Show all

ரஜினியின் பாட்சா படத்தை இரசிக்கிற தமிழர்கள் ரஜினியின் இராகவேந்திரா படத்தை இரசிக்க மாட்டார்கள்

14,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகத்தில் தாமரை மலரும், என்று பேசி வந்த தமிழக பாஜகவினருக்கு, தாமரையின் விதைகளைக்கூட நாம் தூவ முடியாது என்ற அவநம்பிக்கை கூட அவர்களுக்கு இராகிநகர் தேர்தல் முடிவுக்கு பிறகு வந்திருக்கலாம்.

பாஜக நடுவண் அரசில் ஆட்சியை பிடித்ததிலிருந்து தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. இழப்பீடு, நிதி ஒதுக்கீடு, காவிரி விவகாரம் என அனைத்திலும் தமிழகத்திற்கு பாஜக மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடந்துக்கொண்டு தான் வருகிறது. இப்படி நேரடியாகவும், மறைமுகமாகவும் தமிழகம் மிரட்டப்பட்டாலும், அதைப்பற்றி கவலைப்படாத தமிழர்கள் இராகிநகர் தேர்தலில் நோட்டாவுக்கு வாக்கை அளித்து பாஜகவை புறந்தள்ளினர். தமிழர்களின் மனநிலை, பாஜகவின் நோக்கம் அடிப்படை சித்தாந்தத்திற்கு மாறுபாடாக இருப்பதே பாஜக தமிழகத்தில் கால் பதிக்க முடியாமல் போவதற்கு காரணம்.

மதத்தை வைத்து வடமாநிலத்தவர்களை பிரித்தாளும் போக்கு தமிழகத்திற்கு என்றுமே எடுபடாது. வடமாநிலத்தவர்களின் மனநிலையும், தமிழர்களின் மனநிலையும் கலாச்சாரம் சார்ந்து மட்டுமல்லாமல், மரபு சார்ந்து வித்தியாசமானது என்பது தான் அதற்கு காரணம்.

வெறுப்பு அரசியல், என்பதே பாஜகவின் பிரதான ஆயுதம். இஸ்லாமியர்கள், பாகிஸ்தான் உள்ளிட்ட வெறுப்பு அரசியலை பயன்படுத்தியும், இல்லாததை இருப்பது போல பயமுறுத்தியும் வடமாநிலத்தில் காண முடிந்த வெற்றி தமிழகத்தில் பாஜகவினருக்கு எப்போதுமே கிட்டப்போவதில்லை.

தமிழக இஸ்லாமியர்களிடம், தமிழர்கள் வழிபாட்டு அடிப்படையில் வெறுப்பை உமிழாமல் சகோதரத்துவத்துடன் பழகுவதே, இங்கு பாஜக தோல்வியடைந்ததற்கு முதல் காரணம்.

எண்ணற்ற சாதியால் பிரிந்து, அடித்துக்கொண்டும் குத்திக்கொண்டும் இருந்தாலும், எப்போதுமே தமிழர்கள் மதத்தால் பிரிவது கிடையாது. காரணம் தமிழகத்தில் ஒரு சின்ன பகுதியாக இருந்தாலும் அதில் கோயில், தேவாலயம், மசூதி ஆகியவை இருக்கும். இந்த தொடக்ககால கட்டமைப்பே தற்போதும் பழகி விட்டதால் மத அரசியலை விட சகோதரத்துவத்தையே தமிழர்கள் பெரிதும் விரும்புவது, பாஜக சித்தாந்தத்திற்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

நாட்டின் பெரும்பான்மையான மாநிலங்களிலும் பாஜக ஆட்சி தற்போது நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தில் பாஜகவிற்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட கிடைக்காதது அக்கட்சியின் தலைமைக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்துகிறது. கேரளாவும் கர்நாடகமும் கூட பாஜகவுக்கு எதிராக இருந்தாலும், தமிழகத்தில் இருக்கும் எதிர்ப்பலையை விட அங்கு குறைவு என்பது தான் நிதர்சன உண்மை.

மக்கள் தொகையில் பாதிக்கும் மேல் இஸ்லாமியர்கள் இருக்கும் உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத்தை முதல்வராக்கியவர் பாஜக தலைவர் அமித்ஷா. பாஜகவில் தெடக்கத்திலிருந்து திட்டமிட்டு கட்டம்போட்டு காய் நகர்த்துவதில் கில்லாடியாக கருதப்படுபவர் அமித்ஷா ஆவார்.

ஆனால் அவரின் எண்ணற்ற திட்டங்களும் தமிழகத்தில் பயனற்றுப் போனது அவரையே சற்று கவலையில் தான் ஆழ்த்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஒரு ஆண்டாக நடைபெறும் அரசியல் மாற்றங்களில் அமித்ஷாவின் பங்கு இருப்பது யாராலும் மறுக்க முடியாது.

பல கோடி பாஜக தொண்டர்கள் நாடு முழுவதும் இருந்தாலும், பாஜகவின் முகமாக உலகம் முழுவதும் அறியப்படுவது மோடியின் முகம் தான். ஆனால் அந்த முகம் தமிழகத்தில் எடுபடவில்லை என்பதே நிதர்சனம்.

தமிழக மக்கள், பேச்சை விட செயல்பாட்டை பெரிதும் விரும்புவதால், பேச்சை மட்டுமே பிரதானமாக கொண்ட தமிழிசை, ஹெச்.ராஜா உள்ளிட்டோரின் முகங்கள் இங்கு எடுபடவில்லை.

தமிழக பாஜகவுக்கு என்று ஒரு முகம் தேவை, அந்த முகம் தான் வாக்குகளை தீர்மானிக்கும் என்ற உண்மையை காலம் கடந்து உணர்ந்த அமித்ஷா, அதற்கான தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார். அதற்காக ரஜினி தயார் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இரஜினியின் பாட்சா படத்தை இரசிக்கிற தமிழர்கள் இரஜினியின் இராகவேந்திரா படத்தை இரசிக்க மாட்டார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,651

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.