Show all

தேர் மாதிரியான வடிவமைப்பில் உலங்கு வானூர்தி! விரைவில் சந்தைக்கு வருகிறது

நீண்ட காலமாக, உலங்கு வானுர்தி பயன்பாட்டில் இருந்த போதும், அது பெரிதாக மக்கள் பயன்பாட்டிற்கு வராத நிலையில், மக்கள் பயன்பாட்டிற்காக தேர் மாதிரியான வடிவமைப்பில் விரைவில் சந்தைக்கு வருகிறது புதியவகை உலங்கு வானூர்தி 

21,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: மக்கள் பயன்பாட்டிற்காக தேர் மாதிரியான வடிவமைப்பில் விரைவில் சந்தைக்கு வருகிறது புதியவகை உலங்கு வானூர்தி 

ஆசியாவின் முதல் பறக்கும் தேராக, சென்னை நிறுவனம் உருவாக்கி இருக்கும் இந்தப் பறக்கும் தேர் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.

இலண்டனில் நடைபெற்ற உலகின் மிகப்பெரும் உலங்கி தொழில் நுட்ப விழாவில் சென்னையை சேர்ந்த விணாடா ஏரோமொபிலிட்டி நிறுவனம் ஆசியாவின் முதல் தேர் மாதிரியான வடிவமைப்பில் பறக்கும் உலங்கு வானூர்தியை அறிமுகம் செய்தது.
பறக்கும் தேரின் காணொளியை அந்நிறுவனம் தனது வலையொளி காட்சிமடையில் பதிவேற்றம் செய்து இருக்கிறது. அதில் தேரின் உடல் மற்றும் இருக்கை அமைப்பு எவ்வாறு உள்ளன என தெளிவாக தெரிகிறது. இந்த தேரில் இருவர் பயணிக்க முடியும். இதன் கதவுகள் இறக்கை போன்று திறக்கும்படி வடிவமைக்கப்பட்டு உள்ளன.

இந்தப் பறக்கும் தேர் தொடர்ச்சியாக 60 நிமிடங்களுக்கு மணிக்கு சுமார் 120 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்டிருக்கிறது. மேலும் இது தரையில் இருந்து சுமார் 3 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும். இந்த தேர் இயற்கை எரிவாயு மற்றும் மின்சாரம் கொண்டு இயங்குகிறது.

விணாடாவின் இந்தவகை பறக்கும் தேர் இரண்டு ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை பொதுமக்கள் போக்குவரத்து, அவசர தேவை, மற்றும் பொருட்களை கொண்டுதருதல் போன்ற செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தலாம்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,029.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.