Show all

கருஞ்சீனா!

செஞ்சீனா- மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரி பற்றாக்குறையால், கருஞ்சீனாவாக இருளில் மூழ்கித் தவித்து வருகிறது.

14,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: சீனாவில் ஏற்பட்டுள்ள திடீர் மின்தடையால் பல நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளன. மின் பற்றாக்குறையால், சீனாவின் ஒட்டு மொத்த மாகாணங்களும் முடங்கிப் போவதைத் தவிர்க்க, கடந்த ஒன்றரை மாதங்களாக சீனாவின் 16 மாகாணங்களில் சுழற்சி முறையில் மின்தடை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

லியோனிங் மாகாணத்தில் கடந்த ஒரு கிழமையாக ஏற்பட்டுள்ள மின் தடையால் தெரு விளக்குகள் மற்றும் சாலைப்போக்கு வரத்து சைகை விளக்குகள் என எதுவும் வேலை செய்யவில்லை. நெடுஞ்சாலையில் திடீரென விளக்குகள் எரியாததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

குடியிருப்புப் பகுதிகளில் பெரும்பாலும் பகல் நேரங்களில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. அதே சமயம் இரவு நேரங்களில் வீடுகளுக்கு மின்சாரம் கிடைக்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை இருக்கும் என்பதால், அதற்குள் தங்கள் வேலைகளை முடிக்க மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். 20 மாடிகள், 30 மாடிகள் என உயர்ந்து நிற்கும் கட்டடங்களில் துக்கிகள் வசதியின்றி குடியிருப்போர்கள் தவித்து வருகின்றனர்.

மின்சாரம் இன்றி பல்வேறு தொழிற்சாலைகளில் உற்பத்திக் குறைப்பு அல்லது உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. சீனாவின் கட்டுமான வளர்ச்சிக்கு பெரிதும் தேவைப்படும் இரும்பு மற்றும் பைஞ்சுதை உற்பத்தி இந்த மின் தடையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலுக்குப் பின் உலகம் சற்றே மீண்டெழுந்து வரும் நிலையில், பன்னாட்டு அளவில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கேட்புகளை முடித்துத் தரவேண்டிய கட்டாயத்தில் சீன நிறுவனங்கள் உள்ளன. ஆனால் அதற்கு பெரும் அறைகூவலாக இந்த மின் தடை உருவெடுத்துள்ளது. 

நிலக்கரி பற்றாக்குறை மற்றும் காற்று மாசைக் குறைக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளால் இந்த மின் தடை ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இன்னும் ஆறு மாதகாலம் வரை இந்த நிலை நீடிக்கலாம் என்பதால் அதுவரை முறை வைத்து வழங்கப்படும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு, மக்களை மாகாண நிர்வாகங்கள் கேட்டுக் கொண்டுள்ளன. 

அலுவலகங்களில் மூன்று மாடிகள் வரை தூக்கிகளை பயன்படுத்த வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பெரும்பாலும் இயற்கையான ஒளியை பயன்படுத்துமாறும், குறைந்த அளவில் குளிர்சாதன வசதியை பயன்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்த மின்தடை சீனாவின் பொருளாதாரத்தை இருளில் தள்ளிவிடும் என்கின்றனர் பொருளாதார வல்லுனர்கள். சீனாவில் ஏற்பட்டுள்ள மின் தடை உலகச்சந்தையிலும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால், மின் தடையிலிருந்து சீனா மீளும் நாளை எதிர்நோக்கி பலநாடுகளும் காத்திருக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளதாகப் பேசப்பட்டு வருகிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,022.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.