Show all

இந்திய மரபுரிமையர் கீதா கோபிநாத்! பன்னாட்டு நிதியத்தின் முதன்மை துணை நிர்வாக இயக்குனராகிறார்

இந்தியர், இந்திய மரபுரிமையர் உலகளாவிய நிறுவனங்களில் பணியமர்த்தப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நடப்பில் அந்தப் பட்டியலில் இடம் பெறுகிறார் கீதா கோபிநாத்

18,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: பன்னாட்டு நிதியத்தின் (ஐ.எம்.எப்) முதன்மை துணை நிர்வாக இயக்குனராக இந்திய மரபுரிமையர் கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார். இது, பன்னாட்டு நிதியத்தில் 2-வது இடத்தில் உள்ள உயர் பதவியாகும். 

தற்போது பன்னாட்டு நிதியத்தின் தலைமை பொருளாதார வல்லுனராக உள்ளார் கீதா கோபிநாத். இவரது மூன்றாண்டு பதவிக்காலம், நடப்பு மாதம் முடிவடைய உள்ளது. பதவிக்காலம் முடிந்த பின், அடுத்த மாதம், 'ஹார்வர்டு' பல்கலைகழகத்தில் பேராசிரியர் பணிக்கு மீண்டும் திரும்ப இருப்பதாக, அண்மையில் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், தற்போது துணை நிர்வாக இயக்குனராக இருக்கும் ஜெப்ரி ஒகமோட்டோவின் பதவிக் காலம் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் முடிவடைய உள்ள நிலையில், கீதா கோபிநாத் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

பன்னாட்டு நிதியத்தின் வரலாற்றில், அதன் தலைமை பொருளாதார வல்லுனர் பதவியை ஏற்ற முதல் பெண் கீதா கோபிநாத் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது பன்னாட்டு நிதியத்தின் நிர்வாக இயக்குனராக கிறிஸ்டாலினா ஜார்ஜிவா உள்ளார். புதிய பொறுப்பை கீதா கோபிநாத் ஏற்பதன் வாயிலாக, இவ்வமைப்பின் மிக உயர்ந்த இரு பதவிகளையும் பெண்களே நிருவகிக்க உள்ளனர்.

உலகப் பொருளாதாரத்துக்கு உதவுவதில் கீதா கோபிநாத்தின் அறிவார்ந்த தலைமையை அங்கீகரிக்கும் வகையிலும், பொருளாதார மந்தநிலையில் இருந்து உலகத்தை விடுவிக்க பாடுபட்டதற்காகவும் அவருக்கு இந்த பதவி அளிக்கப்படுகிறது என பன்னாட்டு நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டாலினா ஜார்ஜிவா தெரிவித்துள்ளார்.

கீதா கோபிநாத் ஏற்கனவே பன்னாட்டு நிதியத்தின் தலைமை பொருளாதார வல்லுனராக 3 ஆண்டாக பணியாற்றியவர். இவர் அமெரிக்கவாழ் இந்திய பெண்மணி ஆவார். அப்பதவியை வகித்த முதலாவது பெண்ணும் இவரே ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,087.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.