Show all

அதானிக்கு ஆஸ்திரேலியாவில் அல்லல்பாடு!

தங்கள் வாழ்வாதாரத்தைக் கெடுக்கும், அதானி முன்னெடுக்கும், கார்மைக்கேல் நிலக்கரி சுரங்கத்திட்டத்துக்குத் தடைவிதிக்க வேண்டும் எனக் கோரி ஆஸ்திரேலியாவின் தொல்குடி மக்கள் போராடி வருகின்றனர்.

22,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: ஆஸ்திரேலியாவில் அதானிக்குச் சொந்தமான கார்மைக்கேல் நிலக்கரி சுரங்கத்தை எதிர்த்து அந்நாட்டின் தொல்குடி மக்கள் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். தங்கள் வாழ்வாதாரத்தைக் கெடுக்கும் இந்த மோசமான திட்டத்துக்குத் தடைவிதிக்க வேண்டும் எனக் கோரி வருகின்றனர். 

பழங்குடி மக்களின் இந்தப் போராட்டத்தால் கார்மைக்கேல் நிலக்கரி சுரங்க திட்டத்திற்கு முதலீடு செய்ய முன்வந்த பல்வேறு வங்கிகள், நிதி நிறுவனங்களும் பின்வாங்கிக்கொண்டன. இந்நிலையில், அதானி திட்டத்துக்கு எதிராகப் போராடும் பழங்குடி மக்களை நிலக்கரி சுரங்கப்பகுதியிலிருந்து வெளியேற்ற மாட்டோம் என ஆஸ்திரேலிய காவல்துறை அதிரடியாக அறிவித்திருக்கிறது.

பதினோர் ஆண்டுகளுக்கு முன்பு, ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்திலுள்ள கலீலி ஆற்றுப்படுகையில் மிகப்பெரிய நிலக்கரி சுரங்கம் தோண்டும் பணிக்கான ஒப்பந்தத்தில் இந்தியாவின் அதானி குழுமம் கையெழுத்திட்டது. இந்தத் திட்டம், ஆண்டுக்கு 10 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்யும் உலகின் மிகப்பெரிய நிலக்கரி உற்பத்தித் திட்டம் என்றும், இதனால் 10,000 ஆஸ்திரேலிய குடிமக்களுக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்படும் எனவும் திட்டம் குறித்து அதானி குழுமத்தால் கருத்துரைக்கப்பட்டது.

ஆஸ்திரேலிய ஆளுங்கட்சி அரசாங்கம், குயின்ஸ்லாந்து மாநில அரசாங்கம் என அனைத்து அரசு சார் துறைகளிடமும் அதானி குழுமத்துக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதால் திட்டத்துக்கான ஒப்பந்தம் அதானிக்கு எளிதில் கிடைத்தது. மேலும் சுற்றுச்சூழல் அனுமதியும் எளிதாகவே கிடைத்தது. இனி, சுரங்கம் தோண்டுவதும் தொடர்வண்டிப்பாதை அமைப்பதும்தான் முதன்மை நோக்கம் என்று கருதிய அதானி குழுமத்துக்கு, குயின்ஸ்லாந்து பழங்குடி மக்களின் போராட்டம் முதல் அடியாக வந்து விழுந்தது,

அதானி நிலக்கரி சுரங்கம் அமைக்கும் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் வாழும் இருபெரும் தொல்குடி மக்கள்தாம் வாங்கன், ஜகலிங்கோ இனக்குழுவினர். இவர்களுக்கு குயின்ஸ்லாந்து பகுதி மட்டுமே ஒற்றை வாழ்விடமாக இருக்கிறது. அங்கிருக்கும் சுமார் 2,47,000 ச.கி.மீட்டர் பரப்பிலான கலிலீ ஆற்றுப்படுகைக்கு அடியில் மிகப்பெரிய நிலக்கரி கையிருப்பு உள்ளது. இவற்றை வெட்டி எடுப்பதன் மூலம் நிலத்தடிநீர் தட்டுப்பாடு, காற்றுமாசுபாடு போன்ற சூழலியல் சீர்கேடுகள் ஏற்படுவதோடு தங்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் எனக்கூறி அதானியின் நிலக்கரி திட்டத்தை எதிர்த்து போராடத்தொடங்கினர்.

பல இயல்அறிவர்கள், அதானியின் சுரங்கம் செயல்பட ஆண்டுக்கு 12 பில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படும் என்றும், அப்படி செயல்பட்டால் சுமார் 297 பில்லியன் லிட்டர் நிலத்தடி நீர் இருப்பு முற்றிலும் இல்லாமல் போகும் என எச்சரிக்கை விடுத்தனர். இதுமட்டுமல்லாமல், தி கிரேட் பேரியர் ரீப் கடற்பகுதி வழியாக ராட்சத கப்பல்களில் டன் கணக்கில் நிலக்கரிகளை ஏற்றிச்சென்றால் அங்கிருக்கும் மிகப்பெரிய பவளப்பாறைத் தொகுதிக்கும் பெருமளவு சேதம் உண்டாகும் என சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களும் போராட்டக்களத்தில் குதித்தனர். 

தொடக்கத்தில் அதானியின் திட்டத்துக்கு ஆஸ்திரேலியாவின் முதன்மையான வங்கிகள் நிதியுதவி வழங்க முன்வந்தன. பின்னர் மக்களின் போரட்டத்தால் அவை பின்வாங்கிக்கொண்டன. அதேபோல் வெளிநாட்டு வங்கிகளும், இந்தத் திட்டத்தில் பெரிய அளவில் பொருளாத சாத்தியக்கூறுகள் இல்லை என நிதியுதவி வழங்கும் முடிவை திரும்பப்பெற்றுக்கொண்டன. பன்னாட்டு வங்கிகள், ஆஸ்திரேலிய வங்கிகள், பல்வேறு பெரிய நிதி நிறுவனங்கள் என பல்வேறு நிறுவனங்கள் அதானி திட்டத்துக்கு நிதி வழங்க மறுத்துள்ளன.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,030.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.