Show all

நரியென்று தெரியாமலே வீட்டு விலங்காக வளர்த்த மரிபெல் சோடெலோ! இது பெருநாட்டில்

பெரு நாட்டில் உள்ள மரிபெல் சோடெலோ என்பவர் வளர்த்து வந்த நாய்க்குட்டி, வளரும்போது நரியென்று புரிந்தகதை இணையத்தில் தீயாகிறது.

29,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: பெரு நாட்டில் உள்ள மரிபெல் சோடெலோ என்பவர் நாய் குட்டி வளர்க்க ஆசை பட்டு இறுதியில் அவர்கள் வளர்த்து வந்தது நரியென்று புரிந்து அதிர்ந்து போனார்.

பெரு நாட்டில் உள்ள மரிபெல் சோடெலோ என்பவர் நாய் குட்டி வளர்க்க ஆசை பட்டுள்ளார். இதற்காக மரிபெல் சோடெலோ பெரு நாட்டின் நடு லிமாவில் உள்ள ஒரு சிறிய கடையில் ஒரு அழகான நாய்க்குட்டியை வாங்கியுள்ளார். நாய்க்குட்டியை வாங்கியபோது நாய் விற்பனையாளர் அது சைபீரியன் ஹஸ்கி என்று கூறியுள்ளார். 

குட்டியாக இருந்தவரை பெரிதாக எந்த வேறுபாடும் உணரமுடியவில்லை. நாட்கள் செல்ல செல்ல நாய்க்குட்டி அருகிலுள்ள கோழிகள் மற்றும் வாத்துகளைக் கொன்று சாப்பிடத் தொடங்கியது. விரைவில் அதன் தோற்றம் மாறியது. அதன் கால்கள் மெல்லியதாகவும், அதன் வால் புதர் போன்றும், அதன் தலை கூர்மையாகவும், அதன் காதுகள் மேல்நோக்கி நரிகளின் காதுகளை போல் மாறிவிட்டது என்று தெரிவிக்கின்றார் நரியை நாயாக நம்பிய மரிபெல் சோடெலோ.

தொடர்ந்து அதனை நாங்கள் வீட்டில் வளர்க்க முடிய வில்லை. 3 பெரிய பன்றிகளை சாப்பிட்டு விட்டது. இதனால் விலங்குகளின் இழப்பிற்கு நாங்கள் பணம் செலுத்திக் கொண்டிருந்தோம். இது நாய் என்று நம்பிதான் 13 டாலர் பணம் கொடுத்து வாங்கினோம். அக்கம்பக்கத்தில் உள்ள விலங்குகளைத் தாக்குவதாக அண்டை வீட்டுக்காரர்கள் புகார் அளித்த பின்னரே, அது ஆண்டியன் வகை நரி என்று தெரிய வந்தது.

இது குறித்து பெருவில் உள்ள ஒன்றிய வன மற்றும் வனவிலங்கு சேவை கூறுகையில், காட்டு விலங்குகள் பெரும்பாலும் அமேசானிய பகுதிகளில் இருந்து கடத்தல்காரர்களால் வாங்கப்பட்டு, லிமாவில் சட்டவிரோதமாக விற்கப்படுகின்றன. என்று தெரிவித்தனர். 

இறுதியாக, ஏறக்குறைய ஆறு மாதங்களுக்குப் பிறகு, பெருவின் செர்போர் வனவிலங்கு சேவை, கால்நடை மருத்துவர்களால் பரிசோதிக்க பட்ட பின்னர் பார்க் டி லாஸ் லேயெண்டாஸ் மிருகக்காட்சிசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அறிய முடிகின்றது.

பெருவில், நடப்பு ஆண்டில் 125 தடவைகளுக்கு மேல் சட்டவிரோதமாக பொதுமக்களுக்கு சொந்தமான காட்டு விலங்குகளை பறிமுதல் செய்துள்ளனர். பெருவில், காட்டு விலங்குகளைச் சட்டவிரோதமாக கடத்தினால், ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படுகிற நடைமுறையும் உள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,068.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.