Show all

விடிந்தால் பிறக்கவிருக்கிறது 5124வது தமிழ்ப் புத்தாண்டு! எப்படிக் கொண்டாடுவது!

சித்திரையில் புத்தாண்டையும், ஆடியில் ஆடிப் பெருக்கு விழாவையும், கார்த்திகையில், விளக்குத் திருவிழாவையும், தையில் பொங்கல் திருவிழாவையும் இயற்கை காரணம் பற்றி தமிழர் கொண்டாடி வருகின்றனர். விடிந்தால் பிறக்கவிருக்கிறது 5124வது தமிழ்ப் புத்தாண்டு. மௌவல் படிப்பாளர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

30,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழர் தொடர்ஆண்டுக் கணக்குப் படி 5124 தொடர்ஆண்டு நாளை பிறக்கிறது. நாளை பிறக்கவிருக்கும் தமிழ்ப் புத்தாண்டை வரவேற்று, எப்படிக் கொண்டாடுவது?

சமுதாயம் விழாமல் இருப்பதற்கு விழா என்று நம் தமிழ் முன்னோர் பல விழாக்களைக் கட்டமைத்தார்கள். தமிழர் விழாக்களுக்கு, இயற்கைவளம், குடும்ப மகிழ்ச்சி, சமூக ஒற்றுமை, வணிகம், ஆகிய காரணங்கள் முதன்மையானவை. 

சித்திரையில் புத்தாண்டையும், ஆடியில் ஆடிப் பெருக்கு விழாவையும், கார்த்திகையில், விளக்குத் திருவிழாவையும், தையில் பொங்கல் திருவிழாவையும் இயற்கை காரணம் பற்றி தமிழர் கொண்டாடி வருகின்றனர். 

தமிழர் நாள் தொடக்கம்- காலை கதிரவன் உதயம்.
ஆரியர் நாள் தொடக்கம்- நண்பகல்.
ஐரோப்பியர் நாள் தொடக்கம்- நள்ளிரவு.

இருளுக்கும் ஒளிக்கும் மையப்பகுதி கதிரவன் உதயம். பழந்தமிழர் 'இருவேறு உலகத்தியற்கை' என்று கண்டுணர்ந்தவர்கள். அதன் பொருட்டே தமிழர் இருப்புக்கும்(ஒளி) இல்லாநிலை(இருள்)க்கும் நடுவமான ஞாயிற்று உதயத்தை தொடக்கமாகக் கொண்டனர்.

ஆரியர் இருப்பை போற்றிக் கொள்பவர் அதன் பொருட்டு அவர்கள் நண்பகலைத் தொடக்கமாகவும், 

இல்லாநிலையிலிருந்து இருப்புநிலை தோன்றியதான கருத்தியல் அடிப்படையில் ஐரோப்பியர் நள்ளிரவை தொடக்கமாகக் கொண்டது இயல்பாக பொருந்திவிட்ட அடிப்படையே.

தமிழர் நாள் தொடக்கமாக, இருளுக்கும் ஒளிக்கும் நடுவமான காலை நேரத்தை நாள் தொடக்கமாக கொண்டது போலவே ஆண்டு தொடக்கத்திற்கும், பின்பனி முடிந்து வெயிலின் தொடக்க காலமான இளவேனிற் காலம் தொடங்கும் சிததிரையை ஆண்டு தொடக்கமாகக் கொண்டனர். 

தமிழ்ப் புத்தாண்டு தமிழர் புதிய ஆண்டு பிறப்பதைக் கொண்டாடும் விழாவாகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர்.

ஆரியர் நுழைவிற்கு முந்தைய பழந்தமிழர் இலக்கியமான நெடுநல்வாடையில் மேழமே (சித்திரை) முதல் ஓரை என்ற தமிழர் புத்தாண்டுக்கான குறிப்பு காணப்படுகிறது. 

சித்திரை முதல் நாளில் தான் வழக்கமாக வேங்கை மரம் பூக்கும். மலைபடுகடாம் 'தலைநாள் பூத்த பொன் இணர் வேங்கை' என்றும், பழமொழி நானூறு 'கணிவேங்கை நன்னாளே நாடி மலர்தலால்' என்றும் பாடுவதால் இளவேனில் தொடக்க சித்திரை புத்தாண்டாய் கொண்டாடப் பட்டது என அறியலாம்.

இலங்கையில் சிங்களவருக்கு தனி ஆண்டுக் கணக்கு இல்லாததால், தமிழரின் சித்திரை ஒன்றையே அவர்களும் புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள்.  

போகியை போல, புத்தாண்டுக்கு முந்தைய நாட்களை வீடு வாயிற்பகுதியை தூய்மை செய்வதிலும், ஒப்பனை செய்வதிலும் தமிழர் செலவளிப்பர். மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள், வெற்றிலை, பாக்கு, நகைகள், நெல் முதலான விளை பொருட்களை வைத்து, அதை புத்தாண்டு அதிகாலையில் காண்பது நன்னிமித்தமாக தமிழ்மக்களால் நீண்ட நெடுங்காலமாகக் கருதப்பட்டு வருகின்றது. 

புத்தாண்டன்று அதிகாலையில் நீராடி கோலமிட்டு, புத்தாடை அணிந்து, கோயிலுக்குச் சென்று வழிபடுவர். மாலை வேளையில் உறவினர் வீடுகளுக்குச் செல்வதும், பலகாரங்களை பகிர்ந்துண்பதும் நிகழும். 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,217.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.