Show all

நல்ல முன்னெடுப்பு! இலங்கையில் சீனாவை விரட்டிட- தமிழ்நாடு, இலங்கைத் தமிழ்த் தலைவர்களுக்கு ஒன்றிய பாஜக செவிசாய்த்திருப்பது

இலங்கையைவிட்டு சீன நிறுவனம் வெளியேறியிருப்பதன் பின்னணியில், இந்தியாவின் தலையீடு இருப்பதாக அதிரடித் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. மேலும், சீன நிறுவனத்தைவிட்டு கைநழுவிய அந்தத் திட்டம், இந்தியாவின் முன்னணித் தொழிலதிபரான அதானியின் நிறுவனத்துக்குக் கைமாறுவதாகவும் தகவல்கள் கசிந்திருக்கின்றன.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் இருக்கும், யாழ்ப்பாணத்துக்குட்பட்ட மூன்று முதன்மைத் தீவுகள் நெடுந்தீவு, அனலைத் தீவு, நயினாத் தீவு. டீசல் மூலம் மட்டுமே மின்சாரம் கிடைத்துக்கொண்டிக்கும் இந்தத் தீவுகளில், காற்றாலை மற்றும் சூரியஒளி மூலமாக மின்சாரம் தயாரிப்பதற்கான உலகளாவிய ஏலத்தை இலங்கை அரசாங்கம் அறிவித்தது. 

இந்திய நிறுவனங்கள் உட்பட, பல நாடுகளின் நிறுவனங்கள் இந்தத் திட்டத்தைக் கைப்பற்ற போட்டியிட்டபோது, சீனாவைச் சேர்ந்த சினோசர் - இடெக்வின் நிறுவனம், சுமார் 12 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பீட்டில் திட்டத்தைக் கைப்பற்றியது. பத்து மாதங்களுக்கு முன்பு அதிகாரப்பாடாக இலங்கை அரசாங்கத்திடம் சீனா ஒப்பந்தம் போட்டுக்கொண்டது.

இந்தச் சூழ்நிலையில், இலங்கைக்கான இந்தியத் தூதர் கோபால் பாக்லே, ஒன்பது மாதங்களுக்கு முன்பு அப்போதைய இலங்கை மின்சக்தித்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெருமவைச் சந்தித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். ஆலோசனை முடிவில், இந்தத் திட்டத்துக்குத் தேவைப்படும் முழுத் தொகையான 12 மில்லியன் அமெரிக்க டாலரையும், இந்திய அரசாங்கம் இலங்கைக்கு நன்கொடையாகத் தருவதாக அறிவித்தார்.

இந்தியாவின் சலுகையை ஏற்றுக்கொண்ட அமைச்சர் டலஸ் அழகப்பெருமா, என்னைச் சந்தித்த இலங்கைக்கான இந்தியத் தூதர் கோபால் பாக்லே, இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தத் தேவையான முழுமையான நிதித்தொகை 12 மில்லியன் அமெரிக்க டாலரை இலங்கைக்கு நன்கொடையாக வழங்குவதாக உறுதி அளித்திருக்கிறார். இந்தப் பிராந்தியம் குறித்து அக்கறை செலுத்துகிற ஒரு மிகப்பெரிய நாடாக இந்தியா இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்தியா இலங்கையின் மூத்த அண்ணனைப் போன்றது. எனவே, இந்தியாவின் இந்த யோசனையை, ஆலோசனையை நாங்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறோம் என அறிவித்தார்.

இதனால், சீன நிறுவனத்துக்கும், இலங்கை அரசுக்கும் இடையேயான ஒப்பந்தத்தில் அப்போதே விரிசல் ஏற்பட்டது. இருப்பினும், எந்தவிதமான அதிகாரப்பாட்டு அறிவிப்பும் வெளியிடப்படாமல் இருந்தது.

இந்த நிலையில், இரண்டு கிழமைகளுக்கு முன்பு சீனாவின் சினோசர் - இடெக்வின் நிறுவனம், இலங்கைத் தீவுகளில் மேற்கொள்ளவிருந்த மின்திட்டங்களை கைவிடுவதாக அதிகாரப்பாடாக அறிவித்தது. மேலும், அந்த அறிவிப்புக்குக் காரணம், மூன்றாவது தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்ட பாதுகாப்பு தொடர்பிலான சிக்கலே என இலங்கையிலிருக்கும் சீனத் தூதரகம் தனது கீச்சுப் பக்கத்தில் தெரிவித்தது. அதாவது, திட்டத்தைக் கைவிடுவதற்கு, இந்திய அரசாங்கம்தான் காரணம் என்பதை சீனத் தூதரகம் மறைமுகமாக, மூன்றாவது தரப்பு எனக் குறிப்பிட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து, சீன நிறுவனம், சூரியஒளி மின்சாரத் திட்டத்தை தமிழ்நாட்டின் தென் பெருங்கடலில் இருக்கும் மாலைத்தீவுக்கு மாற்றியிருக்கிறது. அந்த நாட்டிலிருக்கும், சுமார் 12 தீவுகளில் சூரியஒளி மின்சாரத் திட்டத்தைச் செயல்படுத்தும் புதிய ஒப்பந்தத்தை மாலத்தீவிடம் ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில், இலங்கையின் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, வடக்கு மாநிலத்திலிருக்கும் மன்னார் முதல் பூநகரி வரையிலான பகுதிகளில், சுமார் 500 மெகாவாட் காற்றாலை மற்றும் சூரியஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை அதானி நிறுவனத்துக்கு வழங்கும் முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன. இந்தத் திட்டத்துக்கான விலை மனுகோரலை பெரும்பாலான நிறுவனங்கள் விண்ணப்பித்திருக்கின்றன. ஆனால், அந்த நிறுவனங்கள் அனைத்தையும் களைந்துவிட்டு அதானி நிறுவனத்திடம் இந்தத் திட்டத்தை வழங்க முடிவு செய்திருக்கிறார்கள் என கருத்து தெரிவித்திருக்கிறார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,099.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.