Show all

மணமுறிவு வழக்குகளின் எண்ணிக்கை உயர்வைப் பெண்களின் புகைப்பழக்கம் தீர்மானிக்கிறதா! பாகிஸ்தானில்

பாகிஸ்தானில் பெண்களிடையே புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகரித்திருப்பதே, அண்மைக்கால மணமுறிவு வழக்குகளின் எண்ணிக்கை உயர காரணமாக இருப்பதாகப் பாகிஸ்தான் பாராளுமன்ற பெண் உறுப்பினர் தெரிவித்தார்.

17,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: பாகிஸ்தானில் தலைமைஅமைச்சர் இம்ரான் கானின் ஆளும் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற பெண் உறுப்பினர் முனைவர் நவுசீன் ஹமீத், இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற புகையிலை குறித்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றியபோது, பாகிஸ்தானில் பெண்களிடையே புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகரித்திருப்பதே, அண்மைக்கால மணமுறிவு வழக்குகளின் எண்ணிக்கை உயர காரணமாக இருப்பதாக தெரிவித்தார்.

பாகிஸ்தானில் இதுவரை இல்லாத அளவுக்கு மணமுறிவு வழக்குகளின் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியிருப்பதாக அண்மையில் தரவுகள் வெளியான நிலையில் பாராளுமன்ற பெண் உறுப்பினர் இவ்வாறு பேசியிருப்பது பரபரப்பாக பார்க்கப்படுகிறது.

மாநாட்டில் பாராளுமன்ற பெண் உறுப்பினர் முனைவர் நவுசீன் ஹமீத் பேசும்போது, 'கடந்த சில ஆண்டுகளில் மட்டும் பாகிஸ்தானில் புகைப்பிடிக்கும் பெண்களின் எண்ணிக்கை வியக்கத்தக்க அளவில் அதிகரித்திருக்கிறது. புகைப்பிடிக்கும் பழக்கம் இருப்பதனால் புகைப்பிடிப்பவர்களும், அவர்களின் குடும்பத்தாரும் சமூகப்பாடான சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். அப்படி பாதிக்கப்பட்ட பெண்களை தனிப்பட்ட முறையில் நானே பார்த்திருக்கிறேன். புகைப்பிடிக்கும் பெண்கள் திருமணம் செய்த பின்னர் அவர்கள் மணமுறிவைச் சந்திக்க நேர்கிறது. ஏனென்றால் இந்த பழக்கத்தை புகுந்த வீட்டார் ஏற்றுக்கொள்வதில்லை' இவ்வாறு அவர் பேசினார். 

பாகிஸ்தானில் புகைப்பிடிக்கும் பழக்கம் இருக்கும் ஐந்து பேரில் இருவர் பெண்களாக இருப்பதாக பாகிஸ்தான் நாடாளுமன்ற நலங்குத்துறை செயலர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் காலப் மற்றும் கிலானி என்ற அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பு முடிவில், பாகிஸ்தானில் மணமுறிவு வழக்குகள் 58 விழுக்காட்டு அளவுக்கு கடுமையாக அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் உலகிலேயே புகையிலை பொருட்கள் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் நாடுகளுள் பாகிஸ்தானும் ஒன்றாக இருப்பது சிகரெட் பயன்பாட்டு அதிகரிப்புக்கு காரணமாக சொல்லப்படுகிறது.

குறைந்த விலையில் சிகரெட் கிடைப்பதால் மொத்த இறப்புகளில் 11 விழுக்காடு புகைபிடிப்பதால் ஏற்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,086.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.