Show all

பாஜகவால் இரட்டை இலை கிடைக்கும்; வெற்றி கிடைக்குமா, பழனி- பன்னீர்

04,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இராதகிருட்டினன் நகர் இடைத்தேர்தல் மார்கழிக்குள் (டிசம்பர்) வர இருப்பதால், அதிமுகவின் பழனி- பன்னீர் அணிக்கு இரட்டை இலையே இலக்காக உள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்புக்கே இரட்டை இலை அளிக்க வேண்டும் என பா.ஜ.க முன்னணித் தலைவர்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.

இதனால் தினகரன் தரப்பு கொதிப்பில் இருக்கிறது என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில். டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையர் அலுவலகத்தில், இரட்டை இலை சின்னம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான இறுதி விசாரணை நடந்து வருகிறது.

இதில், தினகரன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அஸ்வினி குமார் அணியமாகி வருகிறார். விசாரணையின்போது, ‘எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தரப்பில் 13,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119 க்கு (29.09.2017) முன்பாகத் தாக்கல்செய்யப்பட்ட ஆவணங்களை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும். சின்னம் தொடர்பாக எதிர்த்தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் குளறுபடிகள் உள்ளன. அவற்றையெல்லாம் நாங்கள் ஆதாரபூர்வமாக நிரூபிக்கத் தயார். நிர்வாகிகளைக் கட்டாயப்படுத்தி, கையெழுத்திடச் செய்துள்ளனர். அவர்கள் தரப்பில் தாக்கல் செய்த ஆவணங்களின் உண்மைத்தன்மையை சோதித்துப் பார்க்க கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும்என தினகரன் தரப்பில் கருத்து முன்வைக்கப்பட்டது.

இதற்குப் பதில் அளித்த தேர்தல் ஆணைய அதிகாரிகள், ‘பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்த யாரையும் நாங்கள் நேரில் அழைத்து விசாரிக்க முடியாது. எழுத்துப்பூர்வமாக உங்கள் தரப்பு வாதங்களைத் தாக்கல்செய்ய வேண்டும்எனக் கூறி தினகரன் தரப்பின் கோரிக்கையை நிராகரித்துவிட்டனர். நாளை மறுநாள் மூன்றாம் கட்ட விசாரணை நடைபெற உள்ளது.

டெல்லி தலைவர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க நிர்வாகி ஒருவர், ‘சின்னத்தை முடக்கி வைப்பதால் எந்தப் பலனும் இல்லை. எடப்பாடி பழனிசாமி-பன்னீர்செல்வத்திடம் சின்னத்தை ஒப்படைப்பதே நல்லது. அப்படி கொடுக்காவிட்டால், சசிகலா தரப்பு வலுப்பெறும். அவர்கள் வலுவடைந்தால் தி.மு.க, காங்கிரஸ் தரப்பிடம்தான் சரணடைவார்கள். தற்போதுள்ள சூழலில், எடப்பாடி பழனிசாமி-பன்னீர்செல்வம் அணி, நடுவண் அரசுடன் சுமூக உறவில் இருக்கிறது. நமக்கு எதிராக அகில இந்திய அளவில் கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் தி.மு.க ஈடுபட்டு வருகிறது. அவர்கள் ஒருபோதும் நம்மிடம் வந்து சேரப் போவதில்லை. இராதகிருட்டினன் நகர் இடைத்தேர்தலின்போது எடப்பாடி பழனிசாமியிடம் இரட்டை இலை சின்னம் இருப்பதே நல்லது. அதனைத் தொடர்ந்து வரும் தேர்தல்களில் நம்முடன் இணக்கமாக இருப்பதையே எடப்பாடி விரும்புவார். தினகரன் தரப்பை வளர்த்து விடுவது நமக்குத்தான் ஆபத்தாக முடியும்எனப் பேசியிருக்கிறார். ஆக எடப்பாடி பழனிசாமியின் கைகளுக்கே இரட்டை இலை வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

-ஆனால் தமிழக மக்களிடம் ஒரு ஓட்டு கூட வாங்க முடியாத பாஜகவுடன் கூட்டு வைத்து இராதகிருட்டினன் நகர் தேர்தலில், எடப்பாடி பழனிசாமி-பன்னீர்செல்வம் அணியால் வெற்றிக் கனியைப் பறிக்க முடியுமா?

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.