Show all

கூகுல் ஆட்டோமாடிக் கார் விபத்தில் சிக்கியது மூவர் காயம்

கூகுளின் ஆளில்லாமல் செயல்படும் தானியங்கி கார் அமெரிக்காவில் விபத்தில் சிக்கியதில் மூன்று பேர் காயமடைந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.கார் ஆட்டோ மொபைல்தான் என்றாலும், அதனை இயக்க ஓட்டுநர் தேவை. ஆனால், கூகுள் நிறுவனம் தயாரித்துள்ள புதிய காரை இயக்க ஓட்டுநர் தேவையில்லை. மின் சக்தியில் இயங்கும் இந்தக் கார் கூகுள் மேப் வழிகாட்டுதலின் படி பயணம் செய்கிறது. செல்லும் வழியில் எதன் மீதும் மோதி விபத்து ஏற்படாமல் தடுக்க நவீன ரேடாரும், லேசர் சென்சாரும் இந்த காரில் உள்ளன.

மணிக்கு சுமார் 40 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே செல்ல முடியும். சோதனை அடிப்படையில் 25 கார்கள் மட்டுமே தற்போது தயாரிக்கப்பட்டுள்ளன.இந்தக் காரைப் போக்குவரத்துச் சாலைகளில் சோதிப்பதற்கு அமெரிக்காவின் கலிபோர்னியா, நிவாடா ஆகிய மாகாணங்கள் மட்டுமே சட்ட ஒப்புதலைத் தந்துள்ளன.இந்நிலையில், இம்மாதம் ஒன்றாம் தேதி சான்பிரான்சிஸ்கோ நகரின் அருகேயுள்ள மவுண்டன் வியூ பகுதியில் ஒரு கூகுள் கார் விபத்தில் சிக்கியதில் அதில் பயணித்த மூன்று பேர் காயமடைந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

சுமார் 17 மைல் வேகத்தில் வந்த இன்னொரு கார் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இதில், கூகுள் காரில் பயணித்த 3 தொழிலாளர்கள் காயமடைந்ததாகவும், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றதாகவும் கூகுள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும், இதுவரை கூகுள் கார்கள் 14 முறை விபத்தில் சிக்கியுள்ளதாகவும், ஆனால் அதில் பயணம் செய்தவர்களுக்கு காயம் ஏற்பட்டது இது தான் முதல்முறை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.