Show all

இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகம் தவற முடியாது! தமிழர்களுக்குத் தீர்வினை பெற்றுத்தருவதில் இருந்து: சம்பந்தன்

11,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கை வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய உரையின் தொகுப்பில் உருவாகிய 'நீதியரசர் பேசுகிறார்' என்ற நூல் வெளியீட்டு நிகழ்வு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக நாட்டின் எதிர் கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்மந்தன்; அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றும் போது, தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களுடைய உரிமைகளுக்காக தீவிரமாக ஆயுதப் போராட்டத்தை நடத்தியிருந்தார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தில் நீதியும், நியாயமும் உள்ளது. அதை எவரும் மறுக்க முடியாது.

தமிழ் மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை, அவர்களின் உரிமைகள், உரித்துகள் வழங்கப்படவில்லை என்ற அடிப்படையில்தான் ஆயுதப் போராட்டம் தொடங்;கப்பட்டது. இப்போராட்டத்தை எல்லோரும் ஏற்றுக்கொண்டார்கள். சர்வதேச சமூகம் கூட ஏற்றுக்கொண்டது. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவருவதற்கு சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்திற்கு உதவி செய்தது. குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, ஜரோப்பிய ஒன்றியம், ஜக்கிய ராஜ்ஜியம், கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் விடுதலைப் புலிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு உதவின. இதனால்தான் இந்த நாடுகள் அனைத்திலும் தமிழீழ விடுதலைப் புலிகள் தடைசெய்யப்பட்டார்கள். பயங்கரவாத இயக்கமாக சித்தரிக்கப்பட்டார்கள். பல விதங்களில் அவர்கள் முடக்கப்பட்டார்கள். இந்த சர்வதேச நாடுகளின் செயற்பாடுகளைக் கொண்டுதான் இலங்கை அரசாங்கம் அவர்களை தோற்கடிக்க முடிந்தது. இதனை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும், என்று அவர் குறிப்பிட்டார்.

தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்திற்கு முழுமையான ஆதரவை வழங்கியது. இந்த நிலையில்தான் இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு நியாயமான அரசியல் தீர்வினை நாட்டில் ஏற்படுத்துவோம் என்று வாக்குறுதியை கொடுத்திருந்தது என்று அவர் பேசினார். தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் இலங்கை அரசாங்கம் அரசியல் தீர்வு தொடர்பில் பல்வேறு முன்மொழிவுகளை முன்வைத்திருந்தது. ஆனால் அவ்வாறான தீர்வு முன்மொழிவை தருவதற்கு அரசாங்கம் இன்று பின்னிற்கின்றது, என்று சம்மந்தன் கூறியுள்ளார்.

இதனை சர்வதேச சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த நிலையில்தான் சர்வதேச சமூகத்திற்கு பாரிய கடமை உள்ளது. இலங்கை தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு நியாயமான நிரந்தரமான தீர்வினை முன்வைப்பதற்கு உதவுவதே சர்வதேச சமூகத்தின் கடமையாகும். தீர்வினை பெற்றுத்தரும் விடயத்தில் இருந்து சர்வதேச சமூகம் தவற முடியாது. அவ்வாறு தவறினால் அவர்களுடைய செயற்பாடு சர்வதேச ரீதியாக அர்த்தமற்றதாக போய்விடும், என்றார் அவர். 

உலகின் வல்லரசு நாடுகள் நடத்திய கூட்டுச் சதியினாலேயே தமிழ் மக்களின் உரிமைக்காக நியாயமானதும், நீதியானதுமான தீவிர ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த விடுதலைப் புலிகளின் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது, என நாட்டின் எதிர் கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்மந்தன் தெரிவித்தார்.

இந்தியா, அமெரிக்கா, ஜரோப்பிய ஒன்றியம், ஐக்கிய ராஜ்ஜியம், கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளே இக்கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக சம்மந்தன் கூறியுள்ளார். தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வினை முன்வைப்பதாக இலங்கை அரசு, அவ்வல்லரசு நாடுகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையினாலேயே ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது என்றும் அவர் தகவல் வெளியிட்டார். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,829. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.