Show all

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புஇந்தியாவில் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது: இந்திய உள்துறை

பாரீஸ் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவில் ஐ.எஸ் இயக்கம் தாக்குதல் நடத்தும் வாய்ப்பு இருப்பதாக இந்தியா எச்சரித்து உள்ளது.  ஐ.எஸ் அமைப்பு இந்த வாரம் இந்தியாவில் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது என இந்திய உள்துறை கூறி உள்ளது.

சிரியா, ஈராக்கில் இயங்கி வரும் ஐ.எஸ் அமைப்பில் குறைந்தது 23 இந்தியர்கள் இணைந்து உள்ளனர்.  சிரியா மற்றும் ஈராக் நாடுகளில், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதிக்கத்தில் உள்ள பகுதிகளுக்கு அவர்கள் சென்றுள்ளனர்.  இவர்களில் ஆறு பேர், மேற்கத்திய நாடுகளின் விமான தாக்குதல்களில் கொல்லப்பட்டனர்; ஒருவர், இந்தியா திரும்பி விட்டார்.  இவர்கள், மஹாராஷ்டிரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

மேலும், இந்தியாவில் உள்ள 150 பேர் ஐ.எஸ் பிரசாரத்தை தொடர்ந்து அந்த அமைப்பின் ஆதரவாளர்களாக செயல்பட்டு வருகின்றனர். அவர்களை இந்திய உளவுத்துறை கண்காணித்து வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.  கடந்த வருடம் பெங்களூரில் மெஹ்தி மஸ்ரூர் பிஸ்வாஸ் என்பவரைப் போலீசார் கைது செய்தனர்.  இவர் ஷாமி என்ற பெயரில் ஐ.எஸ் இயக்கத்திற்கான பிரசார டுவிட்டர் கணக்கை நடத்தி வந்தார்.

இஸ்லாமிய அரசின் பிரசாரத்தை தொடர்ந்து, 150 இந்தியர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர்களாக இருந்து வந்து உள்ளனர் என உளவுத்துறை எச்சரித்துள்ளது.

ஐ.எஸ் அமைப்புக்கு ஆதரவாக இந்தியாவில் இருந்து செயல்படுபவர்களை தேசிய தொழில் நுட்ப ஆராய்ச்சி அமைப்பு வழிகாட்டுதலின்படி உளவுத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த பட்டதாரி இளைஞர் மற்றும் கரூரை சேர்ந்த அவரது நண்பர் ஆகிய இருவரும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர முடிவு செய்து துபாய்க்கு சென்றுள்ளனர்.  கடந்த ஆகஸ்ட் மாதம் சுற்றுலா பயணிகள் போல் பெங்களூருவிலிருந்து துபாய் சென்ற இருவரும் பின்னர் அங்கிருந்து துருக்கி சென்றுள்ளனர்.

சிரியா எல்லை பகுதியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் தங்கி எல்லை தாண்டி செல்வது குறித்து இருவரும் விசாரித்திருக்கின்றனர்.  இவர்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த தங்கும் விடுதி ஊழியர் துருக்கி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்.  இருவரையும் பிடித்து விசாரித்த துருக்கி அதிகாரிகள் அவர்கள் இருவரும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேருவதற்காக வந்து இருப்பதை கண்டுபிடித்தனர்.  இதையடுத்து இருவரும் துருக்கியிலிருந்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.

பெங்களூருவுக்கு விமானம் மூலம் வந்து சேர்ந்த அவர்களைப் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்திய உளவு துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்து அவர்களது குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தனர்.  இருவரையும் தொடர்ந்து கண்காணித்து வரும் உளவு துறை அதிகாரிகள் அவர்கள் துருக்கி வரை செல்ல உதவி செய்தவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.