Show all

தமிழகத்தின் அடுத்த மாமனிதர் கமல்தானா

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக கருத்தை மதிக்கிற கூட்டம்தாம் தமிழ்க் கூட்டம். ஏனென்றால் இவன் தான் உலகத்தின் முதல் அறிவாளி.

     கருத்துப் பரிமாற்றத்திற்கான மூலமுதல் கருவியான மொழியை, பல்லாயிரம் ஆண்டுகளாக முதல் இடை கடை என்று குமரிக் கண்டத்தில் தொடங்கி, கனக விசயர் தலையில் கல் சுமக்கச் செய்து இமயத்தில் கொடி நாட்டியதோடு,

‘அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்று ஆகும்

உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்

ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்’

என்று சங்கம் வைத்து, தமிழ்வளர்த்து, முத்தமிழ்க் காப்பியம் கண்ட கூட்டம்தாமே இந்தத் தமிழ்க் கூட்டம்.

     தமிழன் ஆளுமைத்திறன் காப்பியமான புறநானூற்றைப் புரட்டிப் பார்த்தால் புரியும்,

இவனை இவர் பாடியது என்று மன்னனை ஒருமையில் சுட்டி புலவனை பன்மையில் சுட்டித் தூக்கிப் பிடித்திருப்பான்.

     கருத்து ஊடகங்களிலேயே நடிப்பையும் இணைத்துக் கொண்டு விஞ்ஞான வளர்ச்சியோட வளர்ந்து வரும் நாடகத்தமிழ்- கலைத்தமிழ் திரைத்துறையை,

தமிழகத்தின் மாமனிதர் தேர்ந்தெடுப்புக்கான துறையாக தமிழ்க் கூட்டம் நிறுவியிருப்பது வரலாற்றடிப்படையாகவும் மிகச்சரியே.

     புலமையும் செழுமையும்; பண்பாடும் வரலாறும் கொண்ட, பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழர்களோடு பின்னிப் பிணைந்திருந்த இலக்கிய காப்பியங்கள் பத்துப்பாட்டு எட்டுதொகையை பின்னுக்குத் தள்ளிவிட்டு, சிறந்த நாடகப் பனுவல்களான இரண்டு தொல்கதைகள் இராமயணம் மகாபாரதத்தை மட்டுமே வைத்துக் கொண்டு-

     தமிழ்க் கூட்டம் புலவர்களுக்கு மதிப்பளித்து வைத்திருந்த இடத்தை,

ஆரியர்கள் தக்கவைத்துக் கொண்டு தமிழ் மன்னர்களை ஆட்டிப்படைத்ததானால் தானே இன்று வரை,

கட்சத் தீவை இழந்து மீனவர்களும்,

மீத்தேன் ஹைட்ரோ கார்பனால் வேளாண்பெருமக்களும், கிரிக்கெட்டால் கபடியும் சல்லிக்கட்டும் என

வரலாறு தொலைத்து அடையாளம் இழந்து துன்பங்களுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறோம்.

     திரைத்துறையில் சாதித்த அண்ணாவைத் தமிழக மீட்புக்காய் முன்னிறுத்தினோம். அவருக்குப் பின் இயல்வல்லார் நாவலரை விட கலைஞரைத்தானே தமிழ்கூட்டம் தெரிவு செய்தது. தொடர்ந்து வந்தனர் திரைத்துறை சாதனையாளர்கள் எம்ஜியார், செயலலிதா.

     திரைத்துறை சாதனையாளர் விஜய்காந்தை தமிழ்கூட்டம் அடுத்தவராக தெரிவு செய்திருந்த நிலையில் அவர் கட்சி, குடும்பத்திற்குள்ளேயே என்னவோ செய்து அந்த மாமனிதரைக் கோமாளியாக்கி விட்டார்கள்.

     இப்போதைக்கு அடுத்து ஒரு திரைத்துறையில் சாதித்த, மாமனிதர் இல்லாமல்,

தக்கவைக்கப்பட தமிழ்க் கூட்டம் முன்வைக்கும் தகுதியே இல்லாத, 

தற்காலிக, தலைமைகளால் வடபுல வஞ்சனை சூதுகளோடு காய்நகர்த்தப் பட்டுக் கொண்டிருக்கிறது.

     எடப்பாடியையும் பன்னீரையும் உருண்டு புரண்டாலும் தங்கள் மீது ஒற்றை மண்துகளையும் ஒட்டவைத்துக் கொள்ள விடப் போவதில்லை என்று தமிழ்க் கூட்டம் அணியமாகத்தான் இருக்கிறது.

     இந்த இடத்தில்தான் தமிழகத்தையே அல்லோகல்லோலப் படுத்திக் கொண்டிருக்கிற விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சி நமக்கு ஏதையோ புலப்படுத்த விரும்புவதாக தெரிந்து கொள்ள முடிகிறது.

     தமிழகத்தின் மாமனிதராக ரஜினி வருகிறார் ரஜினி வருகிறார் என்பது வெறும் எதிர்பார்ப்பாக மட்டுமே இருக்கிற நிலையில்,

     கமல் தன்னை தமிழகத்தின் மாமனிதராக அடையாளப்படுத்திக் கொள்ளும் ஆட்டத்தை தொடங்கி விட்டார் என்பதே விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் (மாமனிதர்) நிகழ்ச்சி என்று பேசிக் கொள்கிறார்கள்.

     ஒருபக்கம் 15 பேரை அடைத்து வைத்து யார் யார் எப்படி பட்டவர் என்று அடையாளப்படுத்தும் அதே வேளையில்,

     தமிழக அரசியல் தளத்தில் தங்களை மாமனிதராக நினைத்து கொண்டிருப்பவர்களை யெல்லாம் போட்டு வாங்கி

அடையாளப் படுத்திக் கொண்டிருக்கிறார் கமல்.

     ஒருபக்கம் எல்லா தொலைக் காட்சிகளையும் தலையில் துண்டு போட வைக்கும் பிக்பாஸ் அதிரடி.

     இன்னொரு பக்கம் இவருடைய மின் அஞ்சல் முகவரி இது. எலும்பு மருத்துவரா இவர்! என்றெல்லாம் அசத்தும் கமலின் அதிரடிகளில் அலறி அடித்துக் கொண்டிருக்கிறார்கள் அரசியல் தலைகள்.

     எம்ஜியார், செயலலிதாவிற்குப் பின் அசைக்க முடியாத மாமனிதராக நடுவண் அரசை கலங்கடிக்கப்பதற்கான அரசியல் நுழைவுக்கான முன்னோட்டம் தான் விஜய் தொலைக்காட்சியில் கமலின் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி என்பதே உண்மை.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.