Show all

இலண்டனில் பலாக்கனி ரூபாய் 16000க்கு விற்ற விந்தையால்! வந்தது- தமிழர் முக்கனிகளில் ஒன்றான பலா குறித்த இந்தக் கட்டுரை

லண்டனில் உள்ள மிகப்பெரிய மற்றும் பழைமையான உணவுச் சந்தைகளில் ஒன்றான போரோ சந்தையில் ஒரு பலாப் பழம் 160 யூரோவுக்கு (இந்திய விலையில் 16,226 ரூபாய்) விற்பனையாகிறது. என்பது நமது இந்தக் கட்டுரைக்குக் காரணமான செய்தியாகும்.

10,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: புவி நடுக்கோட்டுப் பகுதிகளில் அதிகமாகக் காணப்படும் வகையினது பலா மரம். மரத்தில் விளையும் பழங்களிலேயே பெரிய பழம் பலாப்பழமாகும். சில இடங்களில் மட்டுமே இது முறையான வேளாண் முறைகளின்படி முழுமையான தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. பெரும்பாலும் மற்ற பழத்தோட்டங்களில் துணைப் பயிராகவோ அல்லது வீட்டுத் தோட்டங்களிலோ வளர்க்கப்படுகிறது. 

விந்தையாக, உலகின் சில இடங்களில் 'பழங்களின் அரசன்' என்று போற்றப்படும் பலா சில இடங்களில் பயன்படுத்தப்படாமல் குப்பையில் வீசப்படுகிறது.

பலா மரம், இந்தியா, பர்மா, இலங்கை, சீனா, மலேசியா, பிலிப்பைன்ஸ், பிரேசில், கென்யா ஆகிய நாடுகளில் பெரும்பாலாக வளர்கிறது.

தமிழ்நாட்டின் முக்கனிகளில் ஒன்றாகக் கொண்டாடப்படும் பலா- தென்னிந்தியா முழுவதும் மாம்பழம் மற்றும் வாழைப்பழத்துக்கு அடுத்ததாக அதிகம் பயன்படுத்தப்படுவது ஆகும். தமிழ்நாட்டில் பழ அடையாளமாக இருக்கிற பலா, கேரளாவிலும் பழ அடையாளமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவில், 20 ஆண்டுகளுக்கு முந்தையப் புள்ளிவிவரப்படி, சுமார் 14,286 ஏக்கர் பரப்பளவில் சுமார் 1,00,000 பலா மரங்கள் வளர்க்கப்படலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பாலும் வீட்டுத்தோட்டங்களிலும், வெற்றிலை, காப்பி, மிளகு, ஏலக்காய் தோட்டங்களில் நிழலுக்காகவும் பலா வளர்க்கப்படுகிறது. இலங்கையில் மரத்திற்காகவும், தாய்லாந்தில் பழத்திற்காகவும் வளர்க்கப்படுகிறது.

ஆசியாவில் பலாப்பழங்கள் பலவாறாக உண்ணப்படுகின்றன. பெரும்பாலும், நன்கு பழுத்த பழத்தின் சுளைகள் அப்படியே உண்ணப்படுகின்றன. சிறு காய், மற்றும் முற்றிய காய்களின் சுளைகள் கூட கறியாக சமைத்தோ அல்லது மெல்லிய வறுவல்களாகவோ உண்ணப்படுகின்றன.

ஆனால், மேலை நாடுகளில் பலாப்பழத்தின் மணம் விரும்பத்தகாததாக கருதப்படுகிறது. எனவே, அவர்கள் பெரும்பாலும் முற்றிய காய் சுளைகளையே உண்கின்றனர். மற்ற பழங்களைப் போலவே பலாப்பழத்திலிருந்தும் சாறு, பனிக்கூழ், பழக்கூழ் மற்றும் பல விதமான உணவு வகைகள் தயாரிக்கப்படுகின்றன.

பலாப்பழத்தின் விதைகள் ஆசியாவில் உணவாகப் பயன்படுத்தப்படுகின்றன. அவை வறுத்தும், வேக வைத்தும், சர்க்கரைப்பாகில் ஊற வைத்தும் உண்ணப்படுகின்றன. இவற்றை அரைத்து மாவும் தயாரிக்கப்படுகிறது. பலாப்பூக்கள் சமைத்து உண்ணப்படுகின்றன.

உணவாக மட்டுமின்றி, பலாப்பழத்தின் கடினமான தோல், பெக்டின் வகை கூழ்கள் தயாரிக்க உதவுகிறது. மேலும், இது புகையிலையை பதனிட பயன்படுகிறது.
பலாமரம் ஈரப்பதம் அதிகமுள்ள புவிநடுக்கோட்டுப் பகுதிகளில் மட்டுமே வளரக்கூடியது. உறைபனியைத் தாங்கும் சக்தி பலாமரத்திற்கு இல்லை. மழை குறைவாக இருப்பின், நீர்ப்பாசனம் செய்ய வேண்டியது கட்டாயம். இந்தியாவில், பலா மரங்கள் கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் உயரம் வரையிலான இடங்களில் கூட காணப்படுகின்றன. ஆனால், 4000 மீட்டர் உயரத்திற்கு மேலான இடங்களிலிருந்து கிடைக்கும் பலாப்பழங்கள் குறைந்த தரமுள்ளவையாக இருக்கும்.

