Show all

பணக்கார நாடுகளில் ஒன்றான குவைத்! வாழத்தகுதியற்ற நாடாக மறுவதை நோக்கி வேகமாக பயணித்துக் கொண்டிருக்கிறதாம்

உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான குவைத், இன்னும் சில ஆண்டுகளில் வாழத் தகுதியற்றதாக மாறும் என்பதாக ஓர் எச்சரிக்கை அறிக்கை வெளியாகியுள்ளது.

05,தை,தமிழ்த்தொடராண்டு-5123: புவி வெப்பமயமாதலால் உலகம் முழுவதுமே தட்பவெப்பம் அதிகரித்துள்ளது. இதில் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது குவைத். 

கடந்த ஆண்டு, ஆனி மாதம் (ஜூன்) குவைத்தில், முதன்முறையாக 50 டிகிரி வெப்பநிலை எட்டப்பட்டது. இந்நிலையில் அடுத்து வரும் ஐம்பது ஆண்டுகளில் குவைத்தின் பல்வேறு நகரங்களிலும் தற்போது நிலவும் வெப்பநிலை 4.5 டிகிரி அளவுக்கு அதிகரிக்கக் கூடும் என்று கூறுகிறது என்விரான்மன்ட் பப்ளிக் அதாரிட்டி என்ற அமைப்பு. இதனால் குவைத் நாட்டின் பெரும்பாலான பகுதிகளும் வாழத் தகுதியற்ற பகுதிகளாக மாறும் என அந்நிறுவனம் கணிக்கிறது.

பிரேசில் தொடங்கி வங்கதேசம் வரை பல்வேறு நாடுகளும் சுற்றுச்சூழல் சிக்கல்களுக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுத்துவருகின்றன. ஆனால், ஓபெக் எனப்படும் எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் உறுப்பு நாடுகளில் ஒன்றான வளமான, வெறும் 45 லட்சம் மக்கள் தொகை மட்டுமே கொண்ட நாட்டால் ஏன் வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த இயலவில்லை என்றால் அதற்கு அந்நாட்டில் அரசியல் செயல்பாட்டின்மையே காரணம் எனக் கூறப்படுகிறது.

குவைத்தின் அண்டை நாடான சவுதி அரேபியா, காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளது. 2060குள் சுழியம் வெப்ப உமிழ்வு என்ற நிலையை எட்டுவோம் என்று உறுதியெடுத்துள்ளது.

ஆனால், குவைத்தில் இதுபோன்ற அரசியல்பாடான எந்த நடவடிக்கையும் இல்லை என சூழலியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

அடுத்த இரண்டு ஐ.நா பருவநிலை மாநாடுகள் எகிப்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளன. மத்திய கிழக்கு பகுதி அரசுகளும் தாங்களும் காலநிலை மாற்றத்தால், அதிகரிக்கும் கடல் மட்டத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளன.

குவைத் அரசின் மீது குற்றச்சாட்டுகள் குவியும் சூழலில், அந்நாட்டில் வங்கித் துறையில் பணியாற்றிய ஜஸீம் அல் அவாதி, தனது வேலையைத் துறந்துவிட்டு புவி வெப்பமயமாதல் சிக்கல்கள் குறித்து கருத்துப்பரப்பதலை முன்னெடுத்து வருகின்றார். அவரது இலக்கு குவைத் மக்கள், பொதுப் போக்குவரத்தை அதிகமாகப் பயன்படுத்தி, கரியமில வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்த வைக்க வேண்டும் என்பதே. 

ஆhனால், இப்போதைக்கு குவைத்தில், குறைந்த ஊதியம் பெறும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மட்டுமே பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துகின்றனர்.

வளரும் நாடுகளில் இருந்து குவைத்துக்கு வேலைக்கு வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆண்டுதோறும் வெயில் காலத்தில் கடுமையான பாதிப்புகளை சந்திக்கின்றனர். பொதுவாக வெயில் காலத்தில் உச்சிப் பொழுதில் வெளியே பார்க்கும் வேலைகளுக்கு தடை இருந்தாலும் கூட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சிலர் இந்த வேலைகளில் ஈடுபடுத்தப்படுவதால் உயிரிழப்புகள் நேர்கின்றன. கடந்த ஆண்டு வெயில் காலத்தில், குவைத்தில் குறைந்த ஊதியம் பெறும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழப்பு அதற்கு முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது இருமடங்கு அதிகமாக இருந்தது என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

அடுத்து வரும் இருபது முப்பது ஆண்டுகளில் தட்பவெப்பத்தால் குவைத்தின் நம்பகத்தன்மை மீது எதிர்மறை விளைவுகளே ஏற்படும் என பிட்ச் ரேட்டிங்ஸ் என்ற பொருளாதார கணிப்பு அமைப்பு கூறுகிறது.

இதனால், குவைத் அரசு அரசியல் குழப்பங்களுக்கு நிரந்தரத் தீர்வு கண்டு, காலநிலை மாற்றத்தினைக் கட்டுப்படுத்துவதன் நிமித்தமாக தனது கவனத்தைத் திருப்ப வேண்டும் என்பதே உலகின் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,132.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.