Show all

ஆப்பிள் பயன்பாட்டாளர்களிடையே அதன் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது

பயங்கரவாதியின் ஆப்பிள் ஐபோனுக்குள், அந்நிறுவன உதவியில்லாமலேயே எப்.பி.ஐ., ஊடுருவியது. இதனையடுத்து ஆப்பிள் நிறுவனத்துடனான அமெரிக்க அரசின் சட்ட ரீதியான மோதல் முடிவுக்கு வந்தது. எனினும் இது புதிய சர்ச்சையையும் உருவாக்கியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், சான் பெர்னார்டினோ நகரில், கடந்த டிசம்பர் 2ம் தேதி(02-12-2015) நடைபெற்ற விருந்து நிகழ்ச்சி ஒன்றில் ரிஸ்வான் பரூக், தஷ்பீன் மாலிக் தம்பதியினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் பலியாயினர். 22 பேர் காயமடைந்தனர். போலீசாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் தாக்குதல் நடத்திய இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இருவரும் பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்டவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து பரூக்கின் ஆப்பிள் 5-சி ஐபோனில் உள்ள தகவல்களை பெற அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ., முயற்சி செய்தது.

ஆனால் ஐபோனுக்குள் ஊடுருவுவது சிரமமாக இருந்ததுடன், தகவல்கள் அழியும் அபாயம் உள்ளதாகவும் கருதிய எப்.பி.ஐ., ஆப்பிள் நிறுவன உதவியை நாடியது. ஆனால் தங்கள் தயாரிப்பின் பாதுகாப்பு கருதி, ஐபோனுக்குள் ஊடுருவும் சாப்ட்வேரை தயாரிக்க ஆப்பிள் நிறுவனம் மறுத்து விட்டது. ஆப்பிள் நிறுவனத்துக்கு முகநூல், கூகுள் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களும் ஆதரவு தந்தன. இதனையடுத்து ஆப்பிள் நிறுவனத்தின் மீது அமெரிக்க அரசு அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பயங்கரவாதியின் ஐபோனுக்குள் ஊடுருவ ஆப்பிள் நிறுவனத்தின் உதவி தேவையில்லை என எப்.பி.ஐ., அறிவித்துள்ளது. மேலும் பயங்கரவாதியின் 5-சி ஐபோனில் வெற்றிகரமாக ஊடுருவி தகவல்கள் பத்திரமாக பெறப்பட்டதாகவும், அதனை அதிகாரிகள் ஆய்வு செய்து வருதாகவும் எப்.பி.ஐ, தெரிவித்துள்ளது. இதனையடுத்து ஆப்பிள் நிறுவனத்துடனான அமெரிக்க அரசின் சட்ட மோதல் முடிவுக்கு வந்துள்ளது. இருப்பினும் பாதுகாப்பு நிறைந்த ஆப்பிள் ஐபோன்களில், அந்நிறுவன உதவியின்றியே அமெரிக்க அரசு ஊடுருவியது, ஆப்பிள் பயன்பாட்டாளர்களிடையே அதன் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.