Show all

யார்? அல்லது என்ன? இலங்கை கொண்டாடும் அந்த ஆசியாவின் அரசி!

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார சூழ்நிலையில், அண்மையில் கண்டெடுக்கப்பட்ட இரத்தினக் கல்லை உலகினருக்கு அறிமுகம் செய்து, பன்னாட்டுச் சந்தையில் அதிக விலைக்கு இதை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது- அந்தக் கல்லுக்கு ஆசியாவின் அரசி என்று பெயர் சூட்டிக் கொண்டாடும் இலங்கை.

01,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: பெயர் விளங்கும் வகையில், இலங்கையில் உள்ள இரத்தினாபுரம் என்கிற இடத்தில் அதிக அளவிலான விலை உயர்ந்த இரத்தினக் கற்கள் கிடைத்து வருகின்றன.

உலகின் மிகப்பெரிய, விலை உயர்ந்த நீல இரத்தினக் கல் இலங்கையில் கிடைத்துள்ளது. இலங்கையின் தலைநகரான கொழும்புவில் இருந்து 85 கிலோ மீட்டர் தொலைவில் இந்த இரத்தினாபுரம் உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக ஏராளமான விலை உயர்ந்த இரத்தினக் கற்கள் இந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் 3 மாதத்திற்கு முன்பு மிக பெரிய நீல நிற இரத்தினக் கல் ஒன்று அங்கு கிடைத்தது. பின்னர் இதை பற்றி ஆய்வு குழுவுக்கு தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் அந்த நீலக் கல்லை ஆராய்ந்து பார்த்துவிட்டு இது தான் உலகிலேயே மிக பெரிய நீல இரத்தினக் கல் என்று அறிவித்தனர். இரத்தினக் கற்கள் மற்றும் நகைகள் ஆணையம் என்கிற அரசு நடத்தும் நிறுவனமானது இந்த விலை உயர்ந்த நீல இரத்தினக் கல்லிற்கு சான்றளித்துள்ளது. 

விரைவில் பன்னாட்டுச் சந்தையில் இந்த நீலக்கல்லை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்த இரத்தினக் கல்லை கொண்டு இன்னும் சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக இரத்தினக் மற்றும் நகைகள் அதிகார ஆணையத்தின் தலைவர் திலக் வீரசிங்கே தெரிவித்துள்ளார்.

இந்த பெரிய நீல கல்லிற்குள் இன்னும் சில தூய்மையான கற்கள் இருக்கக்கூடும், ஏற்கனவே ஒன்று அல்லது இரண்டு தூய்மையான கற்களை வெளியில் இருந்து பார்க்க முடிகிறது என்று கூறியுள்ளார். இந்த இரத்தினக் கல்லை இன்னும் பன்னாட்டு இரத்தினக் நிறுவனங்கள் சான்றளிக்கவில்லை. மேலும் இந்த நீலக் கல்லின் சிறப்பம்சமாக இதில் உள்ள அலுமினியம் ஆக்ஸைடு, டைட்டானியம், இரும்பு மற்றும் நிக்கல் ஆகியவற்றை மாணிக்கக் கல் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த விலை உயர்ந்த நீல இரத்தினக் கல்லிற்கு 'ஆசியாவின் அரசி' என்று பெயர் சூட்டி உள்ளனர். இந்தக் கல் சுமார் 310 கிலோ எடை கொண்டது. இதன் மதிப்பை ஆய்வு செய்தபோது மிக அதிக விலைக்கு இது போகும் என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார சூழ்நிலையில் இந்த இரத்தினக் கல்லை உலகினருக்கு அறிமுகம் செய்து, பன்னாட்டுச் சந்தையில் அதிக விலைக்கு இதை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதே இரத்தனாபுரம் நகரில் தான் கடந்த ஆண்டில் உலகிலேயே மிக பெரிய விண்மீன் வடிவ இரத்தினக் கல்லை கண்டெடுத்தனர்.

தற்செயலாகத் தண்ணீருக்காக அந்த இடத்தில தோண்டிய போது இந்த விலை உயர்ந்த விண்மீன் வடிவ இரத்தினக் கிடைத்தது. அந்த கல்லின் எடை சுமார் 510 கிலோ இருந்தது. அதற்கு ஆகூழ் இரத்தினக்கல் என்று பெயர் வைத்தனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,099.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.