீப் ஒன்றையும் பயன்படுத்தும் புதுமையை புகுத்தினார். அதன்பின் வந்த இரண்டு போப்களும் பல்லக்கை பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக தற்போது மின்கல கார்கள், உயர்த்த மேடை கொண்ட ஜீப் போன்ற கார்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த பல்லக்கு முறை கடந்த நாற்பத்தி நான்கு ஆண்டுகளாக ரோமன் கத்தோலிக்க அவையில் பின்பற்றப்படவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

'தேவதாசி முறை என்பது இந்த பாரத தேசத்துக்கு சொந்தமானது. அது மிகச் சிறந்த அமைப்பு. அதை சிதைத்ததால் நான் பெரியாரை மன்னிக்க மாட்டேன்' இவ்விதம் பேசியிருக்கிறார் சின்மயியின் தாயார் பத்மஹாசினி. 

காலங்காலமாக கோவில்களில் பெண்களை தேவதாசிகளாக வைத்திருந்து, அவர்கள் அந்தத் தொழில் செய்வது மிகுந்த புண்ணியம் என்று அவர்களையே நம்ப வைத்த கொடுமைகள் நடந்தேறின.

இதனைக் கண்டு வெகுண்டெழுந்தார் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி. 1927 முதல் 1930 வரை அவர் சென்னை மாகாணத்தின் சட்டமேலவை உறுப்பினராகவும், துணைத் தலைவராகவும் இருந்போது, கோயில்களில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்குப் பொட்டு கட்டி இறைவனுக்கு மனைவியாக்கும் தேவதாசி முறையை ஒழிப்பதற்கான சட்ட முன்வரைவை முன்மொழிந்து, அதற்கென வாதிட்டார். இதனை எதிர்த்த காங்கிரசின் சத்தியமூர்த்தி, 'இது புனிதமான பணி' என்றார்.

அதற்கு விடையளித்த முத்துலெட்சுமி 'அப்படியானால் இதுவரை எங்கள் பெண்கள் புனிதப் பணி செய்ததுபோதும், உங்கள் வீட்டுப் பெண்களை இந்த புனிதப் பணியில் ஈடுபடுத்துங்கள்' என்று பதிலடி தந்தார்.

இதன் பின்னர் இந்தச் சட்டமுன்வரைவே 1947 சென்னை தேவதாசிச் சட்டம் என்ற பெயரில் சட்டமானது. இதன் மூலம் தேவதாசிகள் திருமணம் செய்து கொள்ள சட்ட உரிமை கிடைத்தது. இதற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று பெரியார் விடுதலையில் எழுதினார். அதனைத் தொடர்ந்து அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு அளித்து சட்டமுன்வரைவை நிறைவேற்றினார்கள்.

இந்தியா டுடே இதழில் வாசந்தி என்று ஓர் ஆசிரியர் இருந்தார். அவர் தேவதாசிகள் பற்றி ஒரு கட்டுரை எழுதினார். அந்தக் கட்டுரையில், 'ஆடல் கலை வளர்ந்தது, பாடல் கலை புத்துயிர் பெற்றது, ஒழுக்கமாக வாழ வித்திட்டது' என்றெல்லாம் தேவதாசி முறையைப் புகழும் விதமாக எழுதியிருந்தார்.

இதனைக் கண்ட கலைஞர் மறுநாள் முரசொலியில் அக்கட்டுரையைக் குறித்து இப்படி எழுதினார். 'ஒரு எழுத்தாளரோ, இதழின் ஆசிரியரோ எழுதியது போல அல்லாமல், தேவதாசியாகவே வாழ்ந்த ஒருவர் எழுதியது போல உள்ளது' என்று.

இதனைப் படித்ததும் வாசந்தி துடித்துப் போனார். வெறுமனே சொல்லடிக்கே துடித்துப் போன வாசந்தி அரசியல் பேரறிமுகங்களிடம் எல்லாம் ஒப்பாரியும் வைத்துள்ளார். அனைவருமே 'ஒரு சமுதாயத்துப் பெண்களை கட்டாயப்படுத்தி செய்ய வைக்கப்பட்ட கொடுமையை நீ பாட்டுக்கு புகழ்ந்து இருக்கிறாய். உன்னால் ஒரு சுடுசொல்லைக் கூட தாங்கிக்க முடியலையே? கலைஞரைச் சந்தித்து மன்னிப்பு கேள்' என ஆலோசனை கூறினார்கள்.

கலைஞரை நேரடியாக சந்திக்க முயற்சிக்காமல், தானே அக்கட்டுரைக்கு எதிர்மறையாக தேவதாசி முறையின் கொடுமைகளை எழுதி முடித்துக் கொண்டார் வாசந்தி.

தேவதாசி முறையை ஆதரித்து சட்டப்பேரவையில் பேசிய சத்தியமூர்த்தியும் ஒரு பார்ப்பனர், வாசந்தியும் பார்ப்பனர், இப்போது ஆதரித்துப் பேசிய பத்மஹாசினியும் ஒரு பார்ப்பனர்.

ஒரு அடிமையிடம் தான் அடிமையாக இருக்கிறோம் என்பதை உணர்த்தி விட்டால் போதும், அதனை எதிர்த்து களம் காண்பதற்கான போராட்ட வியூகத்தை அவரே வகுத்துக் கொள்வார். பெரியார் தன் வாழ்நாளெல்லாம் செய்தது அதைத்தான். பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே என்ற நன்னூலின் வாக்குப்படி இந்த வகை நிகழ்வும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,240.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.