Show all

இன்று தமிழ்நாடு நாள்! கீச்சுவில் தலைப்பாகி வருகிறது; தமிழகஅரசு சிறப்பான கொண்டாட்டத்தை முன்னெடுத்துள்ளது

தமிழக அரசு சார்பில் முதல் முறையாக தமிழ்நாடு நாள் கொண்டாட்டம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கீச்சுவில் ‘தமிழ்நாடுநாள்’ தமிழக அளவில் தலைப்பாகி வருகிறது. இந்திய அளவிலும், உலக அளவிலும் தலைப்பாக மாறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

15,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழக அரசு சார்பில் முதல் முறையாக தமிழ்நாடு நாள் இன்று கொண்டாடப் படுகிறது. இன்றைய நாளை தமிழ்நாடு நாளாக பல்வேறு தமிழ் அமைப்புகளும், தமிழக அரசும் கொண்டாட ஆயத்தமாகி உள்ளன.

தமிழ்த் தொடராண்டு-5058 ஆங்கில ஆண்டு 1956ல் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்கள், மொழிவாரி மாநிலங்களாக உருவாக்கப்பட்டு இன்றைய தமிழ்நாடு உருவான நாள்தான் நவம்பர் 1. இந்த நாளை கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் கொண்டாடி வருகின்றன. ஆனால் தமிழகத்தில் அதற்கான கொண்டாட்டங்கள் இல்லாமல் இருந்தன. 

சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்ச் சான்றோர் பேரவையால் தமிழகப் பெருவிழா என்ற நிகழ்ச்சி மிகச்சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டது. இரண்டு மூன்று ஆண்டுகள் தொடர்ந்து ஒருங்கிணைத்தது தமிழ்ச்சான்றோர் பேரவை. மேலும் தமிழ்நாடு நாள் என நவம்பர் முதல்நாளைக் கொண்டாட வேண்டும் என்று தமிழறிஞர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனை ஏற்று, இனி நவம்பர் முதல் நாளை தமிழ்நாடு நாள் விழா நாளாகக் கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்தது. 

இன்று தமிழ்நாடு நாள் விழா- தமிழக அரசால் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தலைமைச் செயலக கட்டிடம் மின்விளக்குகளால் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை முதல் மாலை வரை பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். 

மேலும் மாநிலத்தில் பல இடங்களிலும் தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்படுகிறது. மேலும் தாய் தமிழகத்துடன் கன்னியாகுமரி மாவட்டம் இணைந்த நாளும் இன்றுதான். திருவிதாங்கூர் மன்னராட்சியிலிருந்து கன்னியாகுமரியை தமிழகத்துடன் இணைக்க மிகப் பெரிய போராட்டம் நடந்தது. இதனையடுத்து தமிழகத்துடன் கன்னியாகுமரி இணைந்தது. இதனை கொண்டாடும் வகையில் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,323.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.