Show all

கடும்சரிவில் குறளிச்செலாவணிகள்! பிட்காசு ஒரு மணிநேரத்தில் 10,000 டாலர் சரிவு

இந்தியாவில், ஒன்றிய பாஜக அரசின், குறளிச்செலாவணிகள் சட்டமுன்வரைவு மற்றும் குறளிச்செலாவணிகள் (கிரிப்டோ கரண்சி) மீதான வரி அறிவிப்புகள், ஆகியவற்றால்- இந்தச் சரிவு இந்திய முதலீட்டாளர்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது.

19,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: உலக நாடுகளில் பரவி வந்த ஒமிக்ரான் தற்போது இந்தியாவிலும், அமெரிக்காவிலும் பரவிய நிலையில், முதலீட்டுச் சந்தையில் பெரும் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. இந்தியாவில் பங்குச்சந்தையில் இருந்து முதலீடுகள் வேறு முதலீட்டுத் தளத்திற்குச் செல்லும் வேளையில் அமெரிக்காவில் பிற முதலீட்டுத் தளத்தில் இருக்கும் முதலீடுகள் குறிப்பாகக் குறளிச்செலாவணிச் சந்தையில் இருக்கும் முதலீடுகள் பங்குச்சந்தை பக்கம் திரும்பியுள்ளது. 

இந்த மாற்றத்தின் மூலம் குறளிச்செலாவணியின் மிக முதன்மை நாணயமாக இருக்கும் பிட்காசுவின் மதிப்பு ஒரு மணிநேரத்தில் 10000 டாலர் சரிந்துள்ளது. அமெரிக்கச் சந்தையில் இன்று காலை வணிகம் தொடங்கியதில் இருந்து தொடர்ந்து சரிந்து வந்த பிட்காசின் விலை கிட்டத்தட்ட 14,607.55 டாலர் சரிந்து முதலீட்டாளர்களுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. 

இதனால் அமெரிக்க முதலீட்டாளர்கள் மட்டும் அல்லாமல் இந்திய முதலீட்டாளர்களும் அதிகளவிலான இழப்பை எதிர்கொண்டு உள்ளனர். பிட்காசின் விலை கடந்த 24 மணிநேரத்தில் கிட்டதட்ட 20 விழுக்காடு வரையில் சரிந்துள்ளது. இன்றைய வணிகத்தில் ஒரு பிட்காசு விலை 57,482.17 டாலர் விலையில் இருந்து 42,874.62 டாலர் வரையில் சரிந்துள்ளது. 

பிட்காசு மட்டும் அல்லாமல் எதிரியம் 15 விழுக்காடு சரிவு, சோலான 17.84 விழுக்காடு சரிவு, ரிப்பிள் 20 விழுக்காடு சரிவு, டெரா 17 விழுக்காடு சரிவு, கார்டானோ 17.47 விழுக்காடு சரிவு, டோஜ்காயின் 22.15 விழுக்காடு சரிவு, சிபா இனு 16.17 விழுக்காடு சரிவு என அனைத்து முன்னணி குறளிச்செலாவணியும் சரிவை எதிர்கொண்டு உள்ளது. 

இந்தப் பெரும் சரிவுக்கு மிக முதன்மைக் காரணம் புதிதாகப் பரவி வரும் கொரோனா குறுவியான (வைரஸ்) ஒமிக்ரான் மற்றும் அமெரிக்கப் பெடரல் கட்டுப்பாட்டு வங்கி அறிவித்துள்ள பணப்புழக்க கட்டுப்பாட்டு நடவடிக்கை தான். 

பொதுவாக இதுபோன்ற சரிவுகளில் குறைந்த விலையில், கூடுதல் முதலீடு செய்;து இழப்பை சரிக்கட்டுவது இதுபோன்ற சந்தைகளின் முதலீட்டாளர்கள் முன்னெடுக்கும் வழக்கம். ஆனால் இந்தியாவில், ஒன்றிய பாஜக அரசின், குறளிச்செலாவணிகள் சட்டமுன்வரைவு மற்றும் குறளிச்செலாவணிகள் (கிரிப்டோ கரண்சி) மீதான வரி அறிவிப்புகள்- இந்திய முதலீட்டாளர்களைக் கூடுதல் முதலீடு செய்தால், உள்ளதும் இழக்கும் நிலையாகுமோ என்கிற அச்சுறுத்துகிற நிலையில், இந்தச் சரிவு இந்திய முதலீட்டாளர்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது. 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,088.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.