Show all

சிறை கற்றுத்தந்த பாடம்! ஈராயிரம் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு; இது ஈகுவடாரில்

சிறையில் நிகழ்ந்த வன்முறையைத் தொடர்ந்து ஈராயிரம் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுவிக்க ஈகுவடார் அரசு முடிவு செய்துள்ளது.

16,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: தென்அமெரிக்க நாடான ஈகுவடாரின் குயாஸ் மாநிலத்தில் உள்ள துறைமுக நகரமான குயாகுவில் ஒரு சிறைச்சாலை உள்ளது. இந்த சிறைச்சாலையில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். 

இதற்கிடையில், குயாகுவில் சிறைச்சாலையில் கடந்த செவ்வாய்கிழமை கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதல் பெரும் கலவரமாக வெடித்தது. இந்த கலவரத்தில் 118 கைதிகள் உயிரிழந்தனர். மேலும் 79 கைதிகள் படுகாயமடைந்தனர்.

ஈகுவடாரில் உள்ள சிறைச்சாலைகளில் சுமார் 39 ஆயிரம் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அதிக எண்ணிக்கையிலான கைதிகள் சிறைகளில் அடைக்கப்பட்டதாலும், கைதிகளை கண்காணிக்க போதிய அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடாததும் இதுபோன்ற வன்முறைகளுக்குக் காரணமாகியுள்ளது.

இந்நிலையில், சிறையில் உள்ள ஈராயிரம் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய ஈகுவடார் அரசு முடிவு செய்துள்ளது. சிறையில் உள்ள கைதிகளின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் பெண்கள், அகவை முதிர்ந்தோர், மாற்றுத்திறனாளிகள், உடல்நலம் பாதிக்கப்பட்டோரில் ஈராயிரம் பேர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. 

சிறையில் உள்ள கைதிகளின் எண்ணிக்கையை குறைப்பதன் மூலம் பாதுகாப்பை அதிகரித்து, மோதல்களை தவிர்க்கலாம் என்ற நோக்கத்தோடு அரசு இந்த நடவடிக்கையை எடுத்து வருகிறது.

வெளியில் குற்றம் புரிந்தமைக்காக சிறையில் அடைக்கிறோம். சிறையில் குற்றம் புரிந்தமைக்காக வெளியில் திறந்து விடுகிறோம், என்பதற்கானது சிறைச்சாலை என்றால் சிறைச்சாலை குறித்து விவாதிக்க வேண்டியதும், கற்றுக் கொள்ள வேண்டியதுமான பாடங்கள் நிறையவே இருக்கின்றன என்பதே உண்மை.

ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே,
ஒளிறு வாள் அருஞ் சமம் முருக்கி,
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.
என்று சமூகத்தை, கடப்பாடுகளை உணர்த்தி, கட்டி பாதுகாக்க வேண்டும். குற்றம் புரிந்தவர்களை சமூகத்தை விட்டு விலக்கி வைக்க வேண்டும். 

பல்லாயிரம் ஆண்டு பழமையுள்ள தமிழ்க்குடும்பம் ஒரு மாதிரிச் சமுதாயமாக இதைத்தான் செயல்படுத்தி வருகிறது. இன்றைய அயல் இயல்களால் கட்டமைக்கப்பட்டுள்ள சட்ட சமூகங்கள் தமிழ்க் குடும்பங்களுக்குள் புகுந்து சீராழித்து வருவதை தமிழர்களுக்கு உணர்த்துவது பெரும்பாடாக இருந்து வருகிற நிலையில், ஈக்வடார் அரசு, கட்டிக்காக்க வேண்டியது குற்றவாளிகளைச் சிறைச்சாலையில் அல்ல என்று கொஞ்சமாக கொசுறாகப் புரிந்து கொண்டிருப்பது மிகச் சிறு முன்னேற்றமே.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,024.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.