Show all

உலகின் முதன்முறையாக, தென்முனைக் கண்டம் சென்ற பயணிகள் விமானம்!

ஹைபிளை என்ற தனியார் விமான நிறுவனம் தனது ஏர் பஸ் ஏ340 வகை விமானத்தை தென்முனைக் கண்டத்தில் தரையிறக்கி சாதனை படைத்துள்ளது. 

09,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: ஏர்பஸ் ஏ340 விமானம் முதல் முறையாக தென்முனைக் கண்டத்தில் (அண்டார்டிகா) தரையிறங்கி சாதனை படைத்துள்ளது.

'ஹைபிளை' என்ற தனியார் விமான நிறுவனம் தனது ஏர் பஸ் ஏ340 வகை விமானத்தை தென்முனைக் கண்டத்தில் தரையிறக்கி இந்தச் சாதனையை படைத்துள்ளது. 

தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் இருந்து புறப்பட்ட இந்த விமானம், 2,500 நாட்டிகல் மைல்கள் தூரம் பறந்து, தென்முனைக் கண்டத்தில் உள்ள வுல்ப்ஸ் ஃபேங் நிறுவனத்தின் சாகச சுற்றுலா தங்களுக்குத் தேவையான பொருட்களை கொண்டு சேர்த்தது. 

இதன்மூலம் பனிப்பாறைகள் நிறைந்த தென்முனைக்கண்டத்தில் அண்டார்டிகாவில் முதன்முறையாக பயணிகள் விமானம் தரையிறங்கி சாதனை படைத்துள்ளது. விமானம் தரையிறங்கும் வகையில் தற்காலிகமாக இறங்குதளம் தயார் செய்யப்பட்டிருந்ததாகவும், தரையிறங்குவதில் ஏந்தச் சிக்கலும் ஏற்படவில்லை என்றும் அந்த விமானத்தின் விமானி கார்லோஸ் மிர்புரி தெரிவித்தார்.

 புவியலேயே மிகவும் குளிர்ந்த பகுதி இதுவாகும். புவியின் தென்முனையில் அமைந்திருப்பதனால் இப்பகுதிக்கு ஞாயிற்றுவெப்பம் மிகக் குறைந்த அளவே வந்துசேர்கிறது. இதன் காரணமாகக் கண்டம் முழுவதும் ஏறக்குறையப் பனிக்கட்டியினால் மூடப்பட்டுள்ளது. 

ஆண்டில் ஆறு மாதங்கள் ஞாயிற்று வெளிச்சமே இருக்காது. இது ஆண்டு மழைப் பொழிவு 200 மில்லிமீட்டர் அளவு மட்டுமே பெறக்கூடிய பனிக்கட்டிப் பகுதி ஆகும். இங்கே நிரந்தர மக்கள் குடியிருப்பு எதுவும் கிடையாது, வௌ;வேறு உலக நாடுகளின் ஆய்வுகூடங்கள் மட்டுமே இருக்கின்றன. புவியில் உள்ள நன்னீரில் கிட்டத்தட்ட 70 விழுக்காடு இங்கேயே உள்ளது. 

புவி வெப்பமாதலினால் இங்குள்ள பனி உருகிவருகின்றது. இதன் மூலம் கடல் நீர் மட்டம் உயர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. புவி வெப்பமாதலால் உருகும் பனிப்பாறைகள், கடல் நீர்மட்டம் உயர்வதை மேலும் கூட்டுகின்றன என இயல்அறிவர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,078.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.