Show all

பதவிக்காக மோடி அரசிடம் மண்டியிட்டு கிடக்கும் தமிழக ஆட்சியாளர்கள்

சென்னை ஐஐடி மாணவர் சுராஜ் கொடூரமாக தாக்கப்பட்ட விவகாரத்தில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவ அமைப்பின் மீது கண்டனம் கூட தெரிவிக்க துணிவில்லாத முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி உள்ளார் என்று மக்கள் கொந்தளிக்கிறார்கள்.

     அமைதியான நிகழ்ச்சியை நடத்திய திருமுருகன் காந்தி மீது பிரயோகிக்கப்பட்ட குண்டர் சட்டத்தை வெறித் தாக்குதல் நடத்திய காட்டுமிராண்டிக் கூட்டத்தினர் மீது தமிழக அரசு பிரயோகிக்குமா என்ற கேள்வியும் வலுத்து வருகிறது. இறைச்சிக்காக மாடுகள், எருமை, ஒட்டகம், கன்றுக்குட்டி ஆகியவற்றை கொல்லக் கூடாது என்று மோடி அரசு கடந்த வெள்ளிக்கிழமை அன்று சட்டம் கொண்டு வந்தது. இதற்கு நாடே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. இந்தச் சட்டத்தை திரும்ப பெறுமாறு தமிழக எதிர்க்கட்சிகள், புதுவை, கேரள ஆளும் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இன்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் தமிழகத்தில் போராட்டம் நடைபெறவுள்ளது.

     இந்த நிலையில் சென்னை ஐஐடி வளாகத்தில் மாட்டிறைச்சி உண்ணும் திருவிழா நடத்தப்பட்டது. இதில், சுமார் 80க்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் மாட்டிறைச்சி உணவு வகைகளை உணவகத்திலிருந்து வாங்கி வந்து வளாகத்தின் உள்ளேயே இணைந்து சாப்பிட்டனர்.

     இதைப் பொறுக்க முடியாத பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவ அமைப்பின் கும்பல், மாட்டிறைச்சித் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்திருந்த ஆய்வு மாணவரான சூரஜ் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியது.

     இந்தத் தாக்குதலில் சூரஜின் வலது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தாக்குதலுக்கு ஆளான மாணவர் சூரஜ் சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

     சங் பரிவார மாணவர் அமைப்பின் கொடூரமான தாக்குதலுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். மேலும் மாணவர் அமைப்பின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

     அமைதியான முறையில் ஈழத்தமிழர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்திய திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தை பிரயோகித்து தமிழர்களை அதிர வைத்தது எடப்பாடி அரசு.

     ஆனால் தற்போது சுராஜைத் தாக்கிய கொலை வெறி மாணவர்கள் விவகாரத்தில் வாயை மூடிக் கொண்டுள்ளது. இவர்கள் மீது குண்டாஸ் பாயுமா என்று மக்கள் கேட்கின்றனர்.        தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்தத்; தாக்குதல் சம்பவம் ஏதோ வேற்று கிரகத்தில் நடந்தது போல் வாய்மூடி அமைதியாக உள்ளார்.

     தாக்குதல் சம்பவம் குறித்து பல்வேறு அமைப்பினர் போராட்டங்களையும் தொடங்கியுள்ளனர். 4 ஆண்டுகள் ஆட்சி நடத்த மோடி அரசை பகைத்துக் கொள்ளக் கூடாது என்ற முடிவில் அதிமுக அரசு தெளிவாக உள்ளது. எனவேதான் அமைதியாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.  

     விவசாயிகள் போராட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம், மாட்டிறைச்சிக்கான தடை உள்ளிட்ட விவகாரங்களில் மோடி அரசு கிழித்த கோட்டை தாண்டாமல் தமிழக அரசு வேடிக்கை மட்டுமே பார்த்து வருகிறது. இதுவே செயலலிதா இருந்திருந்தால் இதுபோல் நடந்திருக்குமா என்று பேசுகிறார்கள் மக்கள்.

     பணம், பதவிக்காக மோடி அரசிடம் மண்டியிட்டு கிடக்கும் தமிழக ஆட்சியாளர்களை மக்கள் காறி உமிழ்கின்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.