Show all

குறளிச்செலாவணியை தடைசெய்யும் முயற்சி, வேண்டவே வேண்டாம்! இந்தியாவுக்கு பரிந்துரைக்கும் கீதா கோபிநாத்

பன்னாட்டு நாணய நிதியத்தின் துணை நிர்வாக இயக்குனராக நியமனம் செய்யப்படவுள்ள இந்தியா மரபுரிமையரான கீதா கோபிநாத், வளர்ந்து வரும் பொருளாதார நாடுகள் குறளிச்செலாவணியைத் தடை செய்வதற்குப் மாற்றாக அதை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று இந்தியாவிற்கு ஆலோசனை கூறியுள்ளார்.

02,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: பன்னாட்டு நாணய நிதியத்தின் துணை நிர்வாக இயக்குனராக இந்தியா வம்சாவாளியைச் சேர்ந்த கீதா கோபி நாத் நியமனம் செய்யப்படவுள்ளார்.

பன்னாட்டு நாணய நிதியத்தின் பொருளாதார வல்லுனராக இருந்து வரும் கீதா கோபிநாத், தலைமைஅமைச்சர் நரேந்திர மோடியை வியாழக்கிழமையன்று சந்தித்துப் பேசினார்.

பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சிக்கான ஒன்றியக்குழு (நேஷனல் கவுன்சில் ஆஃப் அப்ளைடு எக்னாமிக் ரிசர்ச்) ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் பேசிய கீதா கோபிநாத், வளர்ந்து வரும் பொருளாதார நாடுகள் குறளிச்செலாவணியைத் (கிரிப்டோகரன்சி) தடை செய்வதற்குப் பதிலாக அதை ஒழுங்குபடுத்த வேண்டும் என கூறியுள்ளார். மேலும் உலகளாவிய கொள்கைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

எந்தவொரு நாடும் தனிப்பட்ட முறையில் தாங்களாகவே இந்த சிக்கலை தீர்க்க முடியாது என்று கூறியுள்ளார். ஏனெனில் குறளிச்செலாவணி பரிமாற்றங்களால் எல்லை தாண்டிச் செல்ல முடியும். அதற்கு உடனடியாக உலகாளாவிய கொள்கை தேவை எனவும் சுட்டிக் காட்டியுள்ளார்.

மேலும் தற்போது குறளிச்செலாவணி என்பது உலகளாவிய அச்சுறுத்தல் அல்ல, பெரும்பாலான குறளிச்செலாவணி சந்தைகள் இந்தியாவில் இல்லை. ஆக இந்தியாவில் தடை விதிப்பது அவ்வளவு எளிதாக இருக்காது என கூறியுள்ளார்.

தற்போதைக்கு தனியார் குறளிச்செலாவணிகளுக்குத் தடை விதிக்கவும், இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி சார்பில் அதிகாரப்பாட்டு எண்ணிமப் பணம் வெளியிடவும் நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் சட்டமுன்வரைவு கொண்டு வரப்படும் என்று ஒன்றிய அரசு அண்மையில் கூறியிருந்தது. ஆனால், இந்த சட்டமுன்வரைவை நடப்பு கூட்டத்தொடரில் ஒன்றிய அரசு கொண்டு வராது என்று ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. எப்போது சட்டமுன்வரைவு கொண்டு வந்தாலும், அது நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

எத்தனையோ உள்நாட்டு விடையங்களில், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முடிவு எடுத்துவிடுகிற ஒன்றிய பாஜக அரசால்- இந்த உலகளாவிய குறளிச்செலாவணிப்பாட்டில் மட்டும் சிந்திக்கும் ஆற்றலைக் கொஞ்சம் பயன் படுத்த வேண்டிய கட்டாயமும், பொருளாதார வல்லுனர்களின் நெருக்குதல்களும் இருந்து வருகிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,100.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.