Show all

உலகத்தமிழர் வேண்டுகோளாகப் பட்டியல்! இலங்கைக்கு ரூ.18,090 கோடி கடன் வழங்கும் இந்திய அரசு- விதிக்க வேண்டிய நிபந்தனைகளுக்கு

இலங்கைக்கு ரூ.18,090 கோடி கடன் வழங்கும் இந்திய அரசு விதிக்க வேண்டிய நிபந்தனைகள் குறித்து உலகத்தமிழர் வேண்டுகோளாக, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் இராமதாசு பட்டியலிட்டு உள்ளார்.

07,தை,தமிழ்த்தொடராண்டு-5123: ஈழத் தமிழர் அரசியல் அதிகாரப் பகிர்வு விடையத்தில் இந்தியத் தலைமைஅமைச்சர் மோடிக்கு தமிழ் அரசியல் கட்சித் தலைவர்கள் மடல் அனுப்பி உள்ளதற்கு இலங்கை அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது இலங்கை அமைச்சர் உதய கம்மன்பில கூறியதாவது: இலங்கை ஒன்றும் இந்தியாவின் மாநிலம் அல்ல. நாங்கள் ஒரு தனிநாடு என்பதை மறந்துவிடக் கூடாது.

தமிழருக்கான அதிகாரப் பகிர்வு தொடர்பாக இலங்கை அரசுடன்தான் பேச வேண்டும். இலங்கையுடன் பேசாமல் வேறு எங்கு போய் பேசினாலும் எந்தப் பயனும் ஏற்படாது. அதனால் இந்தியத் தலைமைஅமைச்சர் மோடிக்கு தமிழ் தலைவர்கள் மடல்; எழுதியது குறித்து எங்களுக்கு எந்த கவலையுமே இல்லை. உதய கம்மன்பில கெத்து காட்டியிருந்தார்.

இந்த நிலையில், இலங்கைக்கு ரூ.18,090 கோடி கடன் வழங்கும் இந்திய அரசு விதிக்க வேண்டிய நிபந்தனைகள் குறித்து பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பட்டியலிட்டு உள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:- வரலாறு காணாத கடன் மற்றும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு உணவு மற்றும் எரிபொருள் வாங்குவதற்காக ரூ.18,090 கோடி கடன் வசதியை இந்திய அரசு வழங்கியிருக்கிறது. ஒன்றிய அரசின் இம்முடிவு அரசதந்திர நடவடிக்கை என்றாலும் கூட, இலங்கை அளித்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றச் செய்வதற்கான சிறந்த வாய்ப்பாக இதை இந்திய அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

சீனா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து வாங்கிய கடனை செலுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் இலங்கை அரசு, இப்போது கிட்டத்தட்ட திவால் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. உணவு, எரிபொருள் உள்ளிட்ட கட்டாயத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு கூட பணம் இல்லாமல் தவிக்கும் இலங்கை அரசு, இந்தியாவிடம் கடனுதவியை கோரியது. இலங்கை நிதியமைச்சரும், அதிபர் கோத்தபாயா ராஜபக்சேவின் சகோதரருமான பசில் ராஜபக்சே டெல்லிக்கு வந்து கடனுதவி கோரியதைத் தொடர்ந்து ரூ.18,090 கோடி மதிப்பிலான கடன் வசதித் திட்டத்தை இலங்கைக்கு இந்தியா அறிவித்திருக்கிறது. இது தொடக்கம்தான். வருங்காலத்தில் இலங்கைக்கு இன்னும் கூடுதலான கடனை இந்தியா வழங்கும். சீனாவின் பக்கம் சாய்ந்து கொண்டிருந்த இலங்கை அரசை இந்தியாவின் பக்கம் திருப்புவதற்கான அரசதந்திர நடவடிக்கையாகவே இது பார்க்கப்படுகிறது. 

ஆனால், கச்சத்தீவு உள்ளிட்ட நிலப்பரப்பையும், கோடிக்கணக்கில் நிதியுதவியையும் பெற்றுக் கொண்டு, பல்வேறு தருணங்களில் இந்தியாவுக்கு துரோகம் செய்த இலங்கை அரசு, இம்முறையாவது நமது உதவியை பெற்றுக் கொண்டு ஆதரவாக இருக்குமா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. 

