Show all

காவல்துறை அதிகாரங்களைத் தாருங்கள். சகல வன்முறைகளையும் நிறுத்திக் காட்டுகின்றோம்: சி.வி.விக்னேஸ்வரன்

22,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஒரு பெண் தன்னந்தனியாக இருட்டிய வேளையில் முழுமையாக நகைகளை அணிந்து கொண்டு செல்ல முடிந்தாலே அந்த நாடு விடுதலை அடைந்த நாடாக கொள்ள முடியும் என்று காந்தியார் சொன்னதாக நாம் அடிக்கடி மேற்கோள் காட்டிக் கொள்வது உண்டு. அந்த வகையான விடுதலைக் காற்றை பிரபாகரன் காலத்தில் தமிழ் மக்கள் அனுபவித்தார்கள் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சொல்வது, அப்படியா என்று வியப்படையத் தக்கதாகவும், அப்படிப் பட்ட தலைவன் நம் தமிழ் சமுதாயத்திற்கு கிடைத்தும் நம்மால் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லையே என்கிற வெட்கமும் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. 

'பிரபாகரன் காலத்தில் எம் மக்கள் பாதுகாப்பாக இருந்தார்கள் என்ற உண்மையைக் கூறுவதால் நாங்கள் எவரும் பயங்கரவாதிகள் ஆகிவிடமுடியாது' என இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் திங்கள்கிழமையன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இன்றைய சூழலில் தமிழீழ விடுதலை புலிகளை உருவாக்கவேண்டும் என்பதே எங்களுடையது முதன்மை நோக்கம் என கருத்தை தெரிவித்திருந்தார். அவரது கருத்து தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் இன்றைய நாளில் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள செய்திக்குறிப்பில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

'நாங்கள் எங்கள் உரிமைகள் பற்றியோ பாதுகாப்பு பற்றியோ பேசும் போது எம்மைப் பயங்கரவாதிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் அழைப்பதை நிறுத்துமாறு கோருகின்றேன். வடமாகாணத்தின் தற்காலப் பாதுகாப்பற்ற நிலையையும் முன்னைய பாதுகாப்பான நிலையையும் பற்றி விமர்சிக்க எவருக்கும் உரிமை உண்டு' எனக் குறிப்பிட்டுள்ளார்.

'நான் விஜயகலா மகேஸ்வரன் கலந்துகொண்ட கூட்டத்தில் இருந்தேன். ஆனால் விஜயகலா கூறிய சொற்களைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. ஒலிவாங்கியில் ஏதோ பிழை இருந்தது. பின்னர் அவரிடமே கேட்டறிந்தேன். இன்றைய பாதுகாப்பற்ற நிலை மாறி பாதுகாப்பான சூழல் ஏற்பட வேண்டும் என்று அவர் கூறியதில் என்ன பிழை என்று எனக்குத் தெரியவில்லை' எனக் குறிப்பிட்டுள்ளார்.

'முன்பு எமது மக்கள் பாதுகாப்பாக வாழ்ந்து வந்தார்கள் என்பது உண்மை. போர்க்காலத்தில் ஒரு பெண் தனிமையில் நகை நட்டு அணிந்து கொண்டு சூரிய அஸ்தமனத்தின் பின்னர் வீடு நோக்கி நடந்து சென்றால் அவருக்கு எந்தத் தொந்தரவோ பாதிப்போ ஏற்படாதிருந்தது என்பது உலகறிந்த உண்மை. இன்று அப்படியா? வாள்வெட்டு, வன்புணர்ச்சி, வன்செயல்கள், போதைப்பொருள் பாவனைகள் அதிகரித்து வருகின்றன. இலஞ்ச ஊழல்கள் மலிந்து காணப்படுகின்றன. 

அதனால்தான் நான் இராணுவத்தைத் திரும்ப அழையுங்கள், காவல்துறை அதிகாரங்களை எமக்குத் தாருங்கள். சகல வன்முறைகளையும் நிறுத்திக் காட்டுகின்றோம் என்று கூறியுள்ளேன்' என அந்த அறிக்கையில் ஆவேசமாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

'நிலைமையைப் புரிந்து கொள்ளாமல் தெற்கில் உள்ளவர்கள் தமது உள்ளார்ந்த வெறுப்புக்களைப் பிரதிபலிப்பது வருத்தத்திற்கு உரியது. இவ்வாறான தெற்கத்தையவர்களின் நடவடிக்கைகள் விஜயகலாவிற்கு எதிரானது அல்ல. தமிழர் மீதான சந்தேகம், வெறுப்பு, பயம் யாவற்றையும் பிரதிபலிக்கின்றது' என்று விமர்சித்துள்ளார்.

'எமது பேச்சுக்களை விமர்சிக்காமல் எங்களுடன் ஒற்றுமையாகப் பேச முன்வாருங்கள். சமஸ்டி அரசியல் அமைப்பொன்றை நிறுவ முன்வாருங்கள் என்று தெற்கத்தைய அரசியல்வாதிகளிடம் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்'

'அத்துடன் அந்த நாள் இன்று வந்திடாதோ என்று விஜயகலா கூறுவதால் அவர் தீவிரவாதி ஆகிவிட முடியாது. புலிகள் காலத்தில் எம் மக்கள் (யுத்தத்தில் ஏற்பட்ட பாதிப்புக்களை விட) பொதுவாகப் பாதுகாப்பாக இருந்தார்கள் என்பது உலகறிந்த உண்மை. ஆகவே விஜயகலா தனது கடமைகளைத் தொடர்ந்து பணியாற்ற அவரின் கட்சி இடமளிக்க வேண்டும். அவர் தேசியக் கட்சியில் இடம்பெறுவதால் தமிழச்சி என்ற

அந்தஸ்தை இழந்தவராகக் கணிக்கக்கூடாது. விஜயகலா அவர்களின் சுதந்திரமும் தனித்துவமும் பாதுகாக்கப்பட வேண்டும்' என்று தனது அறிக்கையில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் குறிப்பிட்டிருக்கிறார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,840.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.