Show all

ஐயம் கிளப்பினால் அதோகதியாகும் பிட்காசுவின் மதிப்பு!

கிரிப்டோ கரண்சி என்கிற நிகர்நிலைச் செலாவணி குறித்த தெளிவான புரிதலுக்கு இன்னும் பலநாடுகள் வரவில்லை. ஏனோதானோ என்று ஆதரிப்பதும், தொய்வடைவதுமாக உள்ளன அவ்வகை நாடுகள். அதனால் எண்ணிமச் செலாவணி குறித்த ஐயம் எங்கிருந்து கிளம்பினாலும் அதில் தலைமைத்துவமான பிட்காசுவின் மதிப்பு அதோகதியாகிறது.

24,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: பிட்காசுவை முந்தாநாள் அதிகாரப்பாடாக அறிவித்த நாடு எல் சால்வடோர். எண்ணிமச் செலாவணி முதலீட்டாளர்களுக்கும், எண்ணிமச் செலாவணி சந்தைக்கும் மிகப் பெரிய நம்பிக்கையாக பார்க்கப்பட்டது எல் சால்வடோர் நாடு. 

சால்வடோர் நாடு, பிட்காசுவை நாணய பரிமாற்றத்திற்குப் பயன்படுத்த முடியாமல் போன காரணத்தால் பிட்காசு உட்பட அனைத்து முன்னணி எண்ணிமச் செலாவணிகளும் சரிவைச் சந்தித்துள்ளன. 

பிட்காசுவின் மதிப்பு நேற்று 53,000 டாலரை நெருங்கி முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய லாபத்தைக் கொடுத்த நிலையில் இன்று எல் சால்வடோர் நாட்டில் ஏற்பட்ட சிக்கலின் காரணமாகப் பிட்காயின் மதிப்பு 17 விழுக்காடு வரையில் சரிந்து முதலீட்டாளர்களுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. 

எல் சால்வடோர் நாட்டில் முந்தாநாள் முதல் அமெரிக்க டாலர் உடன் அதிகாரப்பாட்டு நாணயமாகப் பிட்காசுவை நடைமுறைப்படுத்தியது அந்நாட்டு அரசு. இதற்காக எல் சால்வடோர் அரசு 400 பிட்காசுகளை வாங்கியுள்ளதாக அந்நாட்டின் அதிபர் நயூப்புகலே அறிவித்தார்.  

ஆனால் பிட்காசுவை ஆதரிக்கும் பணப்பை இயங்கவில்லை என எல் சால்வடோர் நாட்டின் அதிபர் தற்போது தெரிவித்தார். இதனால் மொத்த திட்டமும் முடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் செய்தி எண்ணிமச் செலாவணி சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையில்லை. 

எல் சால்வடோர் நாட்டின் இந்த முயற்சி நடைமுறைப்படுத்தும் காரணத்தாலும், நாணய சந்தை மோசமான வணிகத்தைப் பதிவு செய்து வரும் காரணத்தாலும் எண்ணிமச் செலாவணி சந்தை கடந்த சில கிழமைகளாக அதிகளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது. இதன் உச்சமாக நேற்றைய வணிகத்தில் மட்டும் ஒரு பிட்காசின் மதிப்பு 50,577.41 டாலரில் இருந்து 52,912 டாலர் வரையில் உயர்ந்தது. 

ஆனால் இன்று பிட்காயின் நாணயமாகப் பயன்படுத்தும் எண்ணிமப் பணப்பை இயங்கவில்லை என எல் சால்வடோர் நாட்டின் அதிபர் நயூப்புகலே கூறிய பின்பு பிட்காசுவின் மதிப்பு யாரும் எதிர்பார்காத வகையில் 14.29 விழுக்காடு வரையில் சரிந்தது. 

இன்றைய வணிகத்தில் பிட்காசுவின் மதிப்பு 52,183.10 டாலர் அளவில் இருந்து 42.921.27 டாலர் வரையில் சரிந்துள்ளது. எல் சால்வடோர் நாட்டின் அறிவிப்பிற்குப் பின்பு பிட்காசுவின் மதிப்புத் தடாலடியாகச் சரிந்துள்ளது 

இரண்டு மாதத்திற்கு முந்தைய சரிவுக்குப் பின்பு பிட்காசுவின் மதிப்பு சுமார் 75 விழுக்காடு வரையில் உயர்ந்து புதிய உச்சத்தைத் தொடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த 2 நாட்களில் 17 விழுக்காடு வரைவில் சரிந்துள்ளது. 

இந்தச் சரிவின் வாயிலாகப் பிட்காசுவின் மொத்த சந்தை மதிப்பு 300 பில்லியன் டாலர் வரையில் சரிந்துள்ளது எனக் காயின்கீக்கோ தெரிவித்துள்ளது. 

பிட்காசைத் தொடர்ந்து எதிரியம் தற்போது 9.91 விழுக்காடு சரிந்து 3,374.41 டாலருக்கும், ரிப்பிள் 16.86 விழுக்காடு சரிந்து 1.08 டாலருக்கும், கார்டானோ 10.57 விழுக்காடு சரிந்து 2.35 டாருக்கும், ஸ்டெல்லார் 17.10 விழுக்காடு சரிந்து 0.3219 டாலருக்கும், டோஜ்காயின் 13.97 விழுக்காடு சரிந்து 0.24 டாலருக்கும், போல்காடாட் 17.58 விழுக்காடு சரிந்து 27.22 டாலருக்கும் வணிகம் செய்யப்படுகிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,001.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.