Show all

சென்னை சிறுவன்! சதுரங்க போட்டியில் உலகின் இரண்டாவது இளம் அகவை கிராண்ட் மாஸ்டர்

11,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னையைச் சேர்ந்த 12 அகவை சிறுவன் பிரக்ஞானந்தா. இவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எட்டு அகவைக்கு உட்பட்டோருக்கான போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 10 அகவைக்கு உட்பட்டோருக்கான போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் 10 அகவையிலேயே சர்வதேச மாஸ்டர் பட்டம் வென்று சாதனைப் படைத்தார். 

ஒரு கிராண்ட் மாஸ்டராக மாற மூன்று நிலைகள் உள்ளன. கடந்த ஆண்டு உலக இளையவர் சாம்பியியன்ஷிப் போட்டியில் வென்று அவர் தனது முதல் நிலையையும், கிரீஸ் நாட்டில் நடந்த ரவுண்ட் ராபின் போட்டியில் வென்று இரண்டாவது நிலையையும் எட்டினார். மேலும், பிரக்ஞானந்தா கிராண்ட் மாஸ்டராக, 2500 புள்ளிகள் எடுக்க வேண்டி இருந்தது. 

இந்நிலையில், இத்தாலி நாட்டில் நடைபெற்ற கிரிடின் ஓபன் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் பிரக்ஞானந்தா கலந்துகொண்டார். தனது 9-வது சுற்றுப் போட்டியில், தரத்தில் 2514 புள்ளிகள் பெற்ற நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த புருஜெஸ்சர்ஸ் ரோலாந்தை எதிர்கொண்டார். 

இந்தப் போட்டி டிராவில் முடிந்தது. இதையடுத்து, பிரக்ஞானந்தா தரத்தில் 2500 புள்ளிகளைப் பெற்று இந்தியாவின், தமிழகத்து இளம் அகவை கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையைப் பெற்றார். அதோடு, உலகின் மிகக் குறைந்த அகவையுடைய கிராண்ட் மாஸ்டர்கள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவை, இந்திய சதுரங்க கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் பாராட்டியுள்ளார

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,829.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.