மாறாக, ஈழத்தமிழர்கள் தான் இந்தியாவுக்கு எல்லா தருணங்களிலும் ஆதரவாக இருந்திருக்கிறார்கள்; இனிவரும் காலங்களிலும் ஆதரவாக இருப்பர். அதனால்தான் அவர்களை வளைக்கும் முயற்சியில் சீன அரசு அண்மைக்காலமாக ஈடுபட்டு வருகிறது.

இந்தியாவின் பாதுகாப்பு சார்ந்த இந்த அம்சத்தைக் கருத்தில் கொண்டு, இலங்கையை சீனாவிடம் இருந்து பிரிக்கும் நோக்குடன் கடனுதவி வழங்கும் அதே நேரத்தில், இந்தியாவுக்கு ஆதரவான இலங்கைத் தமிழர்களை அரசியல்பாடாக வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். 

இந்தியாவிடம் தொடர்ந்து கடன்களையும், பிற உதவிகளையும் வாங்கிக் குவிக்கும் இலங்கை அரசு, முப்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்ட அமைதி உடன்பாட்டைத் தொடர்ந்து, இலங்கை அரசியல் சட்டத்தில் செய்யப்பட்ட 13-ஆவது திருத்தத்தின்படி, இலங்கைத் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு 35 ஆண்டுகள் ஆகியும் இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரம் எட்டாக்கனியாகவே உள்ளது.

இலங்கை போரின்போதும், போருக்குப் பிறகும் இலங்கைத் தமிழர்களுக்கு 13-ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதை விட கூடுதலான அதிகாரங்களையும் வழங்குவதற்கு தயாராக இருப்பதாக ராஜபக்சே சகோதரர்கள் உறுதியளித்தனர். ஆனால், அதன்பின் 13 ஆண்டுகள் ஆகியும் அந்த வாக்குறுதிகள் வெற்று வார்த்தைகளாகவே உள்ளன. இப்போதும் ராஜபக்சே சகோதரர்கள்தான் இலங்கை அதிபர், தலைமை, அமைச்சர்கள் உள்ளிட்ட முதன்மைப் பதவிகளை வகிக்கிறார்கள் என்றாலும் கூட, தாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு ஒருபோதும் முன்வரவேயில்லை.

இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான அநீதிகளை இந்தியா வேடிக்கை பார்க்கக்கூடாது. அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்படுவதை அண்டை நாட்டின்பாடு என்று கூறி இந்தியா விலகி நிற்க முடியாது. ஏனெனில், இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்குவதற்கான 13-ஆவது அரசியல் சட்டத் திருத்தம் என்பது இந்தியா - இலங்கை அமைதி ஒப்பந்தத்தின் அடிப்படையில் செய்யப்பட்டது. அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டிய இந்திய அரசின் கடமையும், பொறுப்பும் ஆகும்.

உலகம் முழுவதும் உள்ள இலங்கைத் தமிழர்கள் தங்களுக்கான அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்கவும், இலங்கை இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களுக்கு காரணமானவர்களை தண்டித்து, இறுதிப்போரில் படுகொலை செய்யப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழர்களின் குடும்பங்களுக்கு நீதி பெற்றுத் தரவும் இந்தியாவைத் தான் நம்பியிருக்கின்றனர். அந்த நம்பிக்கைக்கு இந்தியா துரோகம் செய்து விடக் கூடாது! இலங்கைத் தமிழர்களுக்கு உதவ வேண்டிய கடமையிலிருந்து இந்தியா விலகி விடக் கூடாது.

எனவே, இலங்கைக்கு முதற்கட்டமாக ரூ.18,090 கோடி கடன் வசதி அறிவித்துள்ள இந்திய அரசு, அதற்கான முதன்மை நிபந்தனையாக இலங்கையில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு 13-ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தின்படியான அரசியல் அதிகாரங்களை குறிப்பிட்ட காலவரையறைக்குள் வழங்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்க வேண்டும்; போர்க்குற்றங்களை இழைத்தவர்களுக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்டும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் முயற்சிகளுக்கு ஒத்துழைக்கும்படியும் இலங்கை அரசை ஒன்றிய அரசு வலியுறுத்த வேண்டும். இந்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளின் மூலம் இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரத்தையும், நீதியையும் வென்றெடுத்துத் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,134.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.