Show all

சமூக வலைத்தளம் சாதித்துக்கொடுத்தது! 33 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட மகனுக்கு அம்மா கிடைக்கப்பெற

லி ஜிங்வேய்க்கு நான்கு அகவை இருந்தபோது, அவரது வீட்டிலிருந்து கடத்தி செல்லப்பட்டு, குழந்தை கடத்தல் கும்பல் ஒன்றுக்கு விற்கப்பட்டார். சமூக வலைதளத்தில் இதைப் பதிவிட்டதன் மூலம் அவர் தன்னுடைய தாயைக் கண்டு மகிழும் பெரும்பேறு அவருக்கு கிட்டியது.

18,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: முப்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கடத்தப்பட்ட சீனர் ஒருவர் தான் குழந்தை பருவத்தில் வளர்ந்த கிராமத்தின் படத்தை, நினைவுகூர்ந்து வரைந்த பின்னர், தன்னைப் பெற்ற தாயுடன் மீண்டும் இணைந்துள்ளார்.

லி ஜிங்வேய்க்கு நான்கு அகவை இருந்தபோது, அவரது வீட்டிலிருந்து கடத்தி செல்லப்பட்டு, குழந்தை கடத்தல் கும்பல் ஒன்றுக்கு விற்கப்பட்டார்.

அவர் 9,மார்கழி அன்று (24.12.2021) அவர் கையால் வரையப்பட்ட ஒரு வரைபடத்தை, டௌயின் என்கிற சீன சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

சமூகவலைதளப் பயணர்கள் மற்றும் காவல்துறையினரின் உதவிகளோடு தனது தாயைக் கண்டுபிடித்துள்ளார் லி ஜிங்வேய்.

'எனது குடும்பத்துடன் மீண்டும் இணைவதற்கு உதவிய அனைவருக்கும் நன்றி,' என அவர் தெரிவித்துள்ளார்.

லி ஜிங்வேய் 33 ஆண்டுகளுக்கு முன்பு யுன்னான் மாநிலத்தின் தென்மேற்கு நகரமான ஜாடோங் அருகே கடத்தப்பட்டார்.  பின்னர், அங்கிருந்து 1,800 கி.மீ தொலைவில் உள்ள ஒரு குடும்பத்திற்கு விற்கப்பட்டார்.

இப்போது தெற்கு சீனாவில் உள்ள குவாங்டாங் மாநிலத்தில் வசிக்கும் அவர், அவரது வளர்ப்பு பெற்றோரிடம் கேட்டதிலோ, அவரது பிறப்பு குறித்து டிஎன்ஏ தரவுகளை ஆராய்ந்ததிலோ எந்த வெற்றியும் அடையவில்லை. எனவே அவர் இணையத்தை நாடினார்.

'நான் எனது வீட்டை கண்டுபிடிக்கும் ஒரு குழந்தை. 33 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு நான்கு அகவை இருந்தபோது, ஒரு பக்கத்து வீட்டுக்காரர் என்னை ஹெனானுக்கு அழைத்துச் சென்றார்,' என்று அவர்  ஒரு காணொளியில் கூறியுள்ளார்.  இது ஆயிரக் கணக்கான முறை பகிரப்பட்டது.

'இது நான் நினைவுகூர்ந்து வரைந்த எனது வீடு இருக்கும் பகுதியின் வரைபடம்', என்று கூறினார். அவர் கிராமத்தின் தோராயமான வரைபடத்தை கையில் பிடித்திருந்தார். அதில் பள்ளி என்று அவர் நம்பிய கட்டடம், மூங்கில் காடு மற்றும் ஒரு சிறிய குளம் போன்றவை இருந்தன. 

ஒரு வழியாக அவரின் தேடல் அவருக்கு வெற்றியை ஈட்டித் தந்துள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,116.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.