Show all

இம்ரான்கானின் வெளிப்படையான தகவல்! எந்தவொரு நாட்டிற்கும் தன்னுடைமையான வெளியுறவுக் கொள்கை முதன்மையானது

இம்ரான்கானின் மனந்திறந்த பேச்சு 'எந்தவொரு நாட்டிற்கும் தன்னுடைமையான வெளியுறவுக் கொள்கை என்பது முதன்மையானது. பாகிஸ்தான் மற்ற நாடுகளை நம்பி உள்ளதாலேயே பாகிஸ்தான் நாட்டால் உச்சக்கட்டத் திறனை அடைய முடியாமல் போனது. சொந்தமான வெளியுறவுக் கொள்கை கொண்டு இருக்காத ஒரு நாட்டால் அதன் மக்களின் நலன்களைப் பாதுகாக்க முடியாது'

19,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: தலைமைஅமைச்சர் இம்ரான் கான் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ள நிலையில்- பாகிஸ்தான் நாட்டில் இப்போது மிகப் பெரிய அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி ஆளும் கூட்டணியில் இருந்தும் கூட பலரும் இம்ரான் கானுக்கு எதிராகத் திரும்பி உள்ளனர்.

குறிப்பாக, பாகிஸ்தான் சேனை கூட இம்ரான் கானுக்கு எதிராகத் திரும்பி உள்ளதால், அவர் ஆட்சியைத் தக்க வைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானமும் பாக்கிஸ்தான் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தின் மீது சில நாட்களில் வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான கூட்டணிக் கட்சிகளே இம்ரான் கானுக்கு எதிராக உள்ளதால், அவர் முன்கூட்டியே பதவியை விட்டு விலகுவார் என்று கூறப்பட்டது.

இந்தச் சூழலில் நேற்று நாட்டு மக்களிடையே உரையாற்றிய இம்ரான் கான், தான் ஒருபோதும் பதவி விலகப் போவதில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும், பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்குப் பின்னால் அந்நிய நாட்டுச் சதி உள்ளதாகவும் அவர் சாடினார்.

இஸ்லாமாபாத்தில் பேசிய இம்ரான் கான், 'எந்தவொரு நாட்டிற்கும் தன்னுடைமையான வெளியுறவுக் கொள்கை என்பது முதன்மையானது. பாகிஸ்தான் மற்ற நாடுகளை நம்பி உள்ளதாலேயே பாகிஸ்தான் நாட்டால் உச்சக்கட்டத் திறனை அடைய முடியாமல் போனது. சொந்தமான வெளியுறவுக் கொள்கை கொண்டு இருக்காத ஒரு நாட்டால் அதன் மக்களின் நலன்களைப் பாதுகாக்க முடியாது.

வெளிநாட்டு உதவிக்காக மற்ற நாடுகளின் விருப்பத்திற்கு அடிபணிவதை விட ஒரு நாட்டின் நலன்களைப் பாதுகாக்கச் தன்னுடைமையான முடிவுகளை எடுப்பது மிகவும் முதன்மையானது' என்றார்.

அமெரிக்காவைச் சக்திவாய்ந்த நாடு என்று மறைமுகமாகக் குறிப்பிட்டுத் தாக்கிய இம்ரான் கான், அண்மையில் தான் ரஷ்ய சென்று வந்தால், அந்த சக்திவாய்ந்த நாடு அதிருப்தியில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மறுபுறம், ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் அதன் நட்பு நாடான இந்தியாவை இந்த சக்திவாய்ந்த நாடு ஆதரிப்பதாகவும் அவர் சாடினார்.

பாக்கிஸ்தான் அரசுக்கு எதிரான அச்சுறுத்தும் மடல் தொடர்பாக இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்கத் தூதருக்குப் பாகிஸ்தான் அரசு அழைப்பாணை அனுப்பி இருந்தது. இந்தச் சூழலில் தான் இம்ரான் கான் இப்போது இந்த முதன்மையான கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது முழு வீச்சில் போரைத் தொடங்க ரஷ்யா உத்தரவிட்டிருந்த, அந்த சமயத்தில் பாகிஸ்தான் தலைமைஅமைச்சர் இம்ரான் கான் ரஷ்யாவில் தான் இருந்தார். இதன் காரணமாக அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் பாகிஸ்தான் மீது கடும் அதிருப்தியில் இருந்தன.

கடந்த சில ஆண்டுகளாகவே, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு இடையேயான உறவு சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இதனால், பாகிஸ்தான் தொடர்ந்து ரஷ்யா, சீனா உடன் நெருங்கி வருகிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,206.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.