Show all

பெரிய வெற்றி காத்திருக்கு சிவா

காவிரி பாயும் மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்டு இறந்த, தற்கொலை செய்து கொண்ட உழவர்கள் 125 பேரை நேரில் அழைத்து, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ50 ஆயிரம் உதவித் தொகை வழங்குகிறார் தனுஷ். இது முதல் கட்டம்தான். அடுத்த கட்டமாக மிச்சமுள்ள குடும்பங்களுக்கும் உதவித் தொகை வழங்குகிறார்.

தமிழ்த் திரையுலகில் இதுவரை விஷால் போன்றவர்கள் உழவர்களுக்கு சின்னச் சின்னதாய் உதவி வந்தாலும், இந்த அளவுக்கு பாதிக்கப்பட்ட உழவர்களின் குடும்பங்களைத் தேடிப் பிடித்து உதவி செய்தவர் யாரும் இல்லை. அந்த வகையில் தனுஷ் செய்திருப்பது மிகப் பெரிய உதவி.

இதற்குக் காரணமாக அமைந்தது ராஜீவ் காந்தி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான கொலை விளையும் நிலம் ஆவணப்படம். இந்தப் படத்தை இயக்குநர் சுப்பிரமணிய சிவா தனுஷிடம் காட்ட, அதில் கலங்கிப் போன தனுஷ், பாதிக்கப்பட்ட அத்தனை உழவர்கள் குடும்பத்துக்கும் ஏதாவது செய்தே ஆக வேண்டும் என முடிவெடுத்து களமிறங்கினாராம். அவருக்கு சுப்பிரமணிய சிவாதான் முழுத் தகவல்களையும் திரட்டிக் கொடுத்துள்ளார். யார் மூலமாகவும் கொடுக்காமல், நேரில் ஒவ்வொரு குடும்பத்தையும் வரவழைத்துக் கொடுக்க வேண்டும் என விரும்பிய தனுஷ், இன்று முதல் கட்டமாக 125 குடும்பங்களை சென்னைக்கு வரவழைத்துள்ளார்.

ஆனால் இந்தத் தகவல் சம்பந்தப்பட்ட குடும்பங்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஊடகங்களுக்கும் இதுகுறித்து தனுஷ் எதுவும் தெரிவிக்கவில்லை.

பாதிக்கப்பட்ட உழவர்கள் பற்றி தகவல் திரட்டும் பணியில் இருந்ததால் சுப்பிரமணிய சிவாவால், இயக்குநர் சங்கத் தேர்தலில் கவனம் செலுத்த முடியவில்லை. வெற்றியைப் பறி கொடுத்துவிட்டார். ஆனாலும் அதுகுறித்து கவலைப்படாமல், உழவர்களுக்கு இன்று உதவி வழங்கும் பணியை ஒருங்கிணைத்து வருகிறார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.