Show all

சவுதி அரேபியா முன்னெடுத்த பன்னாட்டு மெய்யியல் மாநாடு!

நல்லதொரு விடிவெள்ளியாக- சவுதி அரேபியாவில், முரண்பாடு மற்றும் வகைபாட்டுச் சிந்தனையை வளர்க்கும் விதமாக, பன்னாட்டு மெய்யியல் மாநாடு நடைபெற்றது.

28,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: ஒட்டுமொத்த உலகிலும் பல்வேறு, அரசியல் நிலைப்பாடுகள் ஆனாலும் சரி, மதங்கள் ஆனாலும் சரி, அவைகளில் அடிப்படையாகப் பொதிந்திருக்கிற கோட்பாடுகளை தமிழ் அறிவுத்தளத்தில் இருந்து பாகுபாட்டியல், முரண்பாட்டியல், வகைபாட்டியல் என்கிற மூன்று என்று நிறுவலாம். 

எத்தனையோ பாகுபாடுகள் காணப்பட்டாலும்- அது அல்லது அவை- தங்கள் மதம் அல்லது தொல்கதை என்கிற நிலையில்- அவற்றுக்கு முரண்பாடாக அல்லது வகைபாடாக முன்வைக்கப்படும் கருத்துக்களைக் கூறுபவர்களை அண்மைக் காலமாக சிறையில் அடைக்கும் நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில், முரண்பாடு மற்றும் வகைபாட்டுச் சிந்தனையை வளர்க்கும் விதமாக, பன்னாட்டு மெய்யியல் மாநாடு நடைபெற்றது.

ரியாத் நகரத்தில் மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் கலந்துகொண்ட உயர்மதிப்பைக் கொண்ட கல்வியாளர்களில், அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி மெய்யியல் வல்லுனர் மைக்கேல் சாண்டெலும் ஒருவர்.

பன்னாட்டு அளவில் மிகவும் புகழ்பெற்ற, ஹார்வர்டு பல்கலைக்கழக பேராசியரான மைக்கேல் சாண்டெல்- தான் இந்த மாநாட்டில் விரிவுரையாற்றுவதைக் காட்டிலும் சவுதியின் பெண்கள் உள்ளிட்ட இளம் தலைமுறையினருடன் நேரடியாக கலந்துரையாடலில் ஈடுபட விரும்புவதாக மாநாட்டு ஏற்பாட்டாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

கிங் பகத் தேசிய நூலகத்தில் நடைபெற்ற அவருடைய அமர்வு வலையொளியில் நேரலை செய்யப்பட்டது. இந்த அமர்வின்போது, பாகுபாட்டியல், முரண்பாட்டியல் வகைபாட்டியல் ஆகிய கோட்பாடுகளைச் சவுதியைச் சேர்ந்த நான்கு மாணவர்களிடையே கலந்துரையாடினார்.

மதம், அரசியல், சமூக சூழல் குறித்து பொதுமக்கள் கேள்வி கேட்கும் மரபு குறைவாக உள்ள ஒரு நாட்டில், இந்நிகழ்வு, வியப்பான மாறுபட்ட நிகழ்வாகவே பார்க்கப்படக்கூடும்.

கொரோனா கொரோனா (வைரஸ்) அரசு கையாண்ட விதம் குறித்து மைக்கேல் சாண்டெல், விவாதத்தை எழுப்பினார். பின்னர், கொலை செய்த தன் உறவினரை காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டுமா அல்லது அவரை பாதுகாக்க வேண்டுமா என, அறச்சிக்கல் வினாவை எழுப்பினார்.

அப்போது பேசிய மாணவி ஒருவர், யாரும் சட்டத்திற்கு மேலானவர் அல்ல எனவும், அது அந்த அரங்கத்திலிருக்கும் தன் தந்தையாக இருந்தாலும், அவரை காவல்துறையிடம் ஒப்படைப்பேன் எனவும் தெரிவித்தார். அப்போது அங்கிருந்த சவுதி மாணவர்களும், கல்வியாளர்களும் கரவொலி எழுப்பினர்.

இந்த மெய்யியல் மாநாடு மற்றும் அதில் தன்னுடைய பங்கெடுப்பு, சோதனை முயற்சியிலானது என மைக்கேல் சாண்டெல் தெரிவித்தார்.

'நாங்கள் விவாதித்த நெறிமுறை குழப்பங்கள் குறித்த விவாதத்தை பார்வையாளர்கள் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றாலே, முதல்படியாக இதனை நான் வெற்றி என கூறுவேன். இந்த அமைப்பு எவற்றையெல்லாம் அனுமதிக்கும் என்பதையும் உறுதியாகப் பார்க்க வேண்டும்.' என கூறினார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,097.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.