Show all

90,000 பேர் மாற்று சிறுநீரகத்திற்காகக் காத்து கொண்டிருக்கின்றார்களாம் அமெரிக்காவில்!

சோதனை முயற்சியாக, மூளைச்சாவு அடைந்த மனிதருக்குப் பன்றியின் சிறுநீரகத்தைப் பொருத்தி, அது நன்றாக வேலை செய்வதாக கண்டறிந்திருக்கின்றனர் மருத்துவர்கள்.

04,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: மருத்துவ உலகின் ஒரு சிறு நகர்வாகப் பன்றியின் சிறு நீரகம், மனிதருக்குப் பொருத்தப்பட்டு வெற்றிகரமாக மூன்று நாட்களுக்குச் பரிசோதிக்கப்பட்டது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள என்.ஒய்.யு லங்ஓன் உறுப்புமாற்று சிகிச்சை மையத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் இந்தச் சாதனையைப் படைத்துள்ளனர்.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியிடம் இருந்து எடுக்கப்பட்ட சிறுநீரகத்தை மூளைச்சாவடைந்த ஒருவருக்கு பொருத்தியதில், அந்த சிறுநீரகம் நன்றாக இயங்கியதுடன், சிறுநீரையும் கிரியேட்டினையும் பிரித்து வெளியேற்றியதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

மனிதனின் குருதி நாளங்களுடன் பன்றியின் சிறுநீரகத்தைப் பொருத்திய மருத்துவர்கள், அதனை உடலுக்குள் பொருத்தாமல், மூன்று நாட்களுக்கு உடலுக்கு வெளியே வைத்து பரிசோதித்தனர்.

இருதயம், கல்லீரல், நுரையீரல், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிவரும் நிலையில், பன்றி உள்ளிட்ட விலங்குகளில் இருந்து எடுக்கப்பட்ட உடல் உறுப்புகளைப் பயன்படுத்த கடந்த சில ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

அமெரிக்காவில் மட்டும் கிட்டத்தட்ட 107,000 பேர் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைக்காக காத்திருப்பதாகவும் அவர்களில் 90,000 பேர் மாற்று சிறுநீரகத்திற்காகக் காத்து கொண்டிருப்பதாகவும் உடலுறுப்பு பகிர்வு அமைப்பு ஒன்று கூறியது. 

ஒருபக்கம் பன்றியின் சிறுநீரகம் எல்லாம் பொருத்தி சாதனை புரிய மனிதன் முயன்றாலும், இன்னும் என்னென்ன விரைவு உணவுகளைத் தயாரிக்கலாம் என்று நிறுவனங்களும், உண்டு மகிழலாம் என்றும் மனிதனும், சாராய வணிகத்தில் ஆதாயம் பார்க்கும் அரசும் சிந்திக்காமல் சிறுநீரகப் பழுதுக்கான முன்னெடுப்புகளில் முயன்று கொண்டிருப்பது மறுபக்கமாகும். 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,043.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.