Show all

செருமனி நாட்டில் மோடி! மீண்டும் தொடங்கி விட்டது தலைமைஅமைச்சர் உலகப்பயணம்

இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளாக நிலவி வந்த உறுதியற்ற அரசியல் சூழலை ஒரு பொத்தானை அழுத்தி, இந்திய மக்கள் முடிவுக்குக் கொண்டுவந்தனர் என்று தொடர்ந்தார் மோடி தன் பேச்சை.

20,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: இந்த ஆண்டின் முதல் உலகப்பயணத்தில் தலைமைஅமைச்சர் மோடி, செருமனி, டென்மார்க் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளார். 

செருமானி நாட்டில் இந்தியர்கள் நடுவே உரையாற்றிய இந்தியத் தலைமைஅமைச்சர் மோடி, என்னைப் பற்றியோ, எனது அரசைப் பற்றியோ பேச இங்கு பெர்லின் வரவில்லை. கோடிக்கணக்கான இந்தியர்களின் திறன்களைப் பற்றி உங்களுடன் பேசவும், அவர்கள் குறித்துப் பேசவும் விரும்புகிறேன். கோடிக்கணக்கான இந்தியர்கள் என்று நான் குறிப்பிடுவது, இந்தியாவில் வாழும் இந்தியர்களை மட்டும் குறிப்பிடவில்லை. இங்கு வசிப்பவர்களும் அடங்குவர். உலகின் ஒவ்வொரு மூலையிலும் வாழும் இந்தியாவின் குழந்தைகள் அனைவரும் இந்தியர் என்ற சொல்லில் அடங்குவார்கள் என்று பேச்சைத் தொடக்கினார் மோடி. 

இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளாக நிலவி வந்த உறுதியற்ற அரசியல் சூழலை ஒரு பொத்தானை அழுத்தி, இந்திய மக்கள் முடிவுக்குக் கொண்டுவந்தனர் என்று தொடர்ந்தார் மோடி தன் பேச்சை.

அதென்ன ஒரு பித்தானை அழுத்தி முடிவுக்கு கொண்டுவருவதா? என்று குழப்ப வேண்டாம். ஒட்டுமொத்த மக்களும் சேர்ந்தே ஒரு தாமரை பித்தானை அமுக்கினார்கள் என்றே தெரிவிக்கிறார் என்றே புரிந்து கொள்வோம்.

30 ஆண்டுகளுக்குப் பிறகு, எட்டு ஆண்டுகளுக்கு முன்பு முழு பெரும்பான்மை உடன் ஒரு அரசு தேர்ந்தெடுக்கப்பட்டது, அந்த அரசை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்திய மக்கள் மீண்டும் பலப்படுத்தி உள்ளனர். 

இந்த ஆண்டு நாம் 75வது விடுதலை நாளைக் கொண்டாடுகிறோம். விடுதலை பெற்ற இந்தியாவில் பிறந்த முதல் தலைமைஅமைச்சர் நான். விடுதலை அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் நேரத்தில் இந்தியா எந்த உச்சத்தில் இருக்கப்போகிறதோ, அந்த இலக்கை நோக்கி இந்தியா படிப்படியாக முன்னேறி வருகிறது. 

சீர்திருத்தங்கள் மூலம் இப்போது அரசு நாட்டை மெல்ல மாற்றி அமைத்து வருகிறது. தேவையான சீர்திருத்தங்களைச் செய்யத் துணிச்சல் தேவை. இன்று இந்தியாவில் மக்களின் வாழ்க்கைத் தரம், கல்வித் தரம் என அனைத்தும் முன்னேறி வருகிறது. நாடு, அதிகாரம், அரசு அலுவலகங்கள் எல்லாம் முன்பே இருந்த அதே தான் உள்ளது. ஆனால் இப்போது நாம் முன்னெப்போதையும் விடச் சிறந்த முடிவுகளைப் பெறுகிறோம். இப்போது அரசு இயந்திரம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,237.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.