Show all

தாலிபான்கள் அறிவிப்பு! இனி ஆப்கானிஸ்தான் தனித்துவம் மீட்ட இறையாண்மை கொண்ட நாடு

ஆப்கானிஸ்தான் இனி தனித்துவமான மற்றும் இறையாண்மை கொண்ட நாடு என்று தாலிபான்கள் அறிவித்துள்ளனர். தாலிபான்கள் பழமைவாதத்தைத் திருந்திய பதிப்பாக முன்னெடுப்பார்களா?  ஆப்கானிஸ்தானத்தை மக்களுக்கான மண்ணாக நிறுவுவார்களா? பொறுத்திருந்து பார்ப்போம். 

16,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: இருபது ஆண்டுகால ஆக்கிரமிப்புக்குப் பிறகு அமெரிக்க துருப்புக்கள் வெளியேறியன. அவர்கள் வெளியேறுவதை வரலாற்று தருணம் என்று தாலிபான்கள் விவரித்துள்ளனர்.

கடைசி அமெரிக்க வீரர்கள் நாட்டை விட்டு வெளியேறிய நிலையில், நேற்று காபூலின் விமான நிலையத்தை தாலிபான்கள் பொறுப்பேற்றனர். 

அமெரிக்க படைத்துறை இறுதி விமானம் வெளியேறியதை அடுத்து துப்பாக்கிக் குண்டுகள் முழங்க, வானவேடிக்கையால் காபூல் இரவில் வானத்தை ஒளிரச் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் தாலிபான்கள். 

தாலிபான் அமைப்பினர் தற்போது ஆப்கானிஸ்தானை முழுமையாக கட்டுப்பாட்டில் எடுத்துள்ளனர். அமெரிக்கா உட்பட வெளிநாட்டுப் படைத்துறைகள் அனைத்தும் முந்தா நாளோடு வெளியேறியுள்ள நிலையில், தலைநகர் காபூலில் அமைந்துள்ள பன்னாட்டு விமானநிலையத்தைக் கைப்பற்றி ஆப்கானிஸ்தானைத் தங்களது முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். பழமைவாதத்தை மட்டுமே முன்னிறுத்திய கடந்த கால தாலிபான் ஆட்சியின் கொடூரம், தற்போது மக்களை அச்சத்தின் பிடியில் வைத்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் கடந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளில் இருந்து இருபது ஆண்டுகள் வரை நடைபெற்ற தாலிபான்கள் ஆட்சியின் போது, இஸ்லாமிய சரியா சட்டத்தின் பழமைவாத பதிப்பை நாடு முழுவதும் கொடூரமாக நடைமுறைப்படுத்தி இருந்தனர் தாலிபான்கள். அதன்படி பெண்ணுரிமை முற்றிலும் பறிக்கப்பட்டது, கருத்து தனித்துவம் நசுக்கப்பட்டது. இந்த ஆட்சியின் போது படித்த பல அறிவாளிகள், தாலிபான்களின் கோட்பாடுகளுக்கு எதிராக இருந்ததால் தூக்கிலிடப்பட்டனர் அல்லது சுட்டு கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சி தாலிபான்கள் வசம் சென்றிருப்பதை அந்நாட்டு மக்களால் செரிமானித்துக் கொள்ள முடியவில்லை. இதனிடையே ஆப்கானிஸ்தானைத் தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிகழ்வு, இயல்அறிவு ஆராய்ச்சி துறைக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் என்று இயல்அறிவு இதழான நேச்சர் கூறி இருக்கிறது. காபூலில் உள்ள கடேப் பல்கலைக்கழகத்தின் பொது நலங்கு இயல்அறிவரான அதாவுல்லா அஹ்மத், நேச்சர் இதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில், கடந்த 20 ஆண்டுகளில் நாங்கள் செய்த சாதனைகள் அனைத்தும் தற்போது பெரும் ஆபத்தில் சிக்கி உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா தலைமையிலான கூட்டணி மற்றும் பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு தேர்வான அந்நாட்டின் புதிய அரசு, உலக வங்கி, பன்னாட்டு மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனம் மற்றும் பிற நிறுவனங்கள் மூலம் அங்கிருந்த பல பல்கலைக்கழகங்கள் மீண்டும் உயிர்பெற்றன. ஆப்கானிஸ்தான் ஆட்சி கட்டிலில் இருந்து தலிபான்கள் அகற்றப்பட்ட பிறகு, ஆப்கானிஸ்தானின் உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. ஏராளமான பெண்கள் வேலை செய்ய வீட்டை விட்டு வெளியே வந்தனர். என்றெல்லாம் சொல்லப்பட்டாலும், அந்நாட்டு மக்களாட்சி வெறுமனே நிருவாக ஆட்சியாகவும் அதிகாரம் அமெரிக்காவிடம் இருந்த காரணம் பற்றியே இருபது ஆண்டுகளுக்கு பிறகும் மீண்டும் அந்த மண்ணில் பழமைவாத தாலிபான்கள் துளிர்விட முடிந்திருக்கிறது என்பதே உண்மை. 

இதனிடையே மீண்டும் தாலிபான்கள் வசம் நாடு சென்றுள்ளதால் ஆப்கானிஸ்தான் அரசிற்கான பில்லியன் கணக்கான டாலர் வெளிநாட்டு நிதி, அமெரிக்க பெடரல் கட்டுப்பாட்டு வங்கி வைத்திருக்கும் சொத்துக்கள் மற்றும் பன்னாட்டு நாணய நிதியத்தின் கடன் உள்ளிட்டவை முடக்கப்பட்டுள்ளன. 

இந்த நிதி எப்போது வெளியிடப்படும், ஒருவேளை நிதி விடுவிக்கப்படாவிட்டால் அது ஆப்கானில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை எவ்வாறு பாதிக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ஆனால் பல ஆராய்ச்சியாளர்களுக்குச் சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு மைய இயல்அறிவர்களுடன் இணைந்து பணியாற்றிய காபூல் பாலிடெக்னிக் பல்கலைக்கழகத்தின் நீர் மேலாண்மை நிபுணர் முகமது அசீம் கூறுகையில், ஆப்கானிஸ்தானில் இருக்கும் அறிஞர்களின் எதிர்காலம் இனி இருண்டு விடும் என்று கவலை தெரிவித்துள்ளார். தாலிபான்கள் தங்களது முந்தைய ஆட்சியில் செய்தது போல் பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க வாய்ப்பில்லை என்றும் குறிப்பிட்டார். 

தாலிபான்கள் பழமைவாதத்தைத் திருந்திய பதிப்பாக முன்னெடுப்பார்களா?  ஆப்கானிஸ்தானத்தை மக்களுக்கான மண்ணாக நிறுவுவார்களா? பொறுத்திருந்து பார்ப்போம். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.