Show all

கடன்சுமையில் தள்ளாடும் உலகில் நாற்பத்தியிரண்டு நாடுகள்! நகைஅடகுகடை மாதிரி, சீனாவிடம் கடன் வாங்கி

இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான் உட்பட சுமார் 42 நாடுகள் சீனாவிடம் கடன் வாங்கி பெரும் கடன் சுமையில் சிக்கியிருப்பதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது.

16,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: பத்து பவுன் இருபது பவுன் வைத்திருப்பவர்கள், குறைந்த பணத்தேவைக்கு, வங்கிகளில் குறைந்த வட்டிக்கு கடன் வாங்குவார்கள். அதிக வட்டியானாலும் சரியென்று அடகுகடைகளை நாடுவர் சிறிய அளவில் நகை வைத்திருப்பவர்கள், அதிக கடன் தொகையை வேண்டி. 

அதுபோல உலகவங்கியில் கடன் வாங்காத  நாடுகளே இல்லை என்கிற நிலையில், சில வறிய நாடுகள் சீனாவிடமும் கடன் பெற்று சுமையேற்றிக் கொள்கின்றன.
  
இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான் உட்பட சுமார் 42 நாடுகள் சீனாவிடம் கடன் வாங்கி பெரும் கடன் சுமையில் சிக்கியிருப்பதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது. 

அமெரிக்காவில் உள்ள வில்லியம் அண்ட் மேரி கல்லூரி வெளியிட்ட அறிவிப்பில், சீனா செயல்படுத்திவரும் பட்டுப்பாதை பொருளாதார திட்டத்தின் மூலம், பல்வேறு நாடுகள்; தங்கள் உள்கட்டமைப்பை மேம்படுத்த என்பதற்காக பல ஆயிரம் கோடி கடன் பெற்றிருப்பது தெரியவருகிறது. 

உலகின் 165 நாடுகளில் பட்டுப்பாதை திட்டத்தை சீனா செயல்படுத்தி உள்ளது. சீனா செயல்படுத்திய 13,427 மேம்பாட்டு திட்டங்களில், சிலவற்றில் ஊழல் நடந்துள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்தத் திட்டங்களின் மொத்த செலவு ரூ.62 லட்சத்து 38 ஆயிரத்து 200 கோடி என்று சொல்லப்படுகிறது. 

சீன பட்டுப்பாதை திட்டத்தின் கீழ், கடனுக்கு மேல் கடன் வாங்கி 42 நாடுகள் சீனாவிடமிருந்து மீறி செல்ல முடியாத வகையில் கடன் சுமையில் சிக்கி இருப்பதாகத் தெரியவருகிறது. 

சில நாடுகள் சீனாவுக்கு வழங்க வேண்டிய கடன், அந்நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட 10 விழுக்காடு அதிகமாக உள்ளதாம். 

கடன் வாங்கிய நாடுகளிடம் இருந்து கடனுக்கும் அதிகமான பிணையை சீனா வாங்கி இருக்கிறது. இதன் மூலம் சீனா பலத்த கடன் பாதுகாப்பை உருவாக்கியுள்ளது. சீனா, தனது நாட்டில் போதிய அளவு இல்லாத வளங்களை சரிக்கட்டவும் முதலீட்டு வருமானமாக டாலர், யூரோக்களை பெற்று அந்நிய செலாவணி கையிருப்பை உயர்த்தவும் இந்த முன்னெடுப்பை நிகழ்த்தியிருக்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு நாட்டிலும் ஏதாவது ஒரு வளம் பெரிய அளவில் இருக்கும். எடுத்துகாட்டாக ஈராக்கில் பெட்ரோல், உலகின் கடல் வணிகத்தின் முதன்மை வழித்தடமான இலங்கையின் துறைமுகம், ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள சுரங்க வளங்கள் இவற்றை காலத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்று விரும்பி அந்த நாடுகளுக்கு சீனா கடன் வழங்கி உள்ளது. 

இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான் போன்றவை சீனாவிடம் அதிகளவில் கடன் வாங்கி சிக்கி உள்ள நாடுகளில் இடம் பெற்றுள்ளன. இந்தியாவும் சீனாவிடம் கடன் பெற்றுதான் உள்ளது. சீனாவிடம் இருந்து அதிகளவில் கடன் பெற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா 23வது இடத்தில் உள்ளது. 

ஈராக் 59,200 கோடி, வட கொரியா 53,058 கோடி, எத்தியோப்பியா 48,618 கோடி, ரஷ்யா 11,23,320 கோடி, வெனிசுலா 6,06,504 கோடி, அங்கோலா 3,73,478 கோடி, இந்தியா 65,564 கோடி கடன் வாங்கி உள்ளன. 

சீனா கடன் கொடுத்து உலக நாடுகள் பலவற்றின் மீது ஆதிக்கம் செலுத்திவருவதைப் பார்த்து சினம் கொண்டுள்ள அமெரிக்கா, பல்வேறு நாடுகளுடன் பேசி வருகிறது. சீனாவிற்கு எதிரான நாடுகளை ஒன்று சேர்த்துக்கொண்டு குவாட் அமைப்பை உருவாக்கி செயல் திட்டங்களை திட்டி வருகிறது. இதனால் உலக வல்லரசுகளான அமெரிக்கா சீனா இடையே பெரும் பொருளாதர ஆதிக்க (கடன்) மற்றும் வணிகப் போட்டி வளர்ந்துகொண்டுள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,024.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.