Show all

உலகளாவிய அமைதிக் குறியீட்டுப் பட்டியலில், இந்தியாவுக்கு 141வது இடம்

இவ்வுலகம் மிகுந்த ஆபத்தான இடமாக மாறி வருகிறது என்றும், இன்று (ஜூன்,09,2016.)  உலகில் பத்து நாடுகள் மட்டுமே சண்டைகளே இன்றி உள்ளன என்றும், உலகளாவிய அமைதிக் குறியீட்டை வெளியிட்ட ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆண்டுதோறும் அமைதியான நாடுகள் பற்றி ஆய்வு நடத்திவரும் உலக பொருளாதார மற்றும் அமைதி நிறுவனம், வெளியிட்டுள்ள உலகளாவிய அமைதிக் குறியீட்டுப் பட்டியலில், எக்காலத்திலும் இருந்ததைவிட கடந்த பத்து ஆண்டுகளில் உலகில் அமைதி மிகவும் அச்சுறுத்தலாக உள்ளது என்றும், இந்நிலை உலகளாவிய அமைதி சமத்துவமின்மை இடைவெளியை உருவாக்குகின்றது என்றும் கூறப்பட்டுள்ளது.

போஸ்ட்வானா, சிலே, கோஸ்டா ரிக்கா, ஜப்பான், மொரிஷீயஸ், பனாமா, கத்தார், சுவிட்சர்லாந்து, உருகுவாய், வியட்நாம் ஆகிய பத்து நாடுகளில் மட்டுமே சண்டை இடம்பெறவில்லை என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

கடந்த ஆண்டில் 81 நாடுகள் மிகவும் அமைதியாக இருந்தன, ஆனால் அது தற்போது 79 ஆக மாறியுள்ளது என்றும், கடந்த 12 மாதங்களில் 39 நாடுகளில் அரசியல் நிலையற்ற தன்மை மோசமாகியுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

உலகில், 2015ம் ஆண்டுக்கான அமைதியான நாடுகள் பட்டியலில், ஐஸ்லாந்து மீண்டும் முதலிடத்தில் உள்ளது, அதைத் தொடர்ந்து, டென்மார்க், ஆஸ்ட்ரியா, நியூசிலாந்து, போர்த்துக்கல் என, நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

இப்பட்டியலில் இந்தியாவுக்கு 141வது இடமே கிடைத்துள்ளது. 2014ம் ஆண்டில் இந்தியா 143வது இடத்தில் இருந்தது. இப்பட்டியலில் பாகிஸ்தான் 153வது இடமும், ஆப்கானிஸ்தான் 160வது இடமும், கடைசி இடமான 163வது இடத்தை சிரியாவும் பெற்றுள்ளன. தெற்காசியாவில் சிறந்த இடத்தை பிடித்துள்ள பூட்டான், இப்பட்டிலில் 13வது இடத்தில் உள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.