Show all

அகவை 90 நாட்கள்! தங்கள் நாட்டுக்கென சொந்தமாக ஒரு விண்வெளி நிலையத்தை உருவாக்கி வருகிறது சீனா

வரவேற்றுக் கொண்டாடுகிறது சீனா. விண்வெளி நிலையத்தை கட்டமைக்கும் பணிகளை மேற்கொள்வதற்காக சென்ற சீன விண்வெளி வீரர்கள் 3 பேர் 90 நாட்களுக்கு பிறகு புவிக்கு திரும்பினர்.

02,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: அனைத்துலக விண்வெளி நிலையம் என்பது விண்ணிலே நம் நில உருண்டையைத் தாழ்-புவி சுற்றுப்பாதையில் சுற்றிவரும் ஒரு செயற்கை விண்நிலையம் ஆகும். 

பன்னாட்டு மக்கள் ஒன்றாக உழைத்து உருவாக்கி வரும் ஒரு விண்வெளி நிலையம். நிலவுருண்டையில் இருந்து 360 கி.மீ உயரத்திலே, காற்று(வளி) மண்டலத்தைத் தாண்டி உள்ள புற வெளியிலே, 92 மணித்துளிகளுக்கு ஒருமுறை நில உருண்டையச் சுற்றி வருகின்றது. இது கார்த்திகை,5100ல் (நவம்பர் 1998) நிறுவப்பட்டது.

இந்நிலையத்தை இயக்கவும், பழுது பார்க்கவும் ஆய்வுகள் நடத்தவும் எப்பொழுதும் இரண்டு பேர் இருப்பர். இந்நிலையத்தை இயக்கத்தேவையான எல்லாப் பொருட்களையும், கட்டுமானப் பொருட்கள் முதற்கொண்டு எல்லாவற்றையும், பூமியில் இருந்து விண்ணூர்தி வழியாக எடுத்துச் செல்லவேண்டும். இப்பெரும் பன்னாட்டுக் கூட்டு முயற்சியில் பங்கு கொள்ளும் நிறுவனங்கள் அமெரிக்காவின் நாசா, உருசிய கூட்டாட்சி விண்வெளி நிறுவனம், ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், சப்பானிய வான் விண்வெளி வெளித்தேடல் நிறுவனம், கனடா விண்வெளி நிறுவனம் ஆகியன. இவையன்றி, பிரேசில் விண்வெளி நிறுவனமும் இத்தாலிய விண்வெளி நிறுவனமும் பல்வேறு நிலைகளில் பங்கு கொள்ளுகின்றன.

இங்கு பன்னாட்டைச் சேர்ந்த பலர் சென்று இருந்து திரும்பி இருக்கிறார்கள். வியப்பூடும் விதமாக, பொது மக்களில் மூன்று பேரும் சுற்றுலாப் பயணமாக சென்று திரும்பியுள்ளார்கள். 

இது போன்று தன்னாட்டுக்கு மட்டுமாக சீனா விண்வெளியில் புதிதாக ஒரு விண்வெளி நிலையத்தைக் கட்டமைத்து வருகிறது. அடுத்த ஆண்டுக்குள் இந்த விண்வெளி நிலையத்தை முழுமையாக கட்டமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர சீனா திட்டமிட்டுள்ளது.

தியான்ஹே எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விண்வெளி நிலையத்துக்கான மையப்பகுதி 16,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123 அன்று (29.04.2021) புவிச் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து தியான்ஹே விண்வெளி நிலையத்தை கட்டமைக்கும் பணிகளை மேற்கொள்வதற்காக 56 அகவை நை ஹைஷெங், 54 அகவை லியு போமிங் மற்றும் 45 அகவை டாங் ஹோங்போ ஆகிய 3 விண்வெளி வீரர்கள் 90 நாட்களுக்கு முன்பு விண்கலம் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டனர். அங்கு அவர்கள் விண்வெளி நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டனர். 

இதற்காக அவர்கள் 2 முறை விண்வெளி நடை பயணத்தையும் மேற்கொண்டனர். 
‘செஞ்ஞா யிற்றுச் செலவும், அஞ்ஞாயிற்றுப்
பரிப்பும், பரிப்புச் சூழ்ந்தமண் டிலமும்,
வளிதிரிதரு திசையும்,
வறிது நிலைஇய காயமும் என்றிவை
சென்றளந்து அறிந்தார் போல என்றும்’
என்று நம்ம புறநானூற்றில் தெரிவித்திருப்பது போல அமைந்த விண்வெளியில்-

இதற்கிடையே, கடந்த 90 நாட்களாக விண்வெளியில் தங்கி இருந்து கட்டுமான பணிகளை மேற்கொண்டு வந்த சீன விண்வெளி வீரர்கள் 3 பேரும் முந்;தாநாள்; காலை சென்சு 12 விண்கலத்தில் புவிக்குப் புறப்பட்டனர்.

இந்நிலையில், உள்ளூர் நேரப்படி நேற்று மதியம் 1.30 மணிக்கு சீனாவின் வடக்குப் பகுதியில் உள்ள கோபி பாலைவனத்தில் சென்சு 12 விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது.

இதையடுத்து, அங்கு தயார் நிலையில் இருந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் விண்கலத்தைத் திறந்து விண்வெளி வீரர்கள் 3 பேரையும் பத்திரமாக வெளியேற்றினர். விண்வெளி வீரர்கள் 3 பேரும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,010.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.