Show all

ஓமிக்ரான் குறுவிப் பரவலுக்கு- காப்பு வகைக்கான முதன்மை நடவடிக்கையை முன்னெடுத்தது: இஸ்ரேல்!

உலகை அச்சுறுத்திவரும் புதிய ஓமிக்ரான் குறுவிப் பரவலுக்கு பயந்து, காப்பு வகைக்கான முதன்மை  நடவடிக்கையாக, உலகின் முதல் நாடாக, இஸ்ரேல் அதன் அனைத்து பன்னாட்டு எல்லைகளையும் மூடியது.

13,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: தெற்கு ஆபிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய கொரோனாக் குறுவி மாறுபாடான ஓமிக்ரானின் பரவலைத் தடுக்க உலக நாடுகள் அனைத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

பல நாடுகள் தென்னாப்பிரிக்கா மற்றும் பிற தெற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணத் தடை விதித்துள்ளன.

இந்நிலையில், புதிய கொரோனா அச்சறுத்தலுக்கு பயந்து தனது அனைத்து எல்லைகளையும் மூடியது இஸ்ரேல் அரசாங்கம்.

அனைத்து வெளிநாட்டினரும் நாட்டிற்குள் நுழைவதைத் தடை செய்வதாக அறிவித்த முதல் நாடு இஸ்ரேல் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து நாட்டினரின் தடைக்குக் காரணமாக: இந்த புதிய குறுவி ஏற்கனவே ஒவ்வொரு நாட்டிலும் உள்ளது என்று இஸ்ரேல் உள்துறை அமைச்சர் அய்லெட் சேக் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், இந்த ஓமிக்ரான்  வகை குறுவிக்கு எதிராக, தடுப்பூசி பயனுள்ளதாக இருக்கும், இருப்பினும் எந்த அளவிற்கு என்பது எங்களுக்கு இன்னும் தெரியவில்லை என்றார்.

அரசாங்கத்தின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ள உள்ள இந்த தற்காலிக தடை, அடுத்த 14 நாட்களுக்கு நீடிக்கும் என்று பிரதமர் நப்தாலி பென்னட் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலில் தற்போது, ஒருவர் புதிய ஓமிக்ரான் குறுவியால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தென்னாப்பிரிக்க மாநிலங்களில் கண்டுபிடிக்கப்பட்ட மாறுபாடு இஸ்ரேலில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நலங்கு அமைச்சகம் தெரிவித்துள்ளது.  
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,082.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.