Show all

கொரோனா அடுத்தஅலை குறித்து அச்சமூட்டும் தகவல்களும், சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கைகளும்

எந்த வகை குறுவி வந்தாலும் முகமூடி அணிவது, தனிமனித இடைவெளி, அடிக்கடி கைகழுவுதல், அதிக மக்கள் கூட்டமுள்ள இடத்தைத் தவிர்ப்பது மூலம் நோய் பரவலைத் தடுக்க முடியும். தடுப்பூசியையும் அனைத்து மக்களுக்கும் செலுத்துவதற்கான வேலைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்பது புதியவகை குறுவியையும் சமாளிக்க முடியும் என்கிற நம்பிக்கை

10,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: இந்திய அரசு, அனைத்து நாடுகளிலுமிருந்து பயணிகள் இந்தியாவுக்கு வருவதற்கான தடையை நீக்கியுள்ளது. இதனால் தென்ஆப்பிரிக்காவில் உலாவந்து கொண்டிருக்கும் முப்பது முறை உருமாறிய புதிய குறுவி இந்தியாவில் எளிதில் நுழைந்துவிடும்;. அப்படி நுழையும் பட்சத்தில் மூன்றாம் அலை ஏற்படலாம் என்று மருத்துவர்கள் கணிக்கின்றனர்.

கோவிட்-19 இரண்டு அலைகளைப் பார்த்துவிட்டோம். நோய்க்கு தடுப்பூசியும் கண்டறிந்து செலுத்திக்கொண்டிருக்கிறோம். இனிமேல் கொரோனா குறுவிக்கு முடிவு கட்டிவிடலாம், என்று சற்று ஆசுவாசப்பட்டுக்கொண்டிருந்த நமக்கெல்லாம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது கொரோனா குறுவியின் ஒரு புதிய வகை. தென்ஆப்பிரிக்க நாடுகளில் முப்பது முறை உருமாறிய புதிய குறுவி பரவி வருவதான செய்தி குறித்து, மருத்துவ நிபுனர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். 

இந்தக் குறுவி புதிய வகை என்பதாலும் அது நேரடியாக ஸ்பைக் புரதத்தைப் பாதிப்பதாலும் தற்போது பயன்பாட்டிலுள்ள தடுப்பூசியின் செயல்திறனையும் கேள்விக்குறியாக்குமோ என்று கருதப்படுகிறது.

இதுபற்றிப் பேசியுள்ள உலக நலங்கு நிறுவனத்தின் தொழில்நுட்பத் துறை தலைவர் டாக்டர் மரியாக வான் கெர்கோவ், புதிய குறுவி பற்றி எங்களுக்கு அதிகம் தெரியவில்லை. தென்னாப்பிரிக்காவில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்களிடம் இது காணப்படுகிறது. இந்த வகை குறுவியானது அதிகமாக உருமாற்றம் அடைகிறது என்பது மட்டும்தான் அறிவோம். பொதுவாகவே, ஒரு குறுவி அதிகமாக உருமாற்றம் அடையும்போது குறுவியின் செயல்பாட்டுத்தன்மையிலும் மாறுதல்கள் காணப்படும் என்று தெரிவித்துள்ளார். 

மேலும், புதிய குறுவிக்கான தடுப்பூசி, சிகிச்சை முறைகள் குறித்து உலக நலங்கு நிறுவனம் பல்துறை நிபுணர்களுடன் இன்று ஓர் ஆலோசனைக்கூட்டத்தை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்திய அரசு, அனைத்து நாடுகளிலுமிருந்து பயணிகள் இந்தியாவுக்கு வருவதற்கான தடையை நீக்கியுள்ளது. இதனால் இந்தியாவில் புதிய குறுவி எளிதில் நுழைந்துவிடும்; அப்படி நுழையும் பட்சத்தில் மூன்றாம் அலை ஏற்படலாம் என்று மருத்துவர்கள் கணிக்கின்றனர். 

மேலும் கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில்தாம் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கி இரண்டாம் அலை உருவானது.

தொடர்ந்து இந்தியாவில் இரண்டாம் அலை  உருவெடுத்து அதிகமானோரை பாதித்தது. உயிரிழப்புகளும் அதிகம் ஏற்பட்டன. கிட்டத்தட்ட அதே போன்றதொரு தலைப்பு தற்போதும் நீடிக்கிறது என்றும் இதனால் இந்தியாவில் அடுத்த நான்கைந்து  மாதங்களிலோ அதற்குப் பின்னரோ மூன்றாம் அலை ஏற்படலாம் என்றும் கருதப்படுகிறது.

ஆனாலும் மூன்றாம் அலை உறுதியென்று அறுதியிட்டுக்கூற முடியாது. காரணம், புதிய குறுவி தென்னாப்பிரிக்காவில் ஹெச்.ஐ.வி நோயாளியிடம்தான் முதலில் கண்டறியப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் ஹெச்.ஐ.வி நோயாளிகள் போன்ற நோய் எதிர்ப்புத் திறன் குறைவானவர்களைத் தாக்கும் என்பதை உறுதிபடச் சொல்லிவிட முடியும்.

ஆனால் நலப்பாடு மிகுந்த நாடுகளில் அந்தளவுக்குத் தீவிரமாகப் பரவுமா என்பது ஆய்வுகள் அல்லது நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்போதுதான் தெரிய வரும். 

இந்தியாவில் பன்னாட்டுப் பயணத்துக்கான கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டாலும், இந்தியாவில் மூன்றாம் அலை வருவதற்கான சாத்தியம் குறைவு என எய்ம்ஸ் மருத்துவனை மருத்துவர்கள் உள்ளிட்ட நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். 

மேலும், நாம் வேகமாகத் தடுப்பூசியைச் செலுத்தி வருவதும், இந்தியாவில் இந்தக் குறிப்பிட்ட வகை குறுவி அதிகம் பாதிப்பை ஏற்படுத்தாது என்பதுகூட காரணங்களாக அமையலாம் என்றும்,

எந்த வகை குறுவி வந்தாலும் முகமூடி அணிவது, தனிமனித இடைவெளி, அடிக்கடி கைகழுவுதல், அதிக மக்கள் கூட்டமுள்ள இடத்தைத் தவிர்ப்பது மூலம் நோய் பரவலைத் தடுக்க முடியும். தடுப்பூசியையும் அனைத்து மக்களுக்கும் செலுத்துவதற்கான வேலைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,079.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.