Show all

எகிப்து சினாய் பகுதி மசூதி குண்டுவெடிப்பில் 235 பேர் பலி: 120 பேர் படுகாயம்

09,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: எகிப்தின் சினாய் பகுதியில் உள்ள மசூதியில் நேற்று சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 235 பேர் உயிரிழந்தனர். 120 பேர் படுகாயம் அடைந்தனர்.

எகிப்தின் சினாய் பகுதியில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. அங்கு பாதுகாப்பு படையினருக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் இடையே அடிக்கடி சண்டை நடைபெற்று வருகிறது. பாதுகாப்புப் படையினருக்கு ஆதரவாக உள்ள பொது மக்கள் மீதும் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சினாய் பகுதியின் பிர் அல்-அபெத் நகரில் உள்ள மசூதியில் நேற்று தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது மசூதிக்குள் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் பலர் உயிரிழந்தனர். லேசான காயமடைந்து வெளியே ஓடி வந்தவர்களை மசூதியை சூழ்ந்திருந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதல்களில் ஒட்டுமொத்தமாக 235 பேர் உயிரிழந்தனர். 120-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

பாதுகாப்பு படையினருக்கு ஆதரவு அளித்ததற்காக அப்பாவி மக்களை குறிவைத்து ஐ.எஸ்.தீவிரவாதிகள் கொடூர தாக்குதலை நடத்தியுள்ளனர்

என்று பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சம்பவ பகுதியில் அவசர நிலை அமல் செய்யப்பட்டுள்ளது. 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று எகிப்து அரசு அறிவித்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு எகிப்து அதிபர் அப்துல் பதா அல்-சிசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மூத்த அதிகாரிகளுடன் அவர் கெய்ரோவில் அவசர ஆலோசனை நடத்தினார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,617

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.