Show all

ஆசிய பணக்காரர் பட்டியலில் முதலிடத்திற்கு முந்திய கவுதம் அதானி! ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளி

கடந்த இரண்டு ஆண்டுகளில் அதானி குழும பங்குகள் விலை 600 விழுக்காடு அளவுக்கு அதிகரித்துள்ள நிலையில்- ஆசிய பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார் தொழிலதிபர் கவுதம் அதானி.

27,தை,தமிழ்த்தொடராண்டு-5123: ஆசிய பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார் தொழிலதிபர் கவுதம் அதானி. தொடர்ந்து முதலிடத்தில் இருந்துவந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி இரண்டாமிடத்துக்கு தள்ளப்பட்டார்.

அகவை 59 கவுதம் அதானின் சொத்து மதிப்பு 8,850 கோடி டாலராக உயர்ந்துள்ளது. முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 8,790 கோடி டாலராக உள்ளது.

கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 1,200 கோடி டாலர் அதிகரித்த நிலையில், முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்த ஆண்டில் உலகிலேயே அதிகபட்ச வருமானத்தை ஈட்டிய தொழிலதிபர் என்ற பெருமையும் இவரைச் சாரும்.

நிலக்கரி சுரங்கத் தொழிலில் ஈடுபட்ட அதானி நிறுவனம் ஆஸ்திரேலியாவில் நிலக்கரி சுரங்கத்துக்கு பெற்ற அனுமதி பெரும் சர்ச்சைக்குள்ளானது.

பருவ நிலை மாறுபாடு விழிப்புணர்வு ஆதரவாளர்கள் பலரும் நிலக்கரி சுரங்கத் தொழில் குறித்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் மரபுசாரா எரிசக்தித் தொழிலில் அதிக கவனம் செலுத்தி வருகிறது அதானி குழுமம். இது தவிர விமான நிலைய பராமரிப்பு, சேனைத் தளவாட ஒப்பந்த பணி உள்ளிட்ட தொழில்களில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. கடந்த 2 ஆண்டில் அதானி குழும பங்குகள் விலை 600விழுக்காடு அளவுக்கு அதிகரித்துள்ளன.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி அடுத்த 3 ஆண்டுகளில் பசுமை சார்ந்த எரிசக்திக்கென 1,000 கோடி டாலர் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளார். அதானி அடுத்த 8 ஆண்டுகளில் 7,000 கோடி டாலர் முதலீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,154.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.