Show all

ஒமைக்ரானை எதிர்கொள்ளும் என்று தெரிவிக்கப்படுகிறது! ஊக்குவிப்புக்கான மூன்றாம் தடவை தடுப்பூசி

டெல்டா வகை குறுவியை (வைரஸ்) விட ஒமைக்ரான் குறுவி வேகமாக பரவக் கூடியது. தடுப்பூசியின் வீரியத்தையும் ஒமைக்ரான் குறைய செய்யும் என்றாலும், குறைந்த அளவிலான பாதிப்பையே ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்படுகின்றது.  

27,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: ஒமைக்ரான் வகை கொரோனா குறுவி வேகமாக பரவக்கூடியது என்றும் தடுப்பூசியின் வீரியத்தை குறையச் செய்யும் என்றும் உலக நலங்கு நிறுவனம் எச்சரித்துள்ளது.

இந்தியாவில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் காணப்பட்ட டெல்டா வகை குறுவி- கொரோனாத் தொற்றில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய வகை ஆகும். இந்த வகை தொற்று அதிக உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது. தற்போது இதன் தாக்கம் குறைந்துள்ளது.

இந்நிலையில், ஒமைக்ரான் என்ற புதிய வகை குறுவித் தொற்று சில கிழமைகளுக்கு முன்பு கண்டறியப்பட்டுள்ளது. தற்போது இந்த ஒமைக்ரான் தொற்று இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கும் பரவியுள்ளது. கடந்த வியாழக்கிழமைக் கணக்குப்படி 63 நாடுகளுக்கு இந்தத் தொற்று பரவியுள்ளது. இந்த தொற்றின் பாதிப்பு எப்படி இருக்கும் என்பது தொடர்பாக உலக நலங்கு நிறுவனம் சில விளக்கங்களை தெரிவித்துள்ளது.

அதன்படி, டெல்டா வகை குறுவியை விட ஒமைக்ரான் குறுவி வேகமாக பரவக் கூடியது. தடுப்பூசியின் வீரியத்தையும் ஒமைக்ரான் குறைய செய்யும் எனினும் குறைந்த அளவிலான பாதிப்பையே ஏற்படுத்தும் என முதற்கட்ட தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.  

தற்போது கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில், சமூகப் பரவல் நிகழும்பட்சத்தில் டெல்டா திரிபை ஒமைக்ரான் திரிபு விஞ்சும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தடுப்பூசி உற்பத்தியாளர்களான பிபிசர் மற்றும் பயோஎன்டெக் கடந்த கிழமை தங்கள் தடுப்பூசி மூன்று தடவைகள் ஒமைக்ரானுக்கு எதிராக தற்போது திறன்பட செயல்படுவதாக கூறியுள்ளன. இதேபோல் பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகள் ஊக்குவிப்புக்காக மூன்றாம் தடவை தடுப்பூசியை செலுத்திக்கொள்ள தங்கள் மக்களை ஊக்குவித்து வருகின்றன.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,096.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.