நல்ல வடிகால் வசதியுள்ள மண்ணில் பலா நன்றாக வளரும்; சுண்ணாம்பு பாங்கான நிலத்தில் சற்று மெதுவாகத்தான் வளரும். வேர்ப்பகுதியில் நீர் தேங்குவது பலா மரத்திற்கு உகந்ததல்ல. இதனால் மரங்கள் பழம் தராமலோ வாடியோ போய்விடும்.

பலா சாதாரணமாக விதை மூலமே வளர்க்கப்படுகிறது. நீரிலோ, 10விழுக்காடு ஜிப்பரெலிக் அமில கரைசலிலோ ஊர வைப்பதன் மூலம் விதைகள் விரைவாக முளைக்கும். விதைகளை நிலத்தில் நேரடியாக நடாமல், நாற்றங்காலிலும் நடலாம். ஆனால், நாற்றுகளை விரைவில் நடாவிட்டால் அவை நாற்றங்காலிலேயே வேர் பிடித்து விடும். பலவிதமான ஒட்டு முறைகளில் பலாச்செடிகள் உருவாக்கப்பட்டாலும், அவை விதைசெடிகள் அளவு பிரபலமடையவில்லை. எனினும், காற்றில் வேர் பிடிக்கச்செய்தல், சிறு தண்டுகளை வேர் பிடிக்கச்செய்தல் ஆகிய முறைகள் மூலம் பலாச்செடிகள் உருவாக்கப்படுகின்றன. திசு வளர்ப்பு முறையிலும் பலாச்செடிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

நன்கு வளர்ந்த பலா மரம் 21 மீ உயரம் வரையும், தடித்த தண்டும் கிளைகளும் கொண்டதாயும் இருக்கும். பலா இலைகள் பசுமையான நீள்கோள வடிவில் இருக்கும். எல்லா பாகங்களுமே பிசுபிசுவென்ற வெண்ணிறப் பால் கொண்டிருக்கும். பொதுவாக, பலாச்செடிகள் மூன்று முதல் ஏழு ஆண்டுகளில் காய்க்கத் தொடங்கும்.


பலாமரம் ஆண் பூ, பெண் பூ என இருவகை பூக்கள் கொண்டது. ஆண் பூக்கள் கொத்தாக புதிய கிளைகளிலும், பெண் பூக்கள் கொத்தாக மரத்தண்டிலும், தடிமனான கிளைகளிலும் காணப்படுகின்றன. பூ பூத்த மூன்று முதல் எட்டு மாதங்களில் பலாக்காய்கள் முற்றுகின்றன.

ஆசியாவில் பலாப்பழங்கள் முற்றும் காலம் பங்குனி முதல் ஆவணி வரை ஆகும். ஒரு மரத்திலிருந்து ஆண்டுக்கு 100 முதல் 150 பழங்கள் வரை கிடைக்கும். பழங்கள் காம்பை அறுத்து மரத்திலிருந்து பறிக்கப்படுகின்றன. வெகுவாக பால் சிந்தினால் அது நன்கு முற்றாத பலாக்காய் என அறியலாம். நன்கு முற்றிய பலாக்காய்கள் சுமார் 40 கிலோ வரை எடை உடையவயாய் இருக்கும். பழத்தின் வெளிப்புறம் தடிமனான முட்களுடையதாயும், பச்சை நிறத்திலும் இருக்கும். உட்புறம் மஞ்சள் நிற சுளைகள், வெளிர் மர நிறத்திலான கொட்டைகளுடன் இருக்கும்.

தமிழீழப் பகுதிகளில் பலா ஒரு பழமாக மட்டுமே பார்க்கப்பட்டாலும், கொழும்பில் உள்ள சிங்களவர் உணவகங்களில் பலாக்காய் கறி மிகவும் கொண்டாடப்படும் உணவாகும். சிங்களவர்களின் முதன்மை உணவுகளில் ஒன்றாகவே பலாக்காய் கறி பார்க்கப்படுகிறது. இதனை சிங்களவரின் பண்பாட்டுடன் தொடர்புடைய ஒரு உணவாகக் கூறுவோரும் உளர். 

தமிழில் பலாபிஞ்சு என்று கூறுவதை, சிங்களர் பொலஸ் என்று அழைக்கின்றனர். இந்தப் பருவத்தில் பலாப்பிஞ்சுவின் உள்ளே சுளைகள் எதுவும் இருக்காது. அதனை பெரும் துண்டங்களாக வெட்டி சமைப்பதில் சிங்களர்களுக்கு மிகுந்த விருப்பம் என்று சொல்லப்படுகிறது.

இந்தக் கறி, இறைச்சி கறிக்கு இணையான சுவையாக இருக்கும். இதனை ஒட்டுமொத்தமாக அனைத்து சிங்களவர்களும் விரும்பி சுவைக்கும் ஒரு உணவு வகையாகும். சாதாரண உணவகங்களில் இருந்து, மின்மினி சொகுசகங்கள் வரை இலங்கையில் இந்த பலாப்பிஞ்சுக் கறி மிகவும் கொண்டாடப்படும் உணவாகும். கேரளாவிலும் இந்த வகை உணவு பெரிதும் கொண்டாடப்படுகிறது. தற்போது தமிழ்நாட்டில் இறைச்சி உண்ணாதவர்கள் கொண்டாடும் உணவாக வளர்ச்சி பெற்று வருகிறது பலாப்பிஞ்சுக் கறி.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,166.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.