Show all

உலகமே கொண்டாடியது! பன்னாட்டுத் தாய்மொழி நாள் என்றும், உலகத்தாய்மொழி நாள் என்றும் நேற்றைய நாளை

தமிழ்நாட்டில் தமிழ் வளர்ச்சித்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், போன்று பல்வேறு கல்வி நிறுவனங்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அமைப்புகள், அரசியல் கட்சிகள் என்று பல்லோரும் சிறப்பாக இந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.

10,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: நேற்றைய நாளை, பன்னாட்டுத் தாய்மொழி நாள் என்றும், உலகத்தாய்மொழி நாள் என்றும் உலகம் முழுவதும் அந்தந்த மொழியினர் சிறப்பாகக் கொண்டாடினர். 

தமிழ்த்தொடராண்டு-5055 (கிபி1952) இல் நேற்றைய நாளன்று அன்றைய கிழக்கு பாக்கித்தான் தலைநகர் தாக்காவில் வங்காள மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது உயிர்நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக இந்நாள் உலகளாவிய முறையில் மொழி தொடர்பாக நினைவு கூறப்படும் சிறப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது. 

மொழிப்போராட்டம் என்கிற அடிப்படையில், இந்த வங்கப்போராட்டத்தை தமிழ்நாட்டோடு ஒப்பிடுகிற நிலையில் இது மிக மிக சிற்றளவானதுதான். ஆனாலும் அந்த நாடு மொழியடிப்படையில் விடுதலை பெற்ற காரணம் பற்றி, அந்த நாட்டின் போராட்டம் உலகளவில் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது.

வங்காள தேச அரசாங்கத்தின் முயற்சிகள், அனைத்துலக அமைப்புகளது ஆதரவுகள் காரணமாக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (யுனெசுக்கோ) நாளது 09,மாசி,தமிழ்த்தொடராண்டு-5100: (21.02.1999) அன்று பொது மாநாட்டின் 30 ஆவது அமர்வில் இந்நாளை அனைத்துலக தாய் மொழிநாளாக அறிவித்தது. 

பல்வேறு சமூகங்களின் மொழி, பண்பாட்டுத் தனித்தன்மைகளைப் பேணுவதுடன் அவற்றுக்கிடையிலான ஒற்றுமையையும் உருவாக்கும் எண்ணத்தோடு இந்நாளை யுனெசுக்கோ அறிவித்தது. 23 ஆண்டுகளுக்கு முன்பு முதல் இந்நாளானது உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. 

தமிழ்நாட்டில் தமிழ் வளர்ச்சித்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், போன்று பல்வேறு கல்வி நிறுவனங்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அமைப்புகள், அரசியல் கட்சிகள் என்று பல்லோரும் சிறப்பாக இந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.

அந்த வகையில் நாம் தமிழர் கட்சியும் சிறப்பாக கொண்டாடியது. இந்த நாளுக்கு சீமான் வெளியிட்டிருந்த அறிக்;கை விழா கொண்டாட்டத்தில் சிறப்பு கவனம் பெறுகிறது. அந்த அறிக்கை:-

மொழி என்பது வெறுமனே தொடர்புக்கருவி மட்டுமல்ல. அது ஒவ்வொரு தேசிய இனத்திற்குமான முகம், முகவரி, அடையாளம் என எல்லாவுமாகத் திகழ்கிறது. ஒவ்வொரு இனத்திற்குரிய அடையாளக்கூறுகளான கலை, இலக்கியம், பண்பாடு, வழிபாடு, வரலாறு, அறிவியல் என எல்லா விழுமியங்களுக்குமான அடித்தளமாகவும் மொழியே திகழ்கிறது. இதற்கெல்லாம் மேலாக, ஒவ்வொரு தேசிய இனத்தின் உயிரே மொழிதான்!

மொழியென்பது முன்னவர்கள் பின்னவர்களுக்கு விட்டுச்செல்கிற உயிருடைமையாகும். மொழி என்பது மனிதப் படிமலர்ச்சியினுடைய மாபெரும் பாய்ச்சல். தேசப்பரப்பை வரையறுக்கிறபோது நிலப்பரப்பினை வைத்தோ, மதங்களை வைத்தோ வரையறுப்பதில்லை. மொழியை வைத்துதான் தேசங்களும், தேசிய இனங்களும் வரையறைசெய்யப்படுகின்றன. மொழியைத் தொலைத்த இனங்கள் யாவும் மலையளவானாலும் கடுகளவென சிறுத்து வீழ்ந்திருக்கின்றன் மொழியைக் காத்த இனங்களெல்லாம் கடுகளவேயானாலும் மலையளவென உயர்ந்து வாழ்ந்திருக்கின்றன. இது வரலாறு நமக்கு உணர்த்தும் பேருண்மையாகும்.

'நாளை என் தாய்மொழி இறக்குமானால் நான் இன்றே இறந்து போவேன்' என்கிறான் அவா மொழி கவிஞன் ரசூல் கம்சத். அயர்லாந்தின் விடுதலைக்குப் போராடியப் புரட்சியாளர் டிவேலேராவிடம், 'உனக்கு அயர்லாந்து வேண்டுமா? ஐரிசு மொழி வேண்டுமா?' என்று கேட்டபோது, 'என் தாய் நிலத்திற்கு இணையான ஒரு நிலப்பரப்பை உலகில் எங்கேனும் ஒரு இடத்தில் என்னால் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால், என் தாய்மொழி ஐரிசைப் போல ஒரு மொழியைப் பெற முடியாது. எனவே, எனக்கு அயர்லாந்தைவிட என் தாய்மொழி ஐரீசுதான் வேண்டும்' என்றார். அந்த மொழிப்பற்றும், இன உணர்வும் ஒவ்வொரு தமிழ்ப்பிள்ளைக்கும் வர வேண்டும்.

தமிழ்மொழியே உலகின் முதல் மொழியென உலக மொழியியல் பேரறிஞர்கள் ஏற்றுக்கொண்டாடுகிறார்கள். தமிழரே உலகின் முதல் மாந்தனென ஆய்வறிஞர்கள் உரைக்கிறார்கள். உலகிலுள்ள எல்லா இனத்தவர்களும் தங்களது தாய்மொழியில் பேசிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், தமிழர்கள் நாங்கள் மொழிகளின் தாய்மொழியில் பேசிக் கொண்டிருக்கிறோமெனும் பெருமிதமும், திமிரும் கொண்டு நிற்கிறோம்

உலகத்தாய்மொழி நாளில், தமிழ்த்தாயின் பிள்ளைகளின் உளப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமிதமும், மகிழ்ச்சியுமடைகிறோம்!
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,166.